ஆலகாலம் – விமர்சனம்

நடிப்பு: ஜெயகிருஷ்ணமூர்த்தி, சாந்தினி, ஈஸ்வரி ராவ், தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம், பாபா பாஸ்கர் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜெயகிருஷ்ணமூர்த்தி

ஒளிப்பதிவு: கா.சத்யராஜ்

படத்தொகுப்பு: மு.காசி விஸ்வநாதன்

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

தயாரிப்பு: ’ஸ்ரீ ஜெய் புரொடக்‌ஷன்ஸ்’ ஜெயகிருஷ்ணமூர்த்தி

பத்திரிகை தொடர்பு: சக்தி சரவணன்

’ஆலகாலம்’ என்பது இந்து புராணத்தின்படி, ‘மிகவும் கொடிய விஷம் (Deadly Poison)’ ஆகும். அமுதம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி பாம்பு, வலி தாங்காமல் கக்கிய கொடிய விஷமே ’ஆலகாலம்’ எனப்படுகிறது. இந்த விஷம் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வல்லது என்கிறது இந்து புராணம். அத்தகைய கொடிய விஷத்தைக் குறிக்கும் ’ஆலகாலம்’ என்ற சொல்லை அறிமுக இயக்குநர் ஜெயகிருஷ்ணமூர்த்தி தன் திரைப்படத்துக்கு ஏன் வைத்தார்? அவர் ‘ஆலகாலம்’ என்று எதை குறிப்பிடுகிறார்? பார்ப்போம்…

0a1b

ஒரு சின்னஞ்சிறு கிராமம். இங்கு வசித்து வருபவர் யசோதா (ஈஸ்வரி ராவ்). கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைப் பெண்மணி. இவரது கணவர் குடிப்பழக்கம் காரணமாக அற்ப ஆயுளில் செத்துப்போய்விட, விதவையாக தன் ஒரே மகன் ஜெய்யுடன் (ஜெயகிருஷ்ணமூர்த்தி) வாழ்ந்து வருகிறார்.

குடிப்பழக்கம் எத்தகைய அழிவை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்த யசோதா, அத்தகைய கெட்ட பழக்கம் எதுவும் அண்டாத ஒழுக்கசீலராக ஜெய்யை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். ஜெய் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பதால், பணப்பிரச்சனை இருந்தபோதிலும், சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற பொறியியல் கல்லூரி ஒன்றில் மேற்படிப்புக்காக சேர்த்துவிடுகிறார். மகன் படித்து முடித்து நல்ல வேலைக்குப்போய் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் தங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற கனவில் இருக்கிறார் அந்த ஏழைத் தாய்.

கல்லூரியில் மாணவர் ஜெய்க்கும் சக மாணவி தமிழுக்கும் (சாந்தினி) நட்பு ஏற்படுகிறது. தன்னைப் போலவே படிப்பில் சிறந்தவராகவும், நற்பண்புகள் கொண்டவராகவும் இருக்கும் ஜெய் மீது ஈர்ப்புக்கொள்ளும் தமிழ், அவர் மீது காதல் கொள்கிறார். தமிழின் காதலை ஜெய்யும் ஏற்றுக்கொள்கிறார்.

ஜெய் – தமிழ் காதல் கண்டு, தமிழை ஒருதலையாக காதலிக்கும் சக மாணவர் ராஜேஷ் ஏமாற்றம் அடைகிறார். அவருக்குள் பொறாமை பற்றியெரிகிறது. ஜெய்யின் நல்ல பழக்கங்கள் தான் தமிழை ஈர்த்தது என்பதை உணர்ந்த ராஜேஷ், ஜெய்யை “நட்புடன்” குடிக்க வைத்து கெடுக்க முயலுகிறார். ராஜேஷின் முயற்சியை ஆரம்பத்தில் எதிர்க்கும் ஜெய், பின்னர் மதுவின் ஈர்ப்புக்கு ஆளாகி குடிக்கத் தொடங்குகிறார்.

