எண்ணித் துணிக – விமர்சனம்

நடிப்பு: ஜெய், அதுல்யா ரவி, சுரேஷ் சுப்ரமணியம், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர்

இயக்கம்: எஸ்.கே.வெற்றிச்செல்வன்

இசை: சாம்.சி.எஸ்.

ஒளிப்பதிவு: ஜே.பி.தினேஷ்குமார்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

அமெரிக்காவில் இருந்து செயல்படும் கொள்ளை கும்பல் தலைவன் (சுரேஷ் சுப்ரமணியம்), தமிழகத்தில் அதையே பிழைப்பாக கொண்ட மதன் (வம்சி கிருஷ்ணா) வழியாக பல வைரக் கொள்ளைகளை நடத்துகிறான். இந்த 2 கும்பலின் அடுத்த குறி, மாநில அமைச்சருக்கு சொந்தமான நகைக் கடையில் இருக்கும் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள்.

கொள்ளை நடக்கும் நாளன்று, காதலர்களான கதிரும் (ஜெய்) நர்மதாவும் (அதுல்யா ரவி) தங்கள் திருமணத்துக்கு நகை வாங்க அமைச்சரின் நகைக்கடைக்கு வருகின்றனர். அப்போது நடக்கும் தாக்குதலில் நர்மதா உயிரிழக்க, நிலைகுலைகிறார் கதிர். கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் காவல்துறை கையைப் பிசைய, கதிர் அந்தக்கொள்ளை கும்பலை எப்படி வேட்டையாடினார் என்பது ‘எண்ணித் துணிக’ படத்தின் கதை.

வழக்கமான பழிவாங்கும் கதைபோல தெரிந்தாலும், காதலையும், குற்ற உலகத்தையும் கச்சிதமாக இணைத்து கதை புனைந்திருக்கிறார் இயக்குநர் எஸ்.கே.வெற்றிச் செல்வன்.

கல்லூரிக் காலத்தில் தேடி வந்த காதலை ஏற்க மறுக்கும் நாயகன் கதிர், பின்னர் உண்மையை உணர்ந்து, இழந்தகாதலை மீட்க எத்தனிக்கும் காதல் காட்சிகளில் இன்னும் சுவை, திருப்பங்களை கூட்டியிருந்தால் முதல் பாதி படம் தள்ளாடியிருக்காது.

கொள்ளையடித்த வைரங்களை தொலைத்துவிட்டு உள்ளூர் கொள்ளையன் தடுமாற, அவனை நம்பாமல் வெளிநாட்டுக் கொள்ளையன் வர, இன்னொரு பக்கம் தனது வைரங்களை மீட்க அமைச்சரும் களமிறங்குகிறார். இரு கொள்ளை கும்பல், மக்களிடம் அபகரித்த அமைச்சர், காதலியின் உயிரை கொள்ளை கொடுத்த காதலன் என நாற்கர நகர்வுகளில் இரண்டாம் பாதி திரைக்கதை டாப் கியரில் எகிறிப் பறக்கிறது.

முழு நீள ஆக்‌ஷன் நாயகனாக உருமாறி பட்டையை கிளப்புகிறார் ஜெய். அதற்கு ஜி.என்.முருகனின் சண்டை காட்சிகள் கைகொடுக்கின்றன.

அளவான நடிப்பு, நல்ல தமிழ் உச்சரிப்பு ஆகியவற்றுடன் குடும்பப் பாங்கானஅழகுடன் வலம் வரும் அதுல்யாவின் பங்களிப்பு படத்தில் குறைவாக இருந்தாலும் நிறைவு. அஞ்சலி நாயர், வித்யா பிரதீப் ஆகியோர் இருவேறு துருவங்களில் நின்று கவர்கின்றனர்.

ஜே.பி.தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு, காதல் காட்சிகளில்அழகையும், த்ரில்லர் காட்சிகளில் மர்மத்தையும் தக்க வைக்கிறது. சாம்.சி.எஸ்.பாடல்கள் சுமார் ரகம்.ஆனால் பின்னணி இசையில் பிடித்து உட்கார வைக்கிறார்.

நாயகனின் பிரச்சினைக்கு இணையாக, வில்லன்களின் பிரச்சினையையும் பேச முற்படுகிறது திரைக்கதை. இதன்மூலம் இரண்டாம் பாதிக்கு கிடைத்த விறுவிறுப்பை முதல் பாதிக்கும் கொடுக்க துணிந்திருந்தால், இப்படம் கமர்ஷியல் வைரமாக ஜொலித்திருக்கும்.

’எண்ணித் துணிக’ – பார்க்கலாம்! ரசிக்கலாம்!