“காதலனை எளிதில் நம்பாதே” என பெண்களுக்கு சொல்லும் பேய் படம் ‘மியாவ்’!

‘குளோபல்  வுட்ஸ் மூவிஸ்’  சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ்  தயாரிக்க, அறிமுக இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும் படம்  ‘மியாவ்’.

புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி மற்றும் ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் போஜன் கே தினேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இடவனா, படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா, கிராபிக்ஸ் வல்லுனர் ரமேஷ் ஆச்சார்யா, கலை இயக்குநர் ஆறுசாமி, நடன இயக்குநர் ஷெரீப், பாடலாசிரியர்கள் விவேக் வேல்முருகன் – நவீன் கண்ணன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என்.ஜே.சத்யா  என பல தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர்.

0a1b

இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது இதன் இயக்குனர் சின்னாஸ் பழனிசாமி பேசுகையில், “இந்த படத்தில் பெர்ஷியன் (ஈரானிய) பூனை தான் ஹீரோ. எனினும், நம் விருப்பம் போல் பூனை நடிக்காது என்பதால் பல காட்சிகளை கிராபிக்ஸில், அதே நேரத்தில் தத்ரூபமாக இருக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்.

இது நகைச்சுவையும் திகிலும் கலந்த ஒரு பேய் கதை. பொதுவாக, பேய் படம் என்றால் ஒரு ஆவி மனித உடலுக்குள் புகுந்துகொள்வது போல தான் கதை அமைப்பார்கள்.ஆனால் இந்த படத்தில் பெர்ஷியன் பூனைக்குள் ஓர் இளம்பெண்ணின் ஆவி புகுந்து கொள்வதாக கதை அமைத்திருக்கிறோம். வழக்கமாக பேய் படங்களில் வரும் மந்திரவாதி, பேய் ஓட்டுதல், சுடுகாடு போன்றவற்றை எல்லாம் இந்த படத்தில் முழுமையாக தவிர்த்திருக்கிறோம்.

தன்னை ஏமாற்றி அழைத்துப்போய் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தனது காதலனையும், அவனது மூன்று நண்பர்களையும் ஓர் இளம் பெண்ணின் ஆவி, பூனையின் உடலுக்குள் புகுந்து எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. காதலனைக்கூட எளிதில் நம்பிவிட கூடாது என்று பெண்களுக்கு உணர்த்தும் படமாகவும் இது இருக்கும்” என்றார் இயக்குனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், “ஒரு திரைப்படத்தில் முதல் முறையாக ஒரு பூனை முன்னணி கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறது என்பதை கேட்டவுடன், எனக்கு ‘மியாவ்’ படத்தின் ட்ரெய்லரை பார்க்க வேண்டும் என்று  தோன்றியது. இங்கு திரையிடப்பட்ட ட்ரெய்லரும், பாடல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன.

தயாரிப்பு துறையில் அடியெடுத்து  வைக்கும் வின்சென்ட் அடைக்கலராஜிற்கு இந்த ‘மியாவ்’ படம் ஒரு சிறந்த அடிக்கல். நிலையான தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால் பதிக்க தேவையான எல்லா சிறப்பம்சங்களும் அவருக்கு இருக்கிறது. அதற்கு இந்த ‘மியாவ்’ ஒரு சிறந்த ஆரம்பம்” என்றார் கலைப்புலி எஸ்.தாணு.