‘கபாலி’ போல் தலித்தியம் பேசும் கலைகள் முன்னணி பெற வேண்டும்!

‘கபாலி’யில் பேசப்படும் தலித்தியம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பலர் ‘மற்றவன் சாதி வெறி பேசக் கூடாது, ரஞ்சித் பேசினால் மட்டும் சரியா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு ‘பதிலடியாக’ வேறு பலர் ‘பாலச்சந்தர் பிராமணியம் பேசலாம், பாரதிராஜா தேவரியம் பேசலாம், ரஞ்சித் தலித்தியம் பேசக் கூடாதா?’ என்று கேட்கிறார்கள்.

பாலச்சந்தர் படத்தில் பிராமணப் பாத்திரங்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் பார்ப்பனவாதம் எங்காவது பேசப்பட்டதா என்று தெரியவில்லை. அதேமாதிரி கமலஹாசனின் ‘தேவர் மகன்’ செய்த அளவில் பாதி கூட பாரதிராஜாவின் படங்கள் குலப் பெருமை பேசினவா என்பதும் கேள்விக் குறிதான்.

ஆனால் ‘கபாலி’யில் முடிந்த அளவு வெளிப்படையாக தலித்தியம் கையாளப்படுகிறது. ‘ஆண்ட பரம்பரை’, ‘ஆளப் போகும் பரம்பரை’ போன்ற குறிப்புகள் வருகின்றன. ‘உன்னைய எல்லாம் வீட்டுக்குள்ளேயே விடாம வெச்சிருந்தோம்’ என்று வசனங்கள் வருகின்றன. அம்பேத்கர் படங்கள், அவர் போற்றிய புத்தர் படங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன. படத்தில் வரும் முக்கியமான தொண்டு நிறுவனத்தின் பெயர் Free Life Foundation. ஆரம்பம் முதல் கடைசி வரை கலகக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.

எனவே, இதர படங்களில் மேட்டுக்குடி குறிப்புகள் வருவதற்கும், ‘கபாலி’யில் தலித்தியம் வருவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் அடிநாதமாக ஓடிய இழை இங்கே கொஞ்சம் வலிமையாகவே ஒலிக்கிறது.

ஆனால் இதனை பாலச்சந்தர், பாரதிராஜா செய்தார்களே என்றெல்லாம் சொல்லி நியாயப்படுத்த முயல வேண்டாம் என்று நினைக்கிறேன்.

ஜே.ஸி எனும் கறுப்பின ராப் பாடகர் சகஜமாக ‘நிக்கர்’ (Nigger) என்கிற பதத்தை தன் பாடல்களில் பயன்படுத்துவார். ஆனால் ஒரு வெள்ளை இனப் பாடகர் சும்மா கிண்டலுக்கு கூட அதனை பொதுவெளியில் பயன்படுத்த முடியாது. அதே மாதிரி கறுப்பர்கள் இனத்தின் பெருமை பற்றி பாப் மார்லி பாடல்கள் பாடி இருக்கிறார். ஆனால் தவறியும் வெள்ளை இனப் பெருமை பேசி ஒரு லேடி காகாவோ அல்லது மெட்டாலிகாவோ பாடிவிட முடியாது. (அப்படிப் பாடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களை White Power அல்லது Nazi Punk குழுக்கள் என்று அழைப்பார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் இந்தக் குழுக்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் தடையற்ற கருத்து சுதந்திரத்தால் இந்தக் குழுக்கள் அங்கே இயங்க முடிகிறது.)

அதே மாதிரிதான் இங்கும் தலித்திய குரல் தன்னம்பிக்கையோடும் வெளிப்படையாகவும் ஒலிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பிராமணியமோ, தேவரியமோ எங்காவது ஒலித்தால் அது முகம் சுளிக்க வைக்கவும் செய்கிறது. செய்ய வேண்டும்.

‘பாத்தியா…தேவன்டா!’ என்று ஒரு பதிவு அருவருப்பை வரவழைக்கிற அதே சமயம், ‘ஆமாடா…நான் பறச்சிதான்!’ என்று கவிஞர் சுகிர்தராணி போட்ட பதிவு மரியாதையையும், நம்பிக்கையையும் வரவழைக்கிறது. இரண்டுமே சாதிப் பதிவுகள்தான். ஆனால் ஒன்று ‘ஆண்ட பரம்பரை’ என்று நம்பிக்கொண்டு அதை வைத்து அடுத்தவர்களை ஒடுக்கி வைக்கலாம் என்று எண்ணுபவனின் திமிர்க் குரல். அடுத்ததோ ஒடுக்கப்பட்ட பரம்பரையில் இருந்து வந்து முன்னேறி தன் இருப்பை வலிமையாக சமூகத்தில் முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவரின் கலகக் குரல்.

எனவே ‘அவன் தன் சாதிப் பெருமையை பேசுகிறானே, அப்போ நானும் பேசுவேன்’ என்பது தலித் ஆதரவாளர்கள் வாதமாக இருக்கக் கூடாது. ‘அவன் பேசுகிறானோ இல்லையோ, நான் பேசுவேன்’ என்பதாக இருக்க வேண்டும். White Power இசைப் பாடகர்களை அடிக்கடி ஐரோப்பிய அரசுகள் நாடு கடத்தி வருகின்றன. எனவே அவர்கள் ஒளிந்து ஒளிந்துதான் தங்கள் இசையை பரப்ப வேண்டி இருக்கிறது. அதேசமயம் ஜேஸி-யின் கறுப்பினவாதம் பேசும் இசைத்தகடுகள் விற்பனையில் சாதனை படைக்கின்றன. கிராமி விருதுகள் பெறுகின்றன. அமெரிக்காவின் கனவுக் கன்னி பியான்ஸேவே அவர் மேல் காதல் வயப்பட்டு மணம் புரிகிறார்.

அதுபோலவே தேவரியம், மற்றும் பார்ப்பணியம் பேசுபவர்கள் கொஞ்சம் ஒளிந்துதான் தங்கள் வேலையை செய்யும் நிலைக்கு ஆளாக வேண்டும். ஆனால் தலித்தியம் பேசும் கலைகள் முன்னணி பெற வேண்டும். ‘நான் படிப்பேண்டா! மேல வருவேண்டா! கோட், சூட் போடுவேன்டா’ என்று கபாலி செய்வது மாதிரி, கால் மேல் கால் போட்டுக்கொண்டு வசனம் பேச வேண்டும்.

– ஸ்ரீதர் சுப்பிரமணியம்