எங்கிட்ட மோதாதே – விமர்சனம்

1988-ல் நடக்கும் கதையில் படத்தின் நாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும்  தொழில் செய்து வருகிறார்கள். பின்னர் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் நட்ராஜ், ராஜாஜியையும்  தன்னுடன் அழைத்து வருகிறார். பின்னர் தனது அம்மா மற்றும் தங்கை சஞ்சிதா ஷெட்டியையும் திருநெல்வேலி அழைத்து  வருகிறார். பின்னர் நட்ராஜ் மற்றும் ராஜாஜி அங்கேயே சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கின்றனர்.

இதில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராக ரஜினி படங்களை கட்அவுட்களில் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். ராஜாஜி  கமல் ரசிகராக கமல் படங்களை வரைய விரும்புகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் மாவட்ட ரசிகர் மன்றங்களில் உறுப்பினர்களாக  இணைகின்றனர்.

அதேநேரத்தில் கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நாயரை பார்த்த உடனே காதல் வருகிறது. மறுபுறத்தில் நட்ராஜ் –  சஞ்சிதாவை காதல் செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் ராஜாஜிக்கு தெரியவர நட்ராஜை விட்டு பிரிந்து தனியாக தொழில்  செய்ய ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையே ரஜினி, கமல் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீசாகிறது. இதில் கட்அவுட் வைப்பத்தில் ஏற்படும் பிரச்சனையில்   திரையரங்கு தாக்கப்படுகிறது. இதனால் கடுப்பாகும் தியேட்டர் உரிமையாளரும், அரசியல்வாதியுமான ராதாரவி கட்அவுட்  வைத்தால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாது என்கிறார்.

பின்னர் அரசியல் பிரச்சனையாக மாறும் இந்த பிரச்சனையை தீர்த்து படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி-கமல் ரசிகர்கள் முடிவு செய்து,  அதற்காக போராடி வருகின்றனர். இதில் நட்டி, ராஜாஜியை கொல்ல ஆட்களை ஏவிவிடுகிறார் ராதாரவி. இந்த பிரச்சனைகளில்  இருந்து நட்டி, ராஜாஜி எப்படி தப்பித்தார்கள், ரஜினி-கமல் படங்களை எப்படி திரையிட்டார்கள், ராதாரவி சூழ்ச்சியில் இருந்து  தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் நட்ராஜ், ரஜினி ரசிகராகவே வாழ்ந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு வசனங்களும், ரஜினியை பின்பற்றும் அவரது  உடல்அசைவுகளும் பார்ப்பதற்கு ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக சிகரெட்டை தூக்கி போடுவது, நடை, உடை என ரஜினி ஸ்டைலில்  அசத்துகிறார். குறிப்பாக தனது தலைவர் படத்தை ரிலீஸ் செய்ய அவர் செய்யும் முயற்சிகள் ரசிக்கும்படி உள்ளது. நட்ராஜுடன் வரும்  நபர் படத்தில் காமெடியில் சிரிக்க வைக்கிறார்.

இதற்கு முன்பு நடித்த படங்களை விட இப்படத்தில் ராஜாஜியின் நடிப்பும், அவரது செயல்களும் பார்க்கும்படி உள்ளது. கமல் ரசிகராக  மிரட்டியிருக்கிறார். காதல் காட்சிகளிலும் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் ராதாரவி ஒரு மிடுக்கான தோற்றத்தில் நடித்துள்ளார். பயந்த சுபாவமாக வரும் இவர் தனது அடியாளின் மூலம் தான்  நினைப்பதை செய்து முடிப்பதில் நின்றுள்ளார். குறிப்பாக அரசியல்வாதிக்கு ஏற்ற சாதுர்யங்களும், சூழ்நிலைக்கு தகுந்தபடி நடந்து  கொள்வதிலும் தனது நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ராதாரவி சொல்வதை செய்து முடிக்கும் விஜய் முருகன் அவரது தோற்றத்திற்கு ஏற்ப அருமையான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார். படம் முழுக்க வில்லனாக வலம் வந்து மிரட்டி உள்ளார். சஞ்சிதாவின் நடிப்பை பொறுத்தவரையில் தனக்குரிய  பாணியில் சிறப்பாக நடித்துள்ளார். காதல் காட்சிகளில் உருகி தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல்முறையாக  இப்படத்தில் தாவணியில் வரும் பார்வதி நாயர் அவருக்கே உரித்தான ஸ்டைலில் நடித்திருக்கிறார். தாவணி கெட்அப் மட்டும்  அவருக்கு சரியாக அமையவில்லை. மற்றபடி காதல் காட்சிகளில் ரசிக்கும்படி இருந்தது.

இயக்குநர் ராமு செல்லப்பா படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார். 1980 களில் நடக்கும் கதையை அதற்கேற்ற  பாணியில் சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தின் வசனங்களும் ரசிக்கும்படி உள்ளது. படத்தில் ரஜினி, கமல் ரசிகர்கள் வரும்  காட்சிகளும், படத்தை ரிலீஸ் செய்ய போராடும் காட்சிகளும் அந்த காலத்திற்கே கொண்டு செல்கிறது.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்தது சிறப்பு.

மொத்தத்தில் என்கிட்ட மோதாதே, மிரட்டல்.

 

Read previous post:
0
தாயம் – விமர்சனம்

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வேலைக்கான நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், நாயகன், நாயகி உள்பட 8  பேர் வருகிறார்கள். அவர்களை ஜெயக்குமார் ஒரு

Close