விடுதலை பாகம் 1 – விமர்சனம்

நடிப்பு: சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ், சேத்தன், ராஜீவ் மற்றும் பலர்

இயக்கம்: வெற்றி மாறன்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

இசை: இளையராஜா

தயாரிப்பு: ஆர்.எஸ்.இன்ஃபொடைன்மெண்ட் & கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா (டிஒன்)

# # #

தை, திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இசை, கலை, இயக்கம் என எல்லாமும் முழுமையடைந்த ஒரு திரை ஆக்கத்தை பார்த்து வெகு காலமாகி விட்டது.

அரசியலற்ற தலைமுறைக்கான முனைப்புகள் சுழன்றோடும் தமிழ்சினிமாவில் அரசியல் சித்தாந்தத்தையும் வரலாற்றையும் பிரசாரமாக்காமல் கதை சொல்லலினூடாக நிகழ்த்தும் அற்புதங்கள் நேரும் படம் பார்த்தும் வெகு காலமாகி விட்டது.

விடுதலை படம் இரண்டு குறைகளையும் போக்கி விட்டது.

நடிகர் சூரி தன்னை கதாபாத்திரத்துக்காக அர்ப்பணித்திருக்கிறார். சூரியின் இயல்பை சிதைக்காமலேயே அவரை தன் கதையின் நாயகனாக மாற்றியிருப்பதுதான் வெற்றிமாறனின் நிபுணத்துவம். போலவே இசை தொடக்கத்தில் பிதாமகன் படத்தை சற்று ஞாபகப்படுத்தினாலும் கதையின் போக்கு நம்மை உள்வாங்க ராஜா அழகாக இடமளித்து பின்னணி கோர்த்திருக்கிறார்.

ஆர்ப்பாட்டம் ஏதுமில்லை. இயல்பான நிகழ்வுகளுடன் கதை மெல்ல அவிழ்கிறது. மலையும் காடும் நமக்குள் கடத்தப்பட இயக்குநர் நேரம் எடுத்துக் கொள்கிறார். அது தெரியாதளவுக்கு அழகான ஒரு காதல், காட்சிகளை இணைக்கிறது. ‘லவ் டுடே’ காலத்துக்குப் பிறகும் காதலன் வாங்கிக் கொடுக்கும் வளையலை ரசிக்கும் காதலிக்கு கை தட்டும் ரசிகர்கள் ஆசுவாசம் அளிக்கின்றனர்.

0a1b

ஒளிப்பதிவு வேல்ராஜ். Children of men, சமீபத்திய Athena போன்ற படங்களின் முதல் காட்சி போல வெட்டு இல்லாமல் நீண்டு பயணிக்கும் முதல் காட்சியிலிருந்தே வேல்ராஜ் தன்னுடைய ஒப்பத்தை இடத் தொடங்குகிறார். காட்டுப் பரப்பு, மலைக்கிராமம், மலை டவுனின் சந்து பொந்துகள் என பரபரக்கும் கேமரா, காதலின்போது உடன் நடக்கும் சக பயணி போல் நிதானம் கொள்கிறது. அடக்குமுறைக்கான காட்சிகளை இயல்பற்ற கோணத்துடன் அச்சுறுத்தலுடன் தொடங்கிக் காட்டுகிறது.

காவலருக்கும் இடதுசாரிய போராளிக்குமான முரண் என்பது வெறும் கதையோ திரைக்கதையோ அல்ல, அது ஒரு சித்தாந்தம். மக்களை அரசு ஒடுக்க பயன்படுத்தும் கருவிகள்தாம் காவல்துறையும் ராணுவமும் என எழுதிய சித்தாந்தம்! அவற்றை எதிர்கொள்ள மக்களுக்கும் ஒரு கருவி வேண்டுமென யோசனையை வைத்த சித்தாந்தம்! அரசு, மக்கள் என்கிற இரு முனைகளுக்கு இடையேயான முரணியக்கத்தில் உருவாகும் புரட்சிகர அரசியல்தான் விடுதலை படத்தில் கதை ஆகியிருக்கிறது.

இந்த முரணை முன் வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. குருதிப்புனல் தொடங்கி, சமீபத்திய விராட்டப் பர்வம், ரத்தசாட்சி உட்பட நிறைய படங்கள்! பெரும்பாலானவை அரசால் ஆயுதம் ஏந்தியவனையும் சித்தாந்தத்தால் ஆயுதம் ஏந்தியவனையும் ஒன்றாக்கி பரிவு காட்டி நீலிக்கண்ணீர் விடும். சில படங்கள்தாம் அரசியலை பேசி தெள்ளிய வழியைக் காட்டும். விடுதலை அத்தகைய படம்.

‘மக்கள State ஒடுக்கும்போதும் சுரண்டும்போதும் எதிர்கட்சி போராட்டம் பண்ணா அனுமதிச்சுடனும். மக்கள் கிட்ட எதிர்கட்சிக்கு சப்போர்ட் வளர்ந்தா அப்போ எதாவது பண்ணி அதை சரி பண்ணிக்கலாம். ஆனா இந்த மாதிரி இயக்கங்களை வளர விட்டா மக்களுக்கு நம்ம மேலே நம்பிக்கை போயிடும். அவங்கள divert பண்ண எதிர்கட்சி பயன்பட்டாலும் நல்லதுதான். எது நடந்தாலும் it should happen within the ambit of the constitution’ என இதுபோன்ற களத்தை கொண்ட வேறு எந்தப் படத்திலும் அரசதிகாரி பேசும் காட்சியை நீங்கள் கண்டிருக்க முடியாது. விசாரணை படத்திலும் ‘system’ பற்றி தோலுரித்து பேசும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.

