கடைசி விவசாயி – விமர்சனம்

நடிப்பு: விஜய் சேதுபதி, நல்லாண்டி, யோகி பாபு மற்றும் பலர்

இயக்கம் & ஒளிப்பதிவு: மணிகண்டன்

இசை: சந்தோஷ் நாராயணன் & ரிச்சர்ட்

’காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய வித்தியாசமான வெற்றிப்படங்களை இயக்கி பாராட்டுகளையும், கவனஈர்ப்பையும் பெற்ற இயக்குனர் மணிகண்டன், தற்போது இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’.

விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் முன்வைக்கும் நோக்கத்தோடு, எவரும் செய்யாத புதுமையாக 80 வயது நல்லாண்டி என்ற கிராமத்து முதியவரை கதையின் நாயகனாக வைத்து இப்படத்தை படைத்தளித்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

உசிலம்பட்டியில் விவசாயியாக இருக்கிறார் மாயாண்டி (நல்லாண்டி) என்ற 80 வயது பெரியவர். அவரது நிலத்தைச் சுற்றியுள்ள நிலங்களெல்லாம் தண்ணீர்ப்பஞ்சத்தால் வறட்சியில் வாடிக்கிடக்க, மாயாண்டியின் கிணற்றில் மட்டும் வளமாகத் தண்ணீர் இருக்கிறது. அதை வைத்து அவர் தனது நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பிறரை எதிர்பார்க்காமல் விவசாய வேலைகள் அனைத்தையும் தானே செய்து முழுநேர விவசாயியாக வாழ்ந்து வருகிறார்.

வறட்சியால் வறண்டு கிடக்கும் பல விவசாயிகளின் நிலங்களை விலைக்கு வாங்கிக் குவிக்கும் ரியல் எஸ்டேட்காரர்கள், மாயாண்டியின் அருமையான விளைநிலத்தையும் வாங்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் பல லட்சம் ரூபாய் கொடுக்க முன்வந்தபோதிலும், தன் நிலத்தை விற்க முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறார் மாயாண்டி.

இந்நிலையில், சுமார் 15 ஆண்டுகளாக நடத்தப்படாத குலதெய்வக் கோவில் திருவிழாவை நடத்த ஊர்மக்கள் ஏற்பாடு செய்கிறார்கள். மரபுப்படி, குலதெய்வத்துக்குப் படையலிடுவதற்கென்று தனியாக நெல்மணிகளை விளைவித்துத் தருமாறு மாயாண்டியிடம் கேட்கிறார்கள். அதனை ஏற்று அவர் நெல்நாற்று பயிரிடுகிறார்.

இதனிடையே, தன்னுயிர் போல் அனைத்து ஜீவராசிகளின் உயிர்களையும் நேசிக்கும் மாயாண்டியின் விளைநிலம் அருகே மூன்று மயில்கள் இறந்துகிடக்கின்றன. இதைப் பார்த்துக் கசிந்துருகும் மாயாண்டி, இறந்துபோன மூன்று மயில்களையும் தனது நிலத்திலேயே புதைத்துவிடுகிறார்.

இதை அறிந்த ஒரு ஆசாமி, மாயாண்டி தான் மயில்களைக் கொன்று புதைத்ததாக புகார் அளிக்க, போலீஸ் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை சிறையில் அடைக்கிறது.

மாயாண்டி இந்த வழக்கிலிருந்து மீண்டாரா? குலதெய்வத்திற்குப் படையலிடுவதற்காக அவர் பயிரிட்ட நெல்நாற்று என்ன ஆனது? ஊர்த்திருவிழா நடந்ததா, இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை.

0a1q

விஜய் சேதுபதி, யோகி பாபு நீங்கலாக இப்படத்தில் வரும் ஏனைய அனைவருமே நாம் முன்பின் திரையில் பார்த்திராத, அச்சு அசலான கிராமத்து மனிதர்களே. அவர்களிலும், கதையின் நாயகன் மாயாண்டியாக வரும் 80 வயது பெரியவர் நல்லாண்டி இதில் நடித்தாரா, வாழ்ந்தாரா என்றே பிரித்துப் பார்க்க முடியாது. அத்தனை தத்ரூபமாக வந்து நம் இதயத்தில் இடம் பிடித்துக்கொள்கிறார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உருக வைக்கும் உண்மைகள். படம் முடியும்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வரிகளைப் படித்தபோது, அவர் கொரோனா காலத்தில் நிஜமாகவே மரணமடைந்து விட்டதை அறிந்து மனம் வலித்தது. அவர் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவரது நடிப்புக்குக் கிடைக்கும் ஏகோபித்த பாராட்டுகளைப் பார்த்து குழந்தை போல் உற்சாகமாக குதூகலித்திருப்பார்.

இறந்துபோன தனது முறைப்பெண்ணை நினைவில் நிறுத்தி, நாடோடி வாழ்க்கை வாழ்ந்துவரும் முருகபக்தர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி அசத்தியிருக்கிறார். அதுபோல், யானை வளர்ப்பவராக வரும் யோகி பாபுவும் ரசிக்க வைக்கிறார்.

விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிய வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். கதிர் எப்படி முளைக்கிறது, அதைப் பாதுகாப்பது எப்படி என்பதில் தொடங்கி, விவசாயிகளை ஏமாற்றி நிலங்களை பெரு முதலாளிகளுக்கு கைமாற்றும் உள்ளூர் இடைத்தரகர்கள் வரை பல முக்கிய விசயங்களை ஆழமாகவும், அழுத்தமாகவும், பதிவு செய்துள்ளார் இயக்குநர். வாழ்த்துகள் மணிகண்டன்.

இயக்குனரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கிராமத்து அழகை வழக்கம் போல் காட்டாமல், மயில், மாடு, கோழி, யானை உள்ளிட்ட பல்லுயிர்களோடு சேர்த்துக் காட்டும் ஒளிப்பதிவு அட்டகாசம்.

சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் கூட்டணியில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓ.கே. ரகம்.

‘கடைசி விவசாயி’ – சோற்றில் கை வைக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!