இந்த குடிப்பழக்கம் ஜெய்யின் லட்சியத்தை, தாய் யசோதாவின் கனவை, காதலி தமிழின் காதல் வாழ்க்கையை எப்படி சிதைத்து, நார் நாராய் கிழித்து, நாசமாக்குகிறது என்பதை அச்சு அசலாய், ரத்தமும் சதையுமாய் விவரிக்கிறது ‘ஆலகாலம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஜெய் கதாபாத்திரத்தில் இப்படத்தை இயக்கி தயாரித்திருக்கும் ஜெயகிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். வழக்கமான சினிமா ஹீரோ போல் இல்லாமல், வெள்ளந்தியான சிரிப்பு, அப்பாவியான நடை, உடை, பாவனை ஆகியவற்றுடன் எந்த பூச்சும் பில்டப்பும் இல்லாத எளிய கல்லூரி மாணவராக ஆரம்பத்தில் வலம் வருகிறார். காதல் காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையானபின் மனுசன் நடிப்பு அசுரனாக மாறி, நம்பவே முடியாத அளவுக்கு அட்டகாசமாக பின்னியெடுத்து விட்டார். படத்தின் இரண்டாம் பாதியில், அர்ப்பணிப்புடன் கூடிய தன் நடிப்பால், பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு, தன் வசம் ஈர்த்துக்கொள்வதில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துகள் ஜெயகிருஷ்ணமூர்த்தி.

 நாயகி தமிழ் கதாபாத்திரத்தில் சாந்தினி நடித்திருக்கிறார். கல்லூரி மாணவி என்று சொன்னால் நம்பும்படியாக இப்போதும் அழகாக இருக்கிறார். முதலில் கல்லூரி மாணவி, பின்னர் நாயகனின் காதல் மனைவி என்ற இருவேறு சித்தரிப்புகளுக்குள்ளும் கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, இரண்டாம் பாதியில் நாயகனுக்கு இணையாக அருமையாக நடித்து, பார்வையாளர்களின் அனுதாபத்தையும், பாராட்டையும் அள்ளியிருக்கிறார்.

நாயகனின் அம்மா யசோதாவாக ஈஸ்வரிராவ் நடித்திருக்கிறார். கணவனை இழந்த விதவையாக, கூலிவேலை செய்யும் கிராமத்துப் பெண்மணியாக, ஒரே மகன் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஏழைத் தாயாக ஈஸ்வரிராவ் திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். “சாமியே கேட்டாலும் நான் மதுவை வைத்து படையல் போட மாட்டேன்” என்று ஆரம்பத்தில் உறுதியாக இருக்கும் அவர், ஒரு கட்டத்தில் குடியடிமையாகிப்போன தன் மகனின் நிலை கண்டு, மனமுருகி, அவருக்காக மதுக்கடையில் மது வாங்கும் காட்சி பார்வையாளர்களை நிச்சயம் கலங்க வைக்கும். கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் கதைக்குப் பொருத்தமான முடிவு. (என்றாலும், நிஜப்பிரச்சனைக்குத் தீர்வு இத்தனை எளிதானது அல்ல என்பதையும் நினைவில் கொள்வோம்.)

தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி உயிரூட்டியிருக்கிறார்கள்.

“மது இனிய பானம் அல்ல; அது ஆலகாலம்; கொடிய விஷம்; அது இருக்கும் பக்கம் தலை வைத்துக்கூட படுக்கக் கூடாது” என்ற ஆழமான கருத்தை அடிப்படையாக வைத்து, பிரசாரமாக அல்லாமல், காட்சிப்படுத்துதல் மூலம் அழுத்தமாக அருமையாக, சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெயகிருஷ்ணமூர்த்தி. போரடிக்காமல் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். இந்த படத்தைப் பார்த்து, ஒரு சில குடியடிமைகளாவது குடிப்பழக்கத்தை கைவிட்டு திருந்தினால், அதுவே இயக்குநர் ஜெயகிருஷ்ணமூர்த்தியின் இந்த முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.

கா.சத்யராஜின் ஒளிப்பதிவு, என்.ஆர்.ரகுநந்தனின் இசை, மு.காசி விஸ்வ நாதனின் படத்தொகுப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

‘ஆலகாலம்’ – நீங்களும் பார்த்து ரசிக்கலாம்! உங்களுக்குத் தெரிந்த குடியடிமைகள் பார்ப்பதற்கும் பரிந்துரை செய்யலாம்!