ஜோஷ்வா இமை போல் காக்க – விமர்சனம்

நடிப்பு: வருண், ராஹே, கிருஷ்ணா, திவ்யதர்ஷினி (டிடி), மன்சூர் அலி கான், கிட்டி, விசித்ரா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்

ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கதிர்

படத்தொகுப்பு:  அந்தோணி

இசை: கார்த்திக்

தயாரிப்பு: ‘வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்’ ஐசரி கே.கணேஷ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

காதலும் வீரமும் தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்பு என்பார்கள். அன்றைய சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்கள் வரையிலான படைப்புகள் இதற்கு உதாரணங்களாக விளங்குகின்றன. அதிலும், கௌதம் வாசுதேவ் மேனன் தன் படங்களில் ஸ்டைலிஷாக முன்வைக்கும் ரசனையான காதலும், அதிரடியான ஆக்‌ஷனும் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை; கொண்டாடப்பட்டு வருபவை. அவரின் இந்த வெற்றி ஃபார்முலாவில் உருவாகி, அவரது தனி முத்திரைகள் தாங்கி, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்திருக்கிறது ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம்.

இதன் ஒருவரிக் கதை என்ன என்பதை படத்தின் தலைப்பே சொல்லிவிடுகிறது. ஆம், ‘இமை போல் காக்கும் மெய்க்காப்பாளன் ஜோஷ்வா’ என்பது தான் அது. யாரை இமை போல் காக்கிறார் ஜோஷ்வா? வேறு யாரை…? கதையின் நாயகியைத் தான்.

0a1b

லண்டனில், சர்வதேச அளவில் கூலிக்கு கொலை செய்யும் காண்ட்ராக்ட் கில்லராகத் திகழ்பவர் ஜோஷ்வா (வருண்). எத்தனை ஆபத்தான அசைன்மெண்ட்டாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக செய்து முடிக்கும் அசகாய சூரர் அவர். அப்படி போட்டுத் தள்ளும் அசைன்மெண்ட்டுக்காக சென்னைக்கு வந்த இடத்தில், நாயகி குந்தவி சிதம்பரத்தை (ராஹே) தற்செயலாகப் பார்க்கிறார். பார்த்ததும் காதல் கொள்கிறார். காதல் கொண்டதும் பேசிப் பழகுகிறார். பழக ஆரம்பித்ததும் தானொரு காண்ட்ராக்ட் கில்லர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையைச் சொல்லிவிடுகிறார். நாயகி குந்தவி, தான் அமெரிக்காவில், நியூயார்க் நகரில் வழக்கறிஞராக இருப்பதைச் சொல்லுகிறார். ஜோஷ்வா தன் காதலைத் தெரிவித்துவிட்டு, “உன்னைப் பார்த்ததிலிருந்து கொலைத் தொழிலை விட்டுவிட முடிவு செய்து விட்டேன்” என்று கூறுகிறார். இதில் இம்ப்ரஸ் ஆகாத குந்தவி, ஜோஷ்வாவின் காதலுக்கு “நோ” சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றுவிடுகிறார். ஆனால், அவரிடம் சொன்னது போலவே காண்ட்ராக்ட் கில்லர் வேலைக்கு முழுக்குப் போடும் ஜோஷ்வா, சமூகத்தில் செல்வாக்கு உள்ள பெரிய மனிதர்களுக்கு (வி.வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனத்தில் சேர்ந்து, மெய்க்காப்பாளர் (பாடிகார்டு) பணி செய்து வருகிறார். (இவை அனைத்தும் படம் தொடங்கிய பத்து / பதினைந்து நிமிடங்களுக்குள் பரபரவென காட்டப்பட்டு விடுகின்றன.)

உலகப் பிரசித்தி பெற்ற போதைப்பொருள் கடத்தல் மன்னனான மெக்ஸிகன் ஒருவன், நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு எதிராக வாதாடி, தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கான வழக்கறிஞர் குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக சர்வதேசக் கொலைக் கும்பலால் கொலை செய்யப்பட, கடைசியில் வழக்கறிஞர் குந்தவி மட்டும் எஞ்சியிருக்கிறார். இறுதி விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு வரும்முன் அவரையும் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்பதில் கொலைக்கும்பல் தீவிரமாக இருக்கிறது. அக்கும்பலிடமிருந்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, வி.வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனத்தை அணுகுகிறார் குந்தவி. அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஜோஷ்வா, குந்தவிக்கு மெய்க்காப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

பாதுகாப்புக் கருதி சென்னை வரும் குந்தவியோடு ஜோஷ்வாவும் வருகிறார். இங்கு குந்தவிக்கு அடுக்கடுக்காக ஏற்படும் ஆபத்துக்கள் என்ன? அவற்றை எவ்வளவு சிரமப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து, ஜோஷ்வா முறியடிக்கிறார்? அவர் மீது குந்தவிக்கு காதல் அரும்பியதா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு பிரமிப்பூட்டும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் விடை அளிக்கிறது ‘ஜோஷ்வா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1e

இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷின் சகோதரி மகனும், பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான வருண், நாயகன் ஜோஷ்வாவாக நடித்திருக்கிறார். அவரது உடற்கட்டும், முகவெட்டும் ’லவ் சப்ஜெக்ட் ஹீரோ’ என்பதைக் காட்டிலும், ’ஆக்‌ஷன் சப்ஜெக்ட் ஹீரோ’ என்பதற்கு பொருத்தமாக இருக்கும் என்பதைக் கண்டுணர்ந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இந்த படத்தில் காதல் காட்சிகள் குறைவாகவும், ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாகவும் வைத்து வருணின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். முதலில் காண்ட்ராக்ட் கில்லராகவும், பின்னர் நாயகியின் பாடிகார்டாகவும் வரும் அருணும் தன் உடலை வருத்தி உழைத்து, சிறப்பாக நடித்து, தன்னை அறிமுக ஆக்‌ஷன் ஹீரோவாக நிலை நிறுத்தியிருக்கிறார். பாராட்டுகள்.

நாயகி கதாபாத்திரத்தைக் கையாளுவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் எடுத்திருப்பவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த பெயரை இந்த படத்திலும் தக்க வைக்கும் விதமாக, அமெரிக்க வழக்கறிஞர் குந்தவியாக நடித்திருக்கும் ராஹேவை புதுமுகம் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த நடிகை போல் அருமையாக நடிக்க வைத்திருக்கிறார். காதல், அச்சம் ஆகிய உணர்வுகளை கண்கள் மூலமே பார்வையாளர்களுக்கு கடத்துவதில் ராஹே வெற்றி பெற்றுள்ளார். தன் தந்தையையே கொல்ல நேர்ந்த காட்சி, ராஹேவின் அபார நடிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

நாயகனுக்கு அசைன்மெண்ட் கொடுக்கும் மாதவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டிடி என்ற திவ்யதர்ஷினி, அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

உள்ளூர் ரவுடி கதாபாத்திரத்தில் வரும் கிருஷ்ணா, நாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் வரும் கிட்டி, மற்றும் ஆளுக்கொரு காட்சியில் வரும் மன்சூர் அலிகான், விசித்ரா ஆகியோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

எளிமையான கதைக்கருவையும், மெல்லிசான ஒன்லைனையும் வைத்து, சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, ஒரு சர்வதேச அளவிலான அதிரடி ஆக்‌ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். சுமார் இரண்டு மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு, திணறத் திணற ஆக்‌ஷன் காட்சிகளில் மூழ்கடித்து, படத்தை விறுவிறுப்பாக, வித்தியாசமாக நகர்த்திச் சென்றுள்ளார். வசனத்தில் தமிழோடு ஆங்கிலத்தைக் கலப்பது இந்த இயக்குநரின் ஸ்டைல் என்பதற்காக, அநியாயத்துக்கு இவ்வளவு வசனங்களை ஆங்கிலத்திலேயே பேசி வெறுப்பேற்ற வேண்டுமா? ‘படத்தில் வருபவர்கள் லண்டன்காரர்கள், நியூயார்க்காரர்கள்’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டாமல், கௌதம் வாசுதேவ் மேனன் இந்த தவறை அடுத்தடுத்த படங்களில் திருத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், படத்தொகுப்பாளர் ஆண்டனி, இசையமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், படம் ஹாலிவுட் தரத்தில் நேர்த்தியாக வர உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

‘ஜோஷ்வா’ – திரையரங்கைத் தெறிக்கவிடும் துப்பாக்கிச் சண்டைகளுக்காக பார்க்கலாம்!