குஜராத் தேர்தல்: ராகுல் காந்தி – தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி சந்திப்பு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை மதத்தினர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. ஷத்ரிய தாக்கூர் சேனா தலைவர் அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸில் இணைந்துள்ளார். படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேலை காங்கிரஸ் கூட்டணியில் இணைவது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

இந்நிலையில், குஜராத் தலித் சமூக தலைவரான ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் அரைமணிநேரம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் மேவானி கூறியதாவது:

‘போராட்டம் நடத்திய தலித் மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். உயிரிழந்த கால்நடைகளின் தோலை உரிப்பது, மனிதக் கழிவுகளை அள்ளுவது போன்ற பணிகளில் ஈடுபட்டுவரும் தலித் மக்களுக்கு வேறு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். விவசாயம் செய்வதற்கு தலித் மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகள் குறித்து ராகுல் காந்தியுடன் பேசினேன்.

எங்கள் கோரிக்கைகளில் 90 சதவீதத்தை ஏற்றுக் கொள்வதாக அவர் ஒப்புக் கொண்டார். எங்கள் கோரிக்கையை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். குஜராத்தில் ஆளும் பாஜக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி கூறினார்.