“இயக்குனர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படமா? நம்ப முடியவில்லை!” – ஜி.ஆர்.
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
உண்மையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. இப்படி ஒரு அபூர்வமான திரைப்படத்தை தயாரித்த தோழர் பா.இரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துகள்.
இந்தப் படத்தின் கடைசிக் காட்சியைத் தவிர, முதல் காட்சியிலிருந்து சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதிய வன்மங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். சாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்களின் மரணங்களை ஒரு பாடலின் வழியே காட்டிவிட்டு, இறுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் முடித்திருப்பது உண்மையில் பாராட்டிற்குரியது.
திரைப்படம் தயாரிப்பது என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்ட இந்த காலத்தில், இது போன்ற நேர்த்தியான படைப்பைத் தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் ஆகியோரை பாராட்டுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.