ஜெயலலிதாவுக்காக 6 மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!

விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 14 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார். விருத்தாச்சலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் 4 பேர் வெயிலுக்கு இறந்ததால், அருப்புக்கோட்டை பொதுக்கூட்டத்தில் முன்னெச்சரிக்கையாக நடமாடும் மருத்துவமனை, ஆம்புலன்ஸ்கள், கழிப்பிட அறை, 10 அடிக்கு ஒரு இடத்தில் குடிநீர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

* பொதுக்கூட்டத்துக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த பெண்கள், ஆண்கள் பெரும்பாலானோர் காலணி அணியாததால் தரையில் கால் வைக்க முடியாமல் சிரமப்பட்டனர். அவர்கள், பிளக்ஸ் பேனர் துணிகளைக் கிழித்தும், தண்ணீர் பாக்கெட் எடுத்து வந்த சாக்குத் துணிகளைக் கிழித்தும் கால்களில் சுற்றிக் காலணிகளாக்கி கொண்டது பரிதாபமாக இருந்தது.

* கூட்டத்துக்கு பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களே வந்திருந்தனர். காலை 9 மணி முதலே பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் லாரிகள், பஸ்கள், ஆட்டோக்களில் அழைத்து வந்து அவர்கள் குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிமுகவினர் ஒரு சாப்பாடு பார்சல், செலவுக்கு ரூ.200 வழங்கியதாக தெரிவித்தனர்.

* வெயிலில் பெண்கள் காலை 10 மணி முதல் ஜெயலலிதா பேசி முடித்த மாலை 4 மணி வரை ஒரே இடத்தில் 6 மணி நேரம் காக்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா பேசி முடிக்கும் முன்பே பெண்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். போலீஸார், இன்னும் 5 நிமிடத்தில் முடிந்துவிடும் என அவர்களை கெஞ்சிக் கூத்தாடி அமர வைத்தனர்.

* வெயில், புழுக்கத்துடன் வியர்வை கொட்டியதால் அதிமுகவினர் விசிறி மற்றும் தொப்பிகளை வழங்கினர். ஆனாலும், வெயிலைச் சமாளிக்க முடியாமல் பெண்கள், அம்மாவை பார்க்க இப்படி உட்கார வைச்சுட்டார்களே என புலம்பினர்.

* ஜெயலலிதா, இந்த தேர்தலில் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் வடக்கு பார்த்து பேசும் வகையிலேயே அமைக்கப்படுகிறது. அதுபோல், அருப்புக்கோட்டையிலும் ஜெயலலிதா வடக்கு பார்த்தே பேசும் வகையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

* ஜெயலலிதா வரும் வரை சாப்பிடாமல் வெயிலில் சோர்ந்திருந்த பெண்கள், அவரை பார்த்தவுடன் மேடையை நோக்கிச் சென்று இரட்டை விரலைக் காட்டி குலவையிட்டு விட்டு திரும்பினர்.

* ஜெயலலிதா பேசும் மேடையில் பாதுகாப்பு போலீஸாரைத் தவிர, வேறு யாருக்கும் அனுமதியில்லை. ஆனால், நேற்று ஜெயலலிதாவுக்குப் பின்புறம் இடதுபுறத்தில் சந்தனக் கலர் கோட் அணிந்திருந்த ஒருவர் ஜெயலலிதா பேச்சின் இடையே, அவ்வப்போது பெண்கள் பகுதியை நோக்கி கைதட்டச் சொல்லி சைகை காட்டி கைத்தட்டிக்கொண்டே இருந்தார்.