தி வாரியர் – விமர்சனம்

நடிப்பு: ராம் பொத்தினேனி, கிரித்தி ஷெட்டி, ஆதி பினிசெட்டி, நதியா, ஜெயபிரகாஷ் மற்றும் பலர்

இயக்கம்: லிங்குசாமி

தயாரிப்பு: ஸ்ரீனிவாச சித்தூரி

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

நீண்ட இடைவெளிக்குப்பிறகு லிங்குசாமி இயக்கியுள்ள படம், தெலுங்கு நடிகர் ராம் பொத்தானி நாயகனாக நடித்துள்ள படம், தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் போன்ற விளம்பரங்களுடன், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது ‘தி வாரியர்’.

கதை என்னவெனில், எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு மருத்துவராய் பணியாற்றுவதற்காக சென்னையிலிருந்து மதுரை வருகிறார் சாதுவான நாயகன் சத்யா (ராம் பொத்தினேனி). மதுரையில் அடி-தடி, வெட்டு-குத்து, கொலை என இயங்கி, ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொடூர தாதாவாக குரு (ஆதி பினிசெட்டி) இருக்கிறார். உயிர் பறிக்கும் தாதாவான குருவுக்கும், உயிர் காக்கும் மருத்துவரான சத்யாவுக்கும் இடையில் ஒரு கட்டத்தில் மோதல் ஏற்படுகிறது. மோதல் முற்றி, சத்யாவை அடித்து ரத்தக் காயங்களுடன் மதுரையை விட்டே துரத்திவிடுகிறார் குரு. ஓடிப்போன சத்யா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு – ஐ.பி.எஸ் படித்து, பயிற்சிகள் முடித்து – அதிகாரம் மிக்க உக்கிரமான போலீஸ் உயர் அதிகாரியாக அதே மதுரைக்கு வருகிறார். அவருக்கும், தாதா குருவுக்கும் இடையிலான அடுத்த கட்ட யுத்தத்தை விவரிக்கிறது ‘தி வாரியர்’ படத்தின் மீதிக்கதை.

0a1b

தெலுங்குத் திரையுலகின் வளர்ந்துவரும் ஹீரோ நடிகரான ராம் பொத்தினேனிக்கு இது தான் முதல் தமிழ் படம். தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிற விதமாய் இருக்கிறார்; நடிக்கிறார். காதல் காட்சிகளில் கண்ணால் பேசுகிறார். ஆக்சன் காட்சிகளில் பின்னி எடுக்கிறார். வரவேற்போம்.

விசிலடிக்கும் நாயகியாக வரும் கிரித்தி ஷெட்டி அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார். நடனத்திலும் அசத்தியிருக்கிறார்.

வில்லனாக வரும் ஆதி பினிசெட்டி தன்னால் இயன்ற அளவு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கேரக்டர் ஸ்கெட்ச் போதுமான அளவு திருப்திகரமாக இல்லாததால், பல காட்சிகளில் என்ன செய்வது என தெரியாமல் தேமே என்று விழித்துக்கொண்டிருக்கிறார். அவரை ‘கெத்தான வில்லனாக’ படைத்திருந்தால் படம் வேற லெவலுக்குப் போயிருக்கும்.

நாயகனின் அம்மாவாக வரும் நதியா, மருத்துவமனை டீனாக வரும் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘புல்லட்’ பாடல் ஏற்கெனவே சூப்பர் ஹிட். அதைத் தவிர மற்ற பாடல்கள் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. பின்னணி இசை சுமார் ரகம்.

சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளையும், ஆக்சன் காட்சிகளையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது.

’அஞ்சான்’, சண்டைக்கோழி 2’ ஆகிய படங்களுக்குப்பின் – சுமார் 4 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு – இப்படத்தை இயக்கியுள்ள லிங்குசாமி, கதையிலும், திரைக்கதையிலும் புதுமைகள் செய்திருப்பார் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ‘பழிக்குப் பழி’ என்ற பெயரில் அரைத்த மாவையே கொழகொழ என அரைத்து வைத்திருக்கிறார்.

தெலுங்கு ரசிகர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் இருந்ததாலோ, என்னவோ, பல காட்சிகளில் தெலுங்கு மசாலா படம் பார்க்கும் உணர்வும் கொட்டாவியும் வருகிறது. ”மதுரையில் நடக்கும் கதை” என சொல்லிவிட்டு, முழுக்க முழுக்க ஆந்திராவில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. நிறைய லாஜிக் மீறல்கள். இப்போதெல்லாம் இயக்குனர்களைவிட ரசிகர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்; லாஜிக் பார்க்கிறார்கள்; அவர்களை முன்பு போல் சுலபமாக ஏமாற்ற முடியாது என்ற விவரம் பழம்பெரும் இயக்குனரான லிங்குசாமிக்குத் தெரியாமல்போனது வருத்தத்துக்கு உரியது. அப்டேட் ஆகுங்க லிங்குசாமி…!

’தி வாரியர்’ – தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்! தமிழ் ரசிகர்களுக்கு…?

 

Read previous post:
0a1a
’கனா காணும் காலங்கள்’ தொடருக்காக  ஜீ.வி.பிரகாஷ் இசையில் “எல்லாமே ஜாலி தான்” பாடல்! – வீடியோ

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தலைமுறை தாண்டி ரசிகர்களை அசத்தி வரும்  “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான

Close