“கபாலி’யில் ரித்விகா பாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்!”

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கபாலி’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரித்விகா நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்தது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், ரித்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார்.

கடந்த 12ஆம் தேதி வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறது படக்குழு.

இப்படத்துக்காக இதுவரை வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் எதிலும் ரித்விகா இல்லை. இது குறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, “இப்படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரித்விகா தான். அதனால் தான் அவருடைய புகைப்படங்களை வெளியிடாமல் வைத்திருக்கிறோம். படத்தைப் பார்க்கும்போது ரித்விகா கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும்.

மேலும், ரஜினியும் ரித்விகாவும் வரும் காட்சிகளை காட்சிப்படுத்தும்போது ரஜினி ஒரு முறை இயக்குநர் ரஞ்சித்திடம், “என்னப்பா.. இந்தப் பொண்ணு இந்த சின்ன வயதில் இப்படி நடிக்குது” என்று ஆச்சர்யப்பட்டார்.

ஒரு முறை ரித்விகா வசனம் பேசி முடித்து கட் சொன்னவுடன், ரஜினி ரொம்ப நேரம் கைதட்டி பாராட்டினார். அந்த அளவுக்கு ரித்விகாவின் பாத்திரம் இருக்கும். என்ன கதாபாத்திரம் என்று கேட்காதீர்கள்” என்று தெரிவித்தது.