எப்போது டிஸ்சார்ஜ் என்பதை முடிவு செய்வது மருத்துவரா? நோயாளியா?

அப்போலோ மருத்துவமனை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கையேடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் ரெட்டி கூறியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார். தன்னைச் சுற்றி நடப்பதை அவர் நன்கு உணர்ந்து கொள்கிறார். அவருக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை அவரே கேட்டுப் பெறுகிறார். ஜெயலலிதா குணமடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போது டிஸ்சார்ஜ் என்பதை முதல்வரே முடிவு செய்ய வேண்டும்.

அவர் பூரண குணமடைந்ததற்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமல்ல அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் நிபுணர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் என அனைவரது பங்களிப்பும் இருக்கிறது” என்றார்.

அதெல்லாம் சரி… “எப்போது டிஸ்சார்ஜ் என்பதை முதல்வரே முடிவு செய்ய வேண்டும்” என்கிறாரே பிரதாப் ரெட்டி… சிகிச்சைக்காக உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் எப்போது டிஸ்சார்ஜ் என்பதை அவரே முடிவு செய்வாரா? அல்லது அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் முடிவு செய்வாரா?

எப்போதுமே மருத்துவர் தான் முடிவு செய்வார் என்பது நடைமுறை. ஆனால், அப்போலோவுக்குள் ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டதில் இருந்து எல்லாமே தலைகீழாக, புரியாத புதிராகவே நடந்து வருகிறது.

என்னமோ போடா மாதவா…!