வலிமை இல்லாத கதையை நவீன தொழில் நுட்பம் தூக்கி நிறுத்தி விடாது!

மனித உயிரினம் தனது சுயநலத்துக்காக நமது பூமியையும், அதிலுள்ள பல உயிரினங்களையும் அழித்தொழிப்பதன் மூலம் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் அபாயகரமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்று சூழலியலாளர்கள் கவலையுடன் எச்சரித்துவரும் வேளையில், “இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல (THE WORLD IS NOT JUST FOR HUMANS)” என்ற வாசகம் இடம் பெற்றிருந்த ‘2 பாய்ண்ட் ஓ’ படத்தின் டீசர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…

ஓர் அதிகாலையில், “புள்ளினங்காள்…” என்று பாடியபடி நடந்துவரும் பறவையியல் நிபுணரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான டாக்டர் பட்சிராஜன் (அக்ஷய்குமார்), ஒரு செல்போன் டவரிலிருந்து பறவைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். மனம் உடைகிறார். அந்த செல்போன் டவரிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.

இதனையடுத்து சென்னை மாநகர் முழுவதும் மக்களிடம் இருக்கும் செல்போன்கள் மர்மமான முறையில் பறவைகள் போல் வானில் பறந்து மாயமாகின்றன. பின்னர் செல்போன்கள் எல்லாம் சேர்ந்து பெரிய படையாகத் திரண்டுவந்து செல்போன் விற்ப்னையாளர், நெட்வொர்க் நிறுவன உரிமையாளர் ஆகியோரை அடுத்தடுத்து படுகொலை செய்துவிட்டு மீண்டும் மாயமாகின்றன. நகரமே அல்லோலகல்லோலப்படுகிறது.

செய்வதறியாது திகைக்கும் அரச நிர்வாகம், ரோபோ தயாரிப்பதில் நிபுணரான டாக்டர் வசீகரனின் (ரஜினிகாந்த்) உதவியை நாடுகிறது. அவரோ, தனது முந்தைய (‘எந்திரன்’ படத்து) கண்டுபிடிப்பான ‘சிட்டி’ என்ற ரோபோவை மீண்டும் உருவாக்கி களத்தில் இறக்கினால் தான் இப்பிரச்சனையை எதிர்கொள்ள முடியும் என்கிறார். அரசு அனுமதி கொடுக்க, ‘சிட்டி’ ரோபோ களமிறங்குகிறது. செல்போன்கள் மாயமாவதற்கும், அதனையொட்டி நடந்த படுகொலைகளுக்கும் ஒரு ராட்சச பறவை தான் காரணம் என்பதையும், தற்கொலை செய்துகொண்ட பறவையியல் நிபுணர் டாக்டர் பட்சிராஜனின் ஆவி தான் அந்த ராட்சச பறவை என்பதையும் அது கண்டுபிடிக்கிறது.

“ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று ‘சிட்டி’ ரோபோ கேட்க, பட்சிராஜனின் ஆவி தனது உருக்கமான பிளாஷ்பேக்கை சுருக்கமாகச் சொல்லுகிறது. தான் உயிரோடு இருக்கும்போது தனக்கும் பறவைகளுக்கும் இடையிலிருந்த பாசப்பிணைப்பு, செல்போன்களாலும், செல்போன் டவர்களாலும் உருவாகும் கதிர்வீச்சால் பறவைகள் அழிந்துவருவதைக் கண்டறிந்து அதை கட்டுப்படுத்த நடத்திய போராட்டம், ஆனால் லாபவெறி பிடித்த செல்போன் நிறுவனத்தினர், செல்போன் விற்பனையாளர்கள், கமிஷன் வாங்கும் அமைச்சர்கள் – அதிகாரிகள் ஆகியோர் தன் கோரிக்கைக்கு செவி சாய்க்காதது, இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டது, இப்போது செல்போன்களை அழித்தொழிக்கும் முயற்சியில் தான் இறங்கியிருப்பது என சகலத்தையும் சொல்லி முடிக்கிறது.

“உன் ஆதங்கம் நியாயமானது; அதற்காக மனிதர்களைக் கொல்வது சரியல்ல” என்கிறது ‘சிட்டி’ ரோபோ. இதற்குள் அரையரைக்கால்வாசி படம் ஓடிவிடுகிறது. இதன்பின் செல்போன் பயன்பாட்டையும் கதிர்வீச்சையும் கட்டுப்படுத்தி பறவையினங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பட்சிராஜனின் நியாயமான கோரிக்கையை  நிறைவேற்ற ‘சிட்டி’ ரோபோவும் அதை உருவாக்கிய டாக்டர் வசீகரனும் முயற்சி செய்வார்கள் என்று பார்த்தால்…., சுற்றுச்சூழல் ஆர்வலரான பட்சிராஜனை (அதாவது அவரது ஆவியை) கொடூர வில்லனாகவும், அதை அழிக்கும் கார்ப்பரேட் கைக்கூலியான டாக்டர் வசீகரன் மற்றும் அவரது ரோபோக்களை சாகச நாயகர்களாகவும் கர்ணகொடூரமாக சித்தரித்து, மீதி காலேயரைக்கால்வாசிப் படத்தை ஒப்பேற்றி, “நான் இன்னும் அநீதியான ‘ஜெண்டில்மேன்’ இயக்குனர் தான்” என்று கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் பிரகடனம் செய்து படத்தை முடித்திருக்கிறார் ஷங்கர்.

படத்தின் பெரும்பகுதியில் ரஜினிகாந்த் ஆண் ரோபோவாகவும், எமி ஜாக்சன் பெண் ரோபோவாகவும், அக்ஷய்குமார் ராட்சச கிராபிக்ஸ் பறவையாகவும் வருவதால், இவர்களோடு ஒன்ற முடியாமல், வீடியோ கேம் பார்க்கும் சிறுவர்களைப் போல தேமே என்று உட்கார்ந்திருப்பதைத் தவிர ரசிகர்களுக்கு வேறு வழியில்லை.

படம் வெளிவருவதற்கு முன் ஷங்கர் அண்ட் கோ பிரமாதமாகச் சொன்ன ‘பிரமாண்டம்’, ‘கிராபிக்ஸ் காட்சிகள்’, ‘3டி’ உள்ளிட்ட எல்லா தொழில்நுட்ப லொட்டுலொசுக்குகளும் படத்தில் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அவை ஒரு கட்டத்தில் பயங்கர எரிச்சலையும், சோர்வையும் ஏற்படுத்தி விடுகின்றன. உள்ளடக்கம் வலுவில்லாத கதையை எந்த நவீன தொழில்நுட்ப மாயாஜாலத்தாலும் தூக்கி நிறுத்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

‘2 பாய்ண்ட் ஓ’ – பிரமாண்ட பம்மாத்து!