‘சாகசம்’ விமர்சனம்

2012ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான வெற்றிப்படம் ‘ஜூலாய்’. இந்த படத்தை தமிழில் பிரசாந்த் நடிப்பில் ;சாகசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யும் பணி 2013ஆம் ஆண்டு நவம்பரில் துவங்கியது. படம் 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் திரைக்கு வந்திருக்கிறது. இப்படி நீண்ட நெடுநாட்களாக தயாரிக்கப்பட்ட ‘சாகசம்’ எப்படி? பார்க்கலாம்…

சென்னையில் பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் நாசர்.  அவர் தன் மனைவி, மகள் மற்றும் மகன் பிரசாந்துடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து குடும்பத்தை நடத்திவரும் நாசருக்கும், கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறும் மகன் பிரசாந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இது வாக்குவாதமாக மாற, தந்தையிடம் வாய்ச்சவடால் பேசுகிறார் பிரசாந்த். “10 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். அதை 2 மணி நேரத்தில் 1 லட்சமாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று பிரசாந்த் கேட்க, சவாலை ஏற்ற நாசரும் 10 ஆயிரம் ரூபாயை பிரசாந்திடம் கொடுக்கிறார்.

அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, சட்டவிரோதமான ‘கிரிக்கெட் மேட்ச் பெட்டிங்’கில் கட்டுவதற்காக செல்கிறார் பிரசாந்த்.. அப்போது வில்லன் சோனுசூட் தலைமையில் ஒரு கும்பல் வங்கியில் கொள்ளையடிக்க செல்கிறது. அவர்களிடம் லிப்ட் கேட்டு காரில் ஏறிக்கொள்ளும் பிரசாந்த், அவர்களிடம் மேட்ச் பெட்டிங் பற்றி பேசுகிறார் பிரசாந்த். அவர் மூலம் மேட்ச் பெட்டிங் நடக்கும் இடத்தைத் தெரிந்துகொண்ட சோனுசூட் கும்பல், அவரை இறக்கிவிட்டதும், போலீசை திசைதிருப்பி வங்கியை கொள்ளையடிப்பதற்காக, மேட்ச் பெட்டிங் நடப்பது பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கிறது. இதனால், போலீசாரிடம் சிக்குகிறார் பிரசாந்த். அவர்களிடம், “உங்களை திசை திருப்பி விட்டு அந்த கும்பல் வங்கியில் கொள்ளையடிக்கிறது” என்று கூறுகிறார். இதை நம்பாத போலீஸ் பிரசாந்தை அழைத்துக் கொண்டு வங்கிக்கு செல்கிறது. அங்கு கொள்ளைக் கும்பலுக்கும் போலீசுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் வில்லன் சோனுசூட்டின் தம்பி கொல்லப்படுகிறார். சோனுசூட் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார்.

மறுநாளே தப்பிக்கும் சோனுசூட் தன்னை காட்டிக் கொடுத்த பிரசாந்தை கொல்ல நினைக்கிறார். சோனுசூட் வெளியில் வந்ததை அறிந்த பிரசாந்த் குடும்பத்தினர், பிரசாந்த் இறந்து விட்டதாக பொய்யாக பேப்பரில் விளம்பரம் செய்து சோனுவின் எண்ணத்தை திசை திருப்பிவிட்டு, பிரசாந்தை கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

கோயம்புத்தூரில் பிரசாந்த், நாயகி அமண்டாவை பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் சோனுசூட், பிரசாந்த் இருவரும் சந்தித்தார்களா? பிரசாந்த் – அமண்டா காதல் என்ன ஆனது? என்பது மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடித்திருந்தாலும், நடனம், சண்டைக்காட்சிகளில் இன்னும் அதே இளமைத் துள்ளலுடனும் அதே புத்துணர்ச்சியுடனும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி அமண்டா நடிப்புக்கு புதுசு என்றாலும் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியால் ரசிகர்களை சூடேற்றியிருக்கிறார்.

தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் என்பதாலோ என்னவோ, தெலுங்கு சாயல் அதிகம் தெரிகிறது. அது படத்தோடு ஒன்றவிடாமல் தடுக்கிறது.

தமிழ் சினிமா இன்று ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘ஜிகிர்தண்டா’, ‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’, ‘பாபநாசம்’, ‘தனி ஒருவன்’, ‘விசாரணை’ என புதுப்புது கதைகளுடன் பாய்ந்து முன்னேறிக்கொண்டிருக்கையில், இப்போதுபோய் அருதபழசான வங்கிக்கொள்ளை, பழிவாங்க அலைதல், தங்கச்சி கடத்தல், வெளிநாட்டு லொக்கேஷன்களில் கிளாமரான ஆடல் – பாடல் என்றெல்லாம் கயிறு திரித்தால், இன்றைய ரசிகர்களிடம் எடுபடுமா? மாத்தி யோசிங்க பிரசாந்த்!

‘சாகசம்’ – ஏமாற்றம்!