லாஸ்ட் சிக்ஸ் ஹவர்ஸ் – விமர்சனம்

நடிப்பு: பரத், விவியா சாந்த், அனூப் காலித், அடில் இப்ராஹிம், அனு மோகன் மற்றும் பலர்

இயக்கம்: சுனிஷ் குமார்

இசை: கைலாஷ் மேனன்

ஒளிப்பதிவு: சினு சித்தார்த்

மக்கள் தொடர்பு: குமரேசன்

அனூப் காலித், அடில் இப்ராஹிம், அனு மோகன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்களின் சினேகிதி விவியா சாந்த். இந்த நான்கு பேரும் விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். இதற்காக திருட்டுத் தொழிலில் இறங்குகிறார்கள்.

நான்கு பேரும் திட்டம் தீட்டி, நகரின் மையத்தில் உள்ள பங்களா ஒன்றில் வெற்றிகரமாக கொள்ளை அடிக்கிறார்கள்.

அடுத்து, நகருக்கு அப்பால், ஒதுக்குப்புறமான மலைப்பகுதியில் இருக்கும் ஒரு பாழடைந்த பங்களாவில் 20 கோடி ரூபாய் இருப்பதாக தகவல் கிடைக்க, அதை கொள்ளையடிக்க நால்வர் கும்பல் முடிவு செய்கிறது.

நள்ளிரவில் அந்த பங்களாவுக்குள் நுழையும் அவர்களுக்கு, அதிகாலையில் பால்காரர் வருவதற்குள் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச் செல்ல 6 மணிநேரம் மட்டுமே அவகாசம் இருக்கிறது. இந்நிலையில், பங்களாவுக்குள் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே, கடற்படையில் பணியாற்றிய ஷான் (பரத்) உட்கார்ந்திருக்கிறார். தனியாக வசிக்கும் அவர் கண்பார்வை இழந்தவர். செவித்திறனைக் கூர்மையாக்கிக் கொண்டு கொள்ளையர்களுடன் மோதுகிறார்.

பார்வை இல்லாத ஷான், கொள்ளையர்களை வீழ்த்தினாரா? அல்லது அவரை வீழ்த்தி, கொள்ளையர்கள் தங்கள் கொள்ளைத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்களா? என்ற கேள்விகளுக்கு படத்தின் மீதிக்கதை விடையளிக்கிறது.

கட்டுக்கோப்பான உடலுடன் பார்வை இல்லாத முன்னாள் கடற்படை வீரர் ஷானாக ஆக்‌ஷனில் சமரசம் இல்லாமல் அசரடிக்கிறார் பரத். வசனம் அதிகம் இல்லாமல் நன்றாக நடிக்கிறார்.

எலிசபெத், ரேச்சல் என இரண்டு பெயர்களுடன் திடுக்கிட வைக்கும் கதாபாத்திரத்தில் விவியாவின் நடிப்பு சிறப்பு. அவரது மூன்று நண்பர்களாக வரும் அனூப் காலித், அடில் இப்ராஹிம், அனு மோகன் ஆகியோர் தங்களுக்கு தரப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்கின்றனர்.

ஆரம்பத்தில் கதை சாதாரணமாக நகர்ந்தாலும், ஷானின் பங்களாவுக்குள் கொள்ளையர்கள் நுழைந்தவுடன் படம் சூடுபிடிக்கிறது. பங்களாவுக்குள் அந்நியர்களை உணரும் ஷானின் அதிரடி தாக்குதல் அவர்களை நிலைகுலையச் செய்யும்போது, நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அந்த வீட்டுக்குள் நிகழும் எதிர்பாராத திருப்பங்கள், படத்தின் கிளைமாக்ஸுக்கு முன்னர் வரும் ஃபிளாஷ்பேக் ஆகியவை எதிர்பாராததாக இருக்கின்றன. படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் இயக்குனர் சுனிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

 சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு, தனியான பங்களாவுக்குள் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. கைலாஷ் மேனனின் பின்னணி இசை த்ரில் தன்மையுடன் ஒலிக்கிறது.

‘லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ்’ – பார்க்கலாம்!