நரிக்குறவர் வாழ்வியலை சொல்லும் ‘கொள்ளிடம்’ இசை வெளியீடு!

சுமார் 35 ஆண்டுகளுக்குமுன் வெளியாகி, மகத்தான வெற்றி பெற்று, வெள்ளிவிழா கொண்டாடிய படம் ‘ஒருதலை ராகம்’. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் இ.எம்.இப்ராஹிம். இவரது சகோதரர் இ.எம். ஜபருல்லா ‘வெர்ட்டிக்கல் பிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக ராசிக், ரூபா அய்யப்பன், ஜி.வி.பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கொள்ளிடம்’.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு, நாயகனாகவும் நடித்திருக்கிறார் நேசம் முரளி. “நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியலை மையமாகக் கொண்ட இந்த படத்தில் நடிக்க, பிரபல நாயக நடிகர்கள் யாரும் முன்வரவில்லை. எனவே, நானே நாயகனாக நடித்துவிட்டேன்” என்கிறார் அவர்.

“மனித இனத்தில் 20 சதவிகிதம் பேர் அழகாக பிறக்கிறோம். மீதம் 80 சதவிகிதம் பேர் அழகு குறைவாகத் தான் பிறக்கிறோம். அழகு குறைவாக இருக்கிற 80 சதவிகிதம் பேர் ஒருதலையாகத் தான் காதலிக்க முடிகிறது. காதலைச் சொல்ல அவர்கள் நினைக்கும்போதெல்லாம் ‘இந்த மூஞ்சிக்கு இது தேவையா?’ என்று அவர்களது மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும். இதுவே ‘கொள்ளிடம்’ படத்தின் கதைக்கரு” என்று சொல்லும் இயக்குனர் நேசம் முரளி, “டெல்டா மாவட்டம் முழுவதும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது” என்கிறார்.

நேசம் முரளியுடன் லூதியா, ராசிக், வடிவுக்கரசி, ராமசந்திரன், வேல்முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு – ஆர்.ராஜகோபால்

இசை – ஸ்ரீகாந்த் தேவா

படத்தொகுப்பு –  எஸ்.பி.அஹமத்

பாடல்கள் – அண்ணாமலை, எம்.பூதூர் கே.காமராஜ், நேசம் முரளி

சண்டை பயிற்சி –  எம்.கே.முருகன்

கலை –  டி.எம்.சாமி

ஊடகத் தொடர்பு – நிகில் முருகன்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இயக்குனர்கள் சங்க திரையரங்கில் நடைபெற்றது. இதில் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

கொள்ளிடம் இசை வெளியீட்டு விழா வீடியோ:

https://youtu.be/N7iGA0ayTq0