மாவோவை ‘ரஷ்ய அதிபர்’ என சொன்னதற்காக வருத்தம் தெரிவித்தார் விஜய்!
விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, மகேந்திரன், ராஜேந்திரன், பிரபு, ராதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ‘தெறி’. அட்லீ இயக்க, கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இறுதியாக பேசிய விஜய், ரசிகர்களுக்கு ஒரு குட்டிக்கதை கூறினார். அந்த கதையில் “சீன முன்னாள் அதிபர் மாவோ” என்று சொல்லுவதற்கு பதிலாக “ரஷ்ய முன்னாள் அதிபர் மாவோ” என்று கூறிவிட்டார்.
இதை சில இணையதளங்கள் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தன. மேலும், அஜித் ரசிகர்களுக்கு இது போதாதா? அவர்கள் இதை வைத்து சமூகவலைத்தளங்களில் விஜய்யையும், அவரது ரசிகர்களையும் ஓட்டு ஓட்டென்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பற்றி அறிந்த விஜய் தன் தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். “பெரிய மேடைகளில் நாம் சில கருத்துக்களை ரசிகர்களுக்காகச் சொல்லும்போது இந்த மாதிரியான தவறுகள் நடந்துவிடுகின்றன இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். மற்றபடி நான் சொன்ன கருத்து ரசிகர்களைச் சென்றடையும் என நம்புகிறேன்” என விஜய் கூறியுள்ளார் .