சென்னை கலாக்ஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள்…

இன்னொரு மீ-டூ சர்ச்சை கிளம்பி இருக்கிறது. சொல்லப் போனால் இது #MeToo இல்லை #WeToo.

கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷனை சேர்ந்த ருக்மிணி தேவி கலைக் கல்லூரி மாணவிகள் பலர் இணைந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். இந்நாள் மாணவிகளுடன் முன்னாள் மாணவிகளும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். கலாக்ஷேத்ராவின் துணைப் பேராசிரியர் ஹரி பத்மன், குழுக் கலைஞர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் தொடர் பாலியல் தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. உருவக் கேலி மற்றும் சாதிப் பாகுபாடுகளை முன்னெடுத்ததாகவும் கலாக்க்ஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், நாட்டியத்துறை இயக்குனர் டாக்டர் ஜ்யோத்சனா மேனன் மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்துமே சீரியஸ் குற்றச்சாட்டுகள். ஆனால் இவற்றை கலாக்ஷேத்ரா அணுகி இருக்கும் விதம் அதை விட சீரியசானது. அந்த நிறுவனம் தாங்களே ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து தாங்களே விசாரித்து இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை எதுவும் இல்லை என்று ஃபைலை மூடி விட்டார்கள். அதாவது ‘அவங்களே பாம் வைப்பாங்களாம், அவங்களே எடுப்பாங்களாம்,’ மொமெண்ட்!

இது போதாதென்று மாநில மகளிர் கமிஷனிடம் மாணவிகள் அளித்த புகாரையும் இயக்குனர் ரேவதி திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டதாக தெரிகிறது. தேசிய மகளிர் கமிஷன் உள்ளே நுழைந்த பின்னர்தான் விஷயம் தீவிரமாகி விட்டிருக்கிறது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் துவங்கிய பின்னர் தமிழ் நாடு காவல் துறையும் இணைந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் ‘கலாக்க்ஷேத்ரா விசாரணை பாகுபாடு இன்றி நடக்கும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்,’ என்றும் முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்.

பற்பல ஆண்டுகளாக இந்தப் பாலியல் தொந்தரவுகள் அந்த நிறுவனத்தில் அரங்கேறி வருகிறது என்பது சீரியஸான ஒரு விஷயம். நான் திரும்பத் திரும்ப சொல்வது இதுதான்: கல்விக்காக, வேலைக்காக அல்லது வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதீதமானது. அவற்றை யோசித்துப் பார்க்கக் கூட ஆண்களாகிய நம்மால் முடியாது.

அதற்குக் காரணம் இந்த சமூகம் ஆண்களால், ஆண்களுக்காக கட்டமைக்கப்பட்ட ஒன்று. பெண்ணிய எழுத்தாளர் ஷ்ரண்யா பட்டசார்யா இந்தியாவை ‘A Boys Club’ என்று வர்ணிக்கிறார்.++ இந்தக் கிளப்பில் ஆண்கள் சுலபமாக சேர்ந்து இயங்கி விட முடியும். ஆனால் அங்கே கல்வியில், கேரியரில் ஓரளவுக்காகவது ஏதாவது செய்ய முயலும் பெண்கள் கொடும் ஒடுக்குமுறைகளை, பாலியல் தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மதம், கற்பு, கலாச்சாரம் போன்ற குப்பைகளை வைத்து பெரும்பாலானோர் வாயை மூடி விட முடிகிறது. அதையும் தாண்டி எதிர்ப்புக் காட்டும் பெண்கள் கொடூரமாக தண்டிக்கப்படுகிறார்கள். அதே நேரம், ஆண்கள் அவற்றை ஜாலியாக கடந்து போய் விட முடிகிறது.

அந்த அவலம் நீங்க வேண்டும். அதற்கு இந்த #MeToo போன்றவை உதவிக் கொண்டிருக்கின்றன. #MeToo துவங்கியதில் இருந்து பெண்கள் ஓரளவு துணிச்சல் கொண்டு இவற்றை எதிர்த்து நிற்க முயல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே கலாக்ஷேத்ரா அத்தியாயத்தையும் பார்க்கிறேன். வழக்கம் போல இதிலும் பாதிப்புற்ற பெண்கள் பக்கமே நிற்கிறேன். மென்மேலும் பெண்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டவும், இந்த சமூகத்தில் சம அந்தஸ்து கொண்டு இயங்கவும், இது போன்ற அத்தியாயங்கள் உதவும் என்று நம்புகிறேன்.

சர்ச்சையை ஊத்தி மூடப் பார்த்த கலாக்க்ஷேத்ரா நிறுவனத்துக்கு கடுமையான கண்டனங்கள். விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு இயங்கிய காவல் துறைக்கும் மாநில அரசுக்கும் நன்றிகள்.

-ஸ்ரீதர் சுப்பிரமணியம்