வெப்பம் குளிர் மழை – விமர்சனம்

நடிப்பு: திரவ், இஸ்மத் பானு, ரமா, எம்.எஸ்.பாஸ்கர், மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி மற்றும் பலர்

இயக்கம்: பாஸ்கல் வேதமுத்து

ஒளிப்பதிவு: பிரித்வி ராஜேந்திரன்

படத்தொகுப்பு: திரவ்

இசை: சங்கர் ரங்கராஜன்

தயாரிப்பு: ’ஹேஷ்டாக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்‌ஷன்ஸ்’ திரவ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் உள்ள  சிறிய கிராமம் ஒன்றில் இக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

0a1b

இக்கிராமத்து இளைஞர், நாயகன் பெத்தபெருமாள் (திரவ்), சினைக்குக் கத்தும் மாடுகளுக்கு, செயற்கை முறையில் கருத்தரிப்பதற்காக சினைஊசி போடும் வேலை செய்து வருபவர். இவரது மனைவி பாண்டி (இஸ்மத் பானு). இருவரும் ஊடலும் கூடலுமாக மிகவும் மகிழ்ச்சியாக, அன்யோன்யமாக வாழ்ந்து வந்தாலும், திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை என்பது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் ஊர்மக்கள் பெத்தபெருமாள் – பாண்டி தம்பதிக்கு பிள்ளை இல்லாததை ஒரு பெருங்குறையாக சுட்டிக்காட்டி, குத்திக்காட்டி, ஏளனமாகப் பேசுகிறார்கள். பிள்ளையில்லா பிரச்சனையைத் தீர்க்க, பெத்தபெருமாளின் அக்கா, பெத்தபெருமாளை விட 15 வயது குறைந்த தனது மகளான பள்ளிச்சிறுமியை அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார். பேரக் குழந்தை வேண்டும் என்பதற்காக, பெத்தபெருமாளின் அம்மாவும் (ரமா) இதற்கு உடன்படுகிறார்.

இவற்றால் எல்லாம் நிம்மதி இழக்கும் தம்பதி, ஊரார் யாருக்கும் தெரியாமல் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள நகரத்து மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். பரிசோதனையில், பெத்தபெருமாளுக்கு மருத்துவ ரீதியில் சிக்கல் இருப்பதால், அவருக்கு குழந்தை பிறக்காது என்பது தெரிய வருகிறது. இது தெரிந்தால் கணவர் மனம் உடைந்துபோவார் என்பதால், அதை அவருக்குத் தெரியாமல் மறைத்துவிடுகிறார் பாண்டி. அதே நேரத்தில், தனக்கும் தன் கணவருக்கும் உற்றமும் சுற்றமும் தரும் அழுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்காக, மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று, கணவருக்குத் தெரியாமல் துணிந்து ஒரு முடிவு எடுக்கிறார். முகம் தெரியாத ஒருவரின் விந்தணுவை செயற்கை முறையில் செலுத்தி, கருவுற்று, பிள்ளைப்பேறு அடைவது என்பது தான் அது.

இது தெரியாத பெத்தபெருமாள், பாண்டி பெற்றெடுக்கும் பிள்ளையை தன் மகன் என்று கொஞ்சுகிறார். கூத்தாடுகிறார். இதைப் பார்க்கும் பாண்டியை குற்றவுணர்வு உறுத்துகிறது. பிள்ளை வளர வளர, அவனிடம் பெத்தபெருமாள் காட்டும் பாசம் அதிகமாக அதிகமாக, பாண்டிக்கு குற்றவுணர்வும் அதிகரிக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் “இது உன் பிள்ளை இல்லை” என்று வெடிக்கும் பாண்டி, கணவரிடம் முழு உண்மையையும் சொல்லி விடுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் பெத்தபெருமாள். அதன்பிறகு என்னவெல்லாம் நடக்கிறது? என்பது ‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தின் உணர்ச்சிமயமான மீதிக்கதை.

நாயகன் பெத்தபெருமாளாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் திரவ். முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிகர் போல, எந்த தடுமாற்றமும் இல்லாமல், சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவியிடம் நெருக்கமாக ரொமான்ஸ் செய்வது, ஊராரின் பேச்சால் கலங்குவது, தனது இயலாமையை நினைத்துக் கதறி அழுவது, தனக்குத் தெரியாமல் மனைவி செய்த காரியத்தால் இடி விழுந்தாற்போல் நொறுங்கிப் போவது என அனைத்து உணர்வுகளையும் பார்வையாளர்களுக்குத் துல்லியமாக கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். இன்னொரு கிராமத்து ஹீரோ கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

இதற்குமுன் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் இஸ்மத் பானு, முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக, பாண்டியாக நடித்திருக்கிறார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உரிய இயல்பான அழகும், வெள்ளந்தியான முகமும், சிரிப்பும் அவருக்கு பிளஸ். மிகவும் யதார்த்தமாக நடித்திருப்பதோடு வசன உச்சரிப்பு, உடல் மொழி என தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

திண்ணையில் சும்மா உட்கார்ந்துகொண்டு, வக்கணையாகப் பேசும் கிராமத்து தாத்தாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு ரசனைக்குரியது. நாயகனின் அம்மாவாக வரும் ரமா, நிஜவாழ்க்கை மாமியார்களை அச்சு அசலாக அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் மட்டுமல்ல, நடிப்புக் கலைஞர்கள் அல்லாத கிராமத்து மனிதர்களும் அருமையாக நடித்து, கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

மகப்பேறின்மை என்பது குடும்பங்களிலும், கிராமப்புறங்களிலும் எவ்வளவு கொடுமையான பிரச்சனையாக இருக்கிறது என்பதை இப்படத்தில் அழுத்தமாக சித்தரித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. குழந்தையின்மைப் பிரச்சனையால் மனைவிமார்கள் பெரிதும் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல, கணவன்மார்களும் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியிருப்பது சிறப்பு. மேலும், மருத்துவத்தை நாடாமல், கோயிலுக்குச் சென்றாலே குழந்தை பிறந்துவிடும் என்று நம்பும் காட்சிகள், அறிவியலுக்கு எதிராக கிராமங்களில் இருக்கும் விழிப்புணர்வில்லாத தன்மையை விவரிக்கும் காட்சிகள் போன்றவற்றை பாராட்டலாம். ஆனால் கடைசியில், ”இரு மனங்கள் சந்தோஷமாக இருந்தால்தான் புதிய உயிர் பிறக்கும்” என்ற அறிவியலுக்குப் புறம்பான அபத்தமான கருத்தை இப்படத்தின் நீதிபோதனையாக முன