மீன் முக்கிய பாத்திரத்தில் வலம் வரும் படம் ‘கட்டப்பாவ காணோம்’!

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் புதிய படத்துக்கு ‘கட்டப்பாவ காணோம்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

‘போக்கிரி ராஜா’ படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. அறிவழகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மணி செய்யோன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி, காளி வெங்கட், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும், இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்துக்கு ‘கட்டப்பாவ காணோம்’ என்று தலைப்பிட்டு இருக்கிறது படக்குழு. சமீபத்தில் உலகளவில் பெரும் வரவேற்பு பெற்ற ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பா பாத்திரத்தில் நடித்தவர் சத்யராஜ். பாகுபலியை ஏன் கொன்றார் கட்டப்பா என்ற கேள்வி தான் தற்போது பரபரப்பாக இருந்து வருகிறது. தனது அப்பா பாத்திரத்தின் பெயரையே படத்தின் பெயராக வைத்திருக்கிறார் சிபிராஜ்.

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் எப்படி முக்கிய பாத்திரத்தில் நடித்ததோ, அதே போல் இப்படத்தில் ஒரு மீனை முக்கிய பாத்திரமாக வைத்திருக்கிறார் இயக்குநர்.

“எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு மீன் மிகவும் பிடிக்கும். என்னுடைய ஓய்வு நேரத்தை மீன்களுடன் கழிப்பதுதான் எனக்கு பொழுதுபோக்காக இருந்து வந்தது. நாயைப் போலவே மீன்களுக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சக்தியும், அவர்களை நன்கு உணர்ந்து கொள்ளும் ஆற்றலும் இருக்கிறது. மீன்களை ஹீரோவாக மக்களுக்கு காட்ட வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிதான் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ என்று தெரிவித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனரான மணி செய்யோன்.