மலேசியா டூ அம்னீசியா – விமர்சனம்

கொரோனா கொடுந்தொற்று மற்றும் முழுஊரடங்கு காரணமாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ள படம் இது.

கதைப்படி, வைபவ்வும் வாணி போஜனும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

வைபவ்வுக்கு பெங்களூருவில் ரகசிய காதலியாக ரியா சுமன் இருக்கிறார்.

மலேசியாவுக்கு அலுவலக வேலையாக செல்வதாக சொல்லி பெங்களூருக்கு ரியாவை பார்க்க வைபவ் செல்கிறார். அவர் செல்வதாக சொன்ன மலேசிய விமானம் மாயமானதாக செய்தி வருகிறது. பெங்களூருவில் இருந்து வரும் வைபவ் நண்பன் கருணாகரன் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

வைபவ்வுக்கு அனைத்து உணர்வுகளையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரை பார்த்து டாங்லீ என்று சொல்லும்போது எல்லாம் கைதட்டி சிரிக்க வைக்கிறார். கருணாகரன் யோசனைப்படி அம்னீசியா வந்தவராக நடிக்கும் காட்சிகளில் எல்லாம் வைபவ் வெளுத்து வாங்குகிறார். வாணி போஜனின் அன்பை பார்த்து தன் தவறை உணரும் காட்சியில் நெகிழ்ச்சியான நடிப்பு.

வைபவ்வுக்கு இணையான கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர். துப்பறியும் நிபுணராக வைபவ், கருணாகரன் கூட்டணி மீது சந்தேகபடும் காட்சிகளில் அனுபவ நடிப்பு. அந்த இறுதிக்காட்சி திருப்பத்தில் அபார நடிப்பு. அப்பாவி மனைவியாக வாணி போஜன் கணவருக்காக உருகும் இடங்களில் அசத்துகிறார்.

எம்.எஸ்.பாஸ்கரிடம் கோபம் கொள்ளும் கடைசிக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். கருணாகரன் வைபவ்வுக்கான மூளையாக செயல்பட்டு கதையை கலகலப்பாக நகர்த்துகிறார். ஆங்காங்கே இவர் அடிக்கும் ஒன்லைன் பஞ்ச் வசனங்கள் வெடி சிரிப்பு.

’மொழி’, ’அபியும் நானும்’, ‘காற்றின்மொழி’ உள்ளிட்ட படங்கள் மூலம் அனைவரும் ரசிக்கும்வகையில் நகைச்சுவை கலந்த உணர்வுபூர்வமான படங்களை இயக்கி புகழ்பெற்ற ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் அதே வகையில் இதை படைத்தளித்திருக்கிறார்.

’மலேசியா டூ அம்னீசியா’ – நகைச்சுவை விருந்து!

 

Read previous post:
t1
விருதுகளை குறிவைத்து பயணப்படும் ‘தகவி’ திரைப்படம்

‘ஆறடி’ என்ற பெண் வெட்டியாளின் கதையை படமாக்கி அனைவரிடமும் பாராட்டையும், பல விருதுகளையும், வாழ்த்துகளையும்  பெற்ற படக்குழுவினர் அடுத்து ‘தகவி’ என்ற தரமான குழந்தைகள் படத்தை எடுத்துள்ளனர்.

Close