பத்து தல – விமர்சனம்

நடிப்பு: சிலம்பரசன் டிஆர், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ், கலையரசன், டீஜே அருணாசலம், அனு சித்தாரா, சாயிஷா (சிறப்பு தோற்றம்) மற்றும் பலர்

இயக்கம்: ஒபிலி என்.கிருஷ்ணா

ஒளிப்பதிவு: ஃபரூக் ஜே.பாஷா

படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

தயாரிப்பு: ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.இ.ஞானவேல் ராஜா & ‘பென் ஸ்டூடியோஸ்’ ஜெயந்திலால் கடா

சான்றிதழ்: யு/ஏ

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா (டிஒன்)

கர்நாடகத்தில்  அமோக வெற்றி பெற்ற ‘மஃப்டி’ என்ற கன்னடப்படத்தின் தழுவல் என்பதாலும், ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘ஹாட்ரிக்’ அடிக்கும் நோக்கத்துடன் சிலம்பரசன் கடும் உழைப்பைப் போட்டிருக்கும் படம் என்பதாலும், இதன் டிரைலரும் பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதாலும், மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள சூழலில் வெளியாகியிருக்கிறது ‘பத்து தல’ திரைப்படம்.

”இங்கே நல்லது செய்யிறதுக்கே ஒரு கெட்டமுகம் தேவைப்படுது” என்றொரு வசனம் ‘பத்து தல’ படத்தில் வரும். அதுதான் இப்படத்தின் கதைக்கரு. அதுதான் இப்படம் சொல்லும் செய்தி.

தமிழ்நாட்டு முதலமைச்சராக இருக்கும் சந்தோஷ்பிரதாப்புக்கும், துணை முதலமைச்சராக இரண்டாம் இடத்தில் இருக்கும் கவுதம் வாசுதேவுக்கும் இடையேயான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்ட, திடீரென்று முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப் ரகசியமாக கடத்தப்படுகிறார். “முதலமைச்சரை காணோம்; மாயம்” என்ற செய்தி நாடு முழுவதும் பரபரப்புடன் பரவுகிறது.

முதலமைச்சர் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில், ஒருவரை இடைக்கால முதலமைச்சராக தேர்வு செய்ய வேண்டிய  அவசியம் ஏற்படுகிறது. துணை முதலமைச்சராக இரண்டாம் இடத்தில் இருக்கும் தனக்குத் தான் அப்பதவி கிடைக்கும் என்று கவுதம் வாசுதேவ் ஆசையுடன் காத்திருக்க, முதலமைச்சர் மாயமான விவகாரத்தின் பின்னணியில் கவுதம் வாசுதேவ் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தால் அவருக்கு அப்பதவி மறுக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ’ஏஜிஆர்’ என்ற மணல் மாஃபியாவின் (சிலம்பரசன் டிஆர்) விசுவாசியும், அமைச்சரவையில் மூன்றாம் இடத்தில் இருந்தவருமான ஒபிலி என்.கிருஷ்ணா, ஏஜிஆரின் கருணையால்  இடைக்கால முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார். இதனால் ஏஜிஆர் மீது கடுப்பாகிறார் துணை முதலமைச்சர் கவுதம் வாசுதேவ்.

இதனிடையே, தமிழ்நாட்டு அரசியலையும், அதிகார வர்க்கத்தையும் ஆட்டிப் படைக்கும் மணல் மாஃபியாவான ஏஜிஆர் தான் முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப்பை கடத்தியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் புலனாய்வு வட்டாரத்தில் எழுகிறது. இது பற்றி துப்பு துலக்குவதற்காக ‘குணா’ என்ற பொய்ப்பெயரில் ஏஜிஆரின் ”அடியாளாக” ஏஜிஆரின் நிழலுலகத்துக்குள் அனுப்பப்படுகிறார் அண்டர்கவர் போலீஸ் அதிகாரியான சக்திவேல் (கவுதம் கார்த்திக்).

முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப் ஏன் கடத்தப்பட்டார்? அவர் மீட்கப்பட்டாரா, இல்லையா? மணல் மாஃபியாவான ஏஜிஆருக்கும், அவரால் அரசியல் பிரச்சினைகளைச் சந்திக்கும் துணை முதலமைச்சர் கவுதம் வாசுதேவுக்கும் இடையேயான மோதல் என்னென்ன திருப்பங்களை ஏற்படுத்துகிறது? ஏஜிஆரின் கோட்டைக்குள் குணா என்ற பெயரில் அடியாளாய் நுழைந்த அண்டர்கவர் போலீஸ் அதிகாரி சக்திவேல் நிலை என்ன? அவரால் ஏஜிஆரை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்த முடிந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படத்தின் மீதிக்கதை.

0a1d

படத்தில் சிலம்பரசனின் பெயர் ’ராவணன்’ என்பதால், பொருத்தமாக படத்துக்கு ‘பத்து தல’ என பெயர் சூட்டியிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஏஜிஆர்’ (எ) ’ஏ.ஜி.ராவணன்’ என்ற குவாரி அதிபராக, மணல் மாஃபியாவாக, தாதாவாக வந்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சிலம்பரசன். கருப்பு வேட்டி, கருப்பு சட்டை, அழகாய் வாரிய தலைமுடி, நீண்ட தாடி, அதில் கொஞ்சமாய் நரை,  பார்வையில் நிதானம், பேச்சில் அழுத்தம் ஆகிய அம்சங்களுடன் திரையில் தோன்றும் சிலம்பரசனின் தோற்றமும், நடிப்பும் மிரட்டல். அவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும், பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்கில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். தாதா, பாசமிகு அண்ணன், மக்களை காக்கும் ரட்சகன், துரோகிகளைப் பந்தாடும் ராட்சசன் என எல்லாத் தரப்பினரும் ரசிக்கக்கூடிய பல முகங்கள் காட்டியிருக்கிறார் சிலம்பரசன். படத்தின் ஆகப் பெரும் அச்சாணியாக இருப்பது அவரது நடிப்புதான். பாராட்டுகள் சிலம்பரசன்.

ஏஜிஆரின் அடியாளாகவும், அதே நேரத்தில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாகவும் வரும் கவுதம் கார்த்திக் அவரது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காரியத்தில் கண்ணாக இருந்து கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அதிரடி ஆக்சனிலும் அதகளம் செய்துள்ளார்.

கவுதம் கார்த்திக்கின் காதலியாகவும், நேர்மையான தாசில்தாராகவும் லீலா தாம்சன் என்ற கதாபாத்திரத்தில் வரும் பிரியா பவானி சங்கரின் காதலில் ஆழமில்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து துணை முதலமைச்சர் நாஞ்சிலார் குணசேகரனாக வரும் கெளதம் வாசுதேவ் வழக்கம் போல ரசிகர்களுக்குப் பிடித்த ஸ்டைலிஷ் வில்லனாக அசத்தியிருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி, டீஜே அருணாசலம், அனுசித்தாரா, கலையரசன், ஜோமல்லூரி, மனுஷ்யபுத்திரன், கஜராஜ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

0a1e

“ராவடி…” என்ற கிக்கான பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் சாயிஷா, அவரது வேகமான நடன அசைவுகளும், கவர்ச்சியான தோற்றமும் பாடலை ரசிக்க வைப்பதோடு, திரையரங்கில் ஒன்ஸ்மோர் கேக்க வைக்கிறது.

சிலம்பரசனின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் காட்சிகளை மாஸாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா, அதே நேரத்தில் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில், அண்ணன் – தங்கை பாசம், சிறுமி – தாய்மாமன் நேசம் போன்ற அம்சங்களையும் புகுத்தி, போரடிக்காமல் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார். இறுதியில் ”ஆதாரமோ, சாட்சியோ இல்லை” என்று மணல் மாஃபியாவை நடுரோட்டில் விடுவிப்பது போன்ற அபத்தங்களைத் தவிர்த்து, இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு திரைக்கதை அமைத்திருந்தால், படம் இன்னும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் “ராவடி”, ”நம்ம சத்தம்”, ”நினைவிருக்கா”, ”நீ சிங்கம் தான்” ஆகிய வெரைட்டியான பாடல்கள் இதம். அவரது பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது.

ஃபரூக் ஜே. பாஷாவின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரம்.

‘பத்து தலை’ – சிலம்பரசனின் ஹாட்ரிக் வெற்றி! கொண்டாடலாம்!!

Read previous post:
0a1a
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24ஆம் தேதி நிறைவடைவதை முன்னிட்டு, புதிய சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று இந்திய

Close