‘பெங்களூர் நாட்கள்’ விமர்சனம்

‘பெங்களூர் நாட்கள்’ கதைக்குள் நுழைவதற்குமுன் ஒரு சின்ன பிளாஷ்பேக். ராஜ்குமார் ஹிரானி இயக்கிய ‘3 இடியட்ஸ்’ என்ற ஹிந்தி வெற்றிப்படத்தை இயக்குனர் ஷங்கர் தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்த இப்ப்டத்தை வெளியிடுகையில் ஷங்கர் சொன்னார்: “3 இடியட்ஸ்’ எனக்கு மிகவும் பிடித்துப்போனதால், அதை பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி அப்படியே தமிழில் ரீமேக் செய்திருக்கிறேன். இந்த படத்துக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியையே சேரும்” என்றார். ‘நண்பன்’ வெற்றி பெற்றது.

ஷங்கரின் இந்த வெற்றிகரமான ரீமேக் பார்முலாவையே ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் இயக்குனர் பொம்மரில்லு பாஸ்கரும் பின்பற்றியிருக்கிறார். மலையாளத்தில் அஞ்சலிமேனன் இயக்கிய வெற்றிப்படமான ‘பெங்களூர் டேஸ்’ படத்தை, பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி, அதன் ஜீவன் கெடாமல் அப்படியே தமிழில் ரீமேக் செய்துள்ளார். அதனால் தான் ‘பெங்களூர் நாட்கள்’ அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த வெற்றிப்படமாக கம்பீரமாக வந்திருக்கிறது.

படத்தில் ஆர்யாவின் அப்பா, பாபி சிம்ஹாவின் அப்பா, ஸ்ரீதிவ்யாவின் அம்மா ஆகிய மூவரும் உடன்பிறந்தவர்கள். அந்த வகையில் ஆர்யாவும், பாபி சிம்ஹாவும் ஒன்றுவிட்ட சகோதரர்கள்; இவர்கள் இருவரும் ஸ்ரீதிவ்யாவுக்கு முறைபையன்கள். ஆக, ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகிய மூவரும் :”கசின்”கள்!

இந்த கசின்கள் ஏறக்குறைய சமவயதினர் என்பதாலும், சரியான புரிதல் உள்ளவர்கள் என்பதாலும், வழக்கமாக உறவினர்கள் மத்தியில் நிலவும் பூசல்கள் எதுவுமின்றி, அன்னியோன்யமான நட்புடன் பழகி வருகிறார்கள். “நாம் மூணு பேரும் பெங்களூருக்குப் போய் ஜாலியா சுத்திட்டு கொண்டாட்டமா இருந்துட்டு வரணும்” என்பது இவர்களது சிறுபிராயத்து ஆசை. ஆனால் அது நிறைவேறாமலேயே இருந்துவருகிறது.

காலசுழற்சியில், “நீ கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஆகணும்” என்ற அம்மா சரண்யாவின் ஆசையை நிறைவேற்ற சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆகிறார் பாபி சிம்ஹா. அவருக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது.

“இரண்டு மாதத்துக்குள் கல்யாணம் செய்து வைக்காவிட்டால் உங்கள் மகள் எவனுடனாவது ஓடிப்போய் விடுவாள்” என்று ஜோதிடர் ஆருடம் சொல்ல, ஸ்ரீதிவ்யாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். பெங்களூரில் வேலை பார்க்கும் ராணா மணமகன் ஆகிறார்.

விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்ட பெற்றோர்களால் கைவிடப்பட்டதால், தனக்குப் பிடித்த மாதிரி ரசனையாக தன்னந்தனியே வாழ்ந்துகொண்டு, செல்ஃபி ப்ரியராகவும்,ரேஸ் பைக் மெக்கானிக்காகவும் இருக்கும் ஆர்யா, ஹைதராபாத்திலிருந்து இடம்பெயர்ந்து பெங்களூர் வருகிறார்.

ஸ்ரீதிவ்யா – ராணா திருமணத்தில் இந்த கசின்களின் கலாய்ப்பான கூத்தடிப்பும், பின்னர் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் விதமாய் பெங்களூரில் இவர்களது ஜாலியான கொட்டமடிப்புமாய் கும்மாளமாக ஆரம்பமாகிறது படம்.

ஸ்ரீதிவ்யாவின் கணவர் ராணா சதாசர்வகாலமும் வேலை வேலை என்று அலையும் மூடி டைப்பாக இருக்க, வருத்தமடைகிறார் ஸ்ரீதிவ்யா.

கிராமத்துத்தனமான பெயர் கொண்ட, ஆனால் கொஞ்சம் மாடர்னான, அழகான பெண் மனைவியாக கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கன்னி கழியாமல் காத்திருக்கும் பாபி சிம்ஹாவுக்கு, அவர் எதிர்பார்க்கும் அத்தனை தகுதிகளுடனும் விமான பணிப்பெண் ராய்லட்சுமி காதலியாக கிடைக்கிறார்.

எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், நான் இப்படித்தான் என ஜாலியாக இருக்கும் ஆர்யா, ரேடியோ ஜாக்கி பார்வதியின் குரலை கேட்டு சொக்கிப்போய், அவரை பார்க்காமலே காதல் மயக்கம் கொள்கிறார்.

ஸ்ரீதிவ்யாவின் கணவர் ராணா அலுவல் நிமித்தம் வெளிநாடு சென்றுவிட, கசின்களின் அருகாமையே ஸ்ரீதிவ்யாவுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் அளிப்பதாக இருக்கிறது.

ராணா இருக்கும்போது வீட்டுக்குச் சென்றாலும், ஆர்யாவையும், பாபி சிம்ஹாவையும் பார்த்த மாத்திரத்தில் சைலண்ட் மோடுக்கு மாறிவிடுகிறார் ராணா. ஆர்யாவை கண்டாலே பார்வை மாறுகிறது ராணாவுக்கு.

இந்நிலையில், கதையில் அடுத்தடுத்து திடுக்… திடுக் திருப்பங்கள். மனைவிகூட நுழைய அனுமதிக்காமல் தன் பிரைவேட் அறையை எப்போதும் பூட்டி வைத்திருக்கும் ராணா, ஒருநாள் சாவியை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போய்விட, அந்த அறைக்குள் சென்று பார்க்கும் மனைவி ஸ்ரீதிவ்யாவுக்கு அங்கே ஒரு பயங்கர திடுக்.

குரலால் தன்னை வசீகரித்திருக்கும் ரேடியோ ஜாக்கி பார்வதியை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்கிறார் ஆர்யா. அவர் பார்வதியை நேரில் பார்க்கும்போது அவருக்கு காத்திருக்கிறது ஒரு பயங்கர திடுக்.

காதலி ராய்லட்சுமிக்கு பால்கனியில் அமர்ந்து ஹெட் மசாஜ் செய்துவிடும் அளவுக்கு பாபி சிம்ஹா நெருக்கம் காட்டி வருகையில், அவருக்கும் ராய்லட்சுமி வீட்டில் ஒரு பயங்கர திடுக்..

இந்த பயங்கர திடுக்களையும், அவற்றின் விளைவுகளையும் மூன்று கசின்களும் எப்படி எதிர்கொண்டார்கள்? முடிவில் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

அழுத்தி வாரிய தலையுடன், தயக்கமாய் ஆரம்பித்து அடுக்குமொழி ஆங்கிலத்தில் இண்டர்வ்யூவில் அசத்தும் பாபிசிம்ஹா நடிப்பில் அசரடிக்கிறார். ‘போடா போடா எனக்கென்ன’ கேரக்டரை கேஷுவலாகவே செய்திருக்கிறார், ஆர்யா. இவர்களுடன் போட்டி போட்டு ரசனையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.

கட்டுடலுடன் வரும் ராணா, அமைதியும் அழுத்தமுமான கதாபாத்திரத்தை பிரமாதமாக செய்திருக்கிறார். பார்வதி, ராய்லட்சுமி, பிரகாஷ்ராஜ், சமந்தா, சரண்யா என அனைவருமே தாங்கள் ஏற்ற பாத்திரத்தை சிறப்பாக செய்து ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதி கலகலப்பான வேகம் என்றால், இரண்டாம் பாதி திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான படுவேகம். ராணாவின் ஃப்ளாஷ்பேக் தெரிந்து ஸ்ரீதிவ்யா எடுக்கும் முடிவு பிரமிக்க வைக்கிறது என்றால், ஆர்யா – பார்வதியின் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கொள்ளாத ரொமாண்டிக் சந்திப்புகள் மனதை அள்ளுகிறது.

இயக்குனராக பொம்மரில்லு பாஸ்கருக்கு தமிழில் இது முதல் படம். ஒரிஜினல் கதையை சிதைக்காமலும், படத்தின் வெற்றியை கெடுக்காமலும் ஒரிஜினல் இயக்குனரான அஞ்சலிமேனனின் படைப்பை பக்காவாக தமிழ் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்ததற்காக பொம்மரில்லு பாஸ்கரை பாராட்டலாம்.

உறவுகளை உறவுகள் என்ற மட்டத்திலேயே வைத்துக்கொண்டு முட்டி மோதிக்கொண்டிருக்காமல், அதை அன்யோன்யமான நட்பாக வளர்த்தெடுத்துக் கொண்டால் வாழ்க்கை எத்தனை இனிமையாக இருக்கும் என்ற நல்ல கருத்தை, துளியும் ஆபாசமில்லாமல், குடும்பத்துடன் கண்டுகளிக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறது இப்படம்.

‘பெங்களூர் நாட்கள்’ – வரவேற்கத்தக்க இனிய அனுபவம்!

Read previous post:
19
‘சாகசம்’ விமர்சனம்

2012ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான வெற்றிப்படம் ‘ஜூலாய்’. இந்த படத்தை தமிழில் பிரசாந்த் நடிப்பில் ;சாகசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யும் பணி 2013ஆம் ஆண்டு நவம்பரில்

Close