படத்தில் இரண்டு மிக சுவாரஸ்யமான விஷயங்களையும் செய்திருக்கிறார் வெற்றி. Encounter கொலைகளை glorify செய்யும் படங்கள் எடுத்த கவுதமை அழைத்து வந்து encounter-ன் நீட்சியான ஓர் ஊரை சூறையாடும் வேலையை செய்ய வைத்திருக்கிறார். இரண்டாவதாக ஜெயமோகன் யாருக்கு எதிராக கதை எழுதினாரோ அதை எடுத்து அவர்களுக்கு ஆதரவான ஒரு படத்தை ஆக்கி தந்திருக்கிறார் வெற்றி. இருவருக்கும் விபூதி சிறப்பான வகையில் அடிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக தன்னுடைய படங்களில் முக்கியமான அரசியல் வரலாற்று சம்பவங்களை வெற்றிமாறன் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுவும் கடந்த இரண்டு படங்களில் இடதுசாரி அரசியல் சம்பவங்கள்! அசுரனில் கீழவெண்மணி, இப்படத்தில் வாச்சாத்தி. அரசியல் நிலைப்பாட்டில் இன்னும் சற்று விரிவான கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார்.

தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரை நமக்கு வலதுசாரி தமிழ்தேசியர்கள் பரிச்சயப்பட்ட அளவுக்கு இடதுசாரிய தமிழ்தேசியர்கள் பரிச்சயப்படவில்லை. வலதுசாரி தமிழ்தேசியத்தின் சமீப முகம்தான் சீமான். அவரை திட்டவும் எதிர்க்கவும் அதிகம் பேசியே அவரை வளர்த்திருக்கிறோம். இடதுசாரிய தமிழ்தேசிய அரசியலின் முகமாக தோழர் திருமுருகன் காந்தி இருக்கிறார்.

இடதுசாரிய தமிழ்தேசியத்துக்கென தமிழ்நாட்டில் ஒரு பாரம்பரியம் உண்டு. தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், பெருஞ்சித்திரனார் போன்றவர்களைக் கொண்ட ஒரு பாரம்பரியம். இவர்கள் அதிகாரம் குவிக்கப்படும் வடக்குக்கும் பொருட்படுத்தப்படாத தமிழர் பகுதிக்கும் இடையே அரசவர்க்க முரணோடு கூடிய பண்பாட்டு முரண்களும் இருக்கிறதென வரையறுப்பவர்கள். அதன் வழியாக தமிழர் வாழ்வியலை மார்க்சியத்துடன் இணைப்பவர்கள். ஈழ விடுதலையையும் ஆதரிப்பவர்கள்.

சீமானை போல் குடி தேசியமோ சாதி தேசியமோ இவர்களின் செயல்திட்டங்களில் இருக்கவில்லை. சாதி, மத பேதமற்று ஆதிக்கம், சுரண்டல் மறுத்த சமத்துவ தமிழரின் இயற்கையிலான வாழ்வியலை அரசியலாக கொண்டதே இடதுசாரி தமிழ்தேசியம்.

துயரம் என்னவெனில் எல்லா இடதுசாரியங்களையும் ஆளும்வர்க்கத்துக்கு ஆதரவான வெகுஜன சிந்தனைப்போக்கு திரித்து இருட்டடிப்பு செய்வது போல இடதுசாரிய தமிழ்தேசியமும் மறைக்கப்படுகிறது. தமிழ்தேசியம் என்றாலே சீமான்தான், சாதி தேசியம்தான் என பொத்தாம்பொதுவாக பேசுகிறோம்.

இடதுசாரி தமிழ்தேசியம் தெளிவாக மறைக்கப்பட்டு தமிழ்தேசியம் என்கிற பொது வார்த்தையில் சுட்டப்பட்டு, அது சீமானின் அரசியலை குறிப்பதாக சுருக்கப்படுவது யதேச்சையானது கிடையாது.

விடுதலை படம் இடதுசாரி தமிழ்தேசியத்தை நிதானமாக தெளிவாக முன்வைக்கிறது. திரைக்கதை சுவாரஸ்யத்துக்காக ஆயுதபாணி அரசியல் குறித்த அரசாங்க விமர்சனக் குரலில் கதை தொடங்கி நகர்ந்தாலும் அந்த அரசியலுக்கான தேவையை பார்வையாளன் படத்தின் பாதி கட்டத்திலேயே வேண்டத் துவங்குகிறான். தேடத் துவங்கி விடுகிறான். வெற்றிமாறனின் வெற்றி அதுதான்.

‘விடுதலை’ என்கிற வார்த்தை தோழர் தமிழரசனின் தமிழ்நாட்டு விடுதலைப் படை என்கிற பெயரிலிருந்து எடுக்கப்பட்டதா என தெரியாது. ஆனால் ‘விடுதலை’ படம் தமிழ் அரசியல் போக்குக்குள் சாதியை மறுத்து தமிழர் அரசியலை வர்க்க அரசியலுடன் முன் வைக்கும் இடதுசாரி தமிழ்தேசியத்தை வலுவாக முன் வைத்திருக்கிறது.

அந்த அரசியலை மக்களுக்குள்ளிருந்து வெளிப்படுத்துவதிலும் வெற்றியடைந்திருக்கிறது.

RAJASANGEETHAN