வெள்ளை பன்றியை வைத்து உலக அரசியலை சொல்லும் படம் ‘ஜெட்லி’!

வாயில்லா ஜீவன்களின் சாகசங்கள் எப்போதுமே  மனித மனங்களைக் கவர்ந்துவிடும். அதன் அடிப்படையில் ஆடு, மாடு, கோழி, நாய், ஈ, குரங்கு, பூனை, யானை, கழுதை என பல ஜீவன்கள் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறன. அந்த வரிசையில் விடுபட்டுப்போன வெள்ளை பன்றியை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் ‘ஜெட்லி’.

உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு வித்தியாசமான படமாக உருவாக்கப்பட்டுவரும் “ ‘ஜெட்லி’ படத்தை, ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.

முக்கிய நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன்சாய் இருவரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எத்திராஜ் பவன் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நைப் நரேன், நிப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜெகன்சாய்.

இப்படம் பற்றி இயக்குனர் ஜெகன்சாய் கூறுகையில், “இது காமெடி படம் மட்டும் அல்ல; உலக அரசியலை சொல்லும் படம். எந்த நாடும் அண்டை நாடுகள் மீதுள்ள அக்கறையால் மட்டும் அன்புக்கரம் நீட்டுவதில்லை. தங்கள் வியாபாரச் சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கத்துடன் தான் அண்டை நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்கின்றன. இதை தான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். இதுவரை யாருமே இந்த விஷயத்தை பதிவு செய்ததில்லை.

வெள்ளை பன்றியை வைத்து வித்தியாசமான சில விஷயங்களை படமாக்கி இருக்கிறோம். சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற உள்ளது” என்றார் இயக்குனர் ஜெகன்சாய்.

ஒளிப்பதிவு – துலிப்குமார்

இசை – சி.சத்யா

பாடல்கள் – வைரமுத்து

கலை – குருராஜ்

சண்டை பயிற்சி – நைப் நரேன்

படத்தொகுப்பு – பால்ராஜ்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி