அன்புமணிக்கு எதிராக டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்!

கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) அமைப்பு சார்பில் ‘சமூக நீதி’ என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா, எஸ்எஃப்ஐ, ஏஐஎஸ்ஏ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்பு‌மணியின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய மாணவர்கள், தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர்.

“குடிசை கொளுத்தியே வெளியேறு”, “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். ஜேஎன்யூவில் பயிலும் தமிழக மாணவர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

0a1l

முன்னதாக ஜேஎன்யூ மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித், அன்புமணிக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். “தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி ‘சமூக நீதி’யைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா?” என எதிர்ப்பு தெரிவித்து, உமர் காலித் தனது முக நூலில் வெளியிட்ட பதிவு:-

 “தர்மபுரி எம்.பி.யான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து பேச அழைக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டமாகனது, அவமானகரமானது. அன்புமணி, 2012-ல் 200 தலித் வீடுகள் கொளுத்தப்பட்ட தர்மபுரியிலிருந்து எம்.பி. ஆனவர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாமக முக்கியப் பங்கு வகித்தது. வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் மணம் புரிந்துகொண்டதன் பேரில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டது.  அந்த தலித் இளைஞர் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடைய அம்மா, “இது கொலைதான்” எனத் தெரிவித்தார்.

இவை அனைத்தும் நடந்தேறிய நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளுக்கு எதிரான திட்டமிடப்பட்ட அரசியலை தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறது பாமக. தலித் ஆண்கள் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் உயர்சாதி பெண்களை கவர்வதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார். இதை முன்வைத்து வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டு, தலித்துகள் மீது தாக்குதலும் நடத்தப்படுகிறது. தேர்தல் கால பலன்களை அறுவடை செய்யவே இவையெல்லாம்.

எம்.பி.யாக இருந்த அன்புமணி ராமதாஸ், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேரணியை நடத்தியிருக்கிறார். தலித்துகளுக்கு எதிரான பாதையை போட்டுக் கொடுத்திருக்கும் தன் தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸின் பாதையில் இவர் பயணிக்கிறார். இது போன்ற ஒருவர்தான் ஓபிசி ஃபாரத்தில் சமூக நீதி குறித்து பேச வேண்டுமா? அதிகாரம் மிக்க அமைச்சர்களால் சமூக நீதியை அடைந்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை ஒருங்கிணைப்பதன் மூலமே இதைச் செய்ய முடியும்.

இந்த அழைப்பு அன்புமணிக்கு அனுப்பப்பட்டிருப்பது தொடர்பாக சில மாணவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் எங்களுடன் இணைய வேண்டும்.

இவ்வாறு உமர் காலித் கூறியிருந்தார். இதனையடுத்து ஜேஎன்யூ மாணவர்கள் இன்று அன்புமணிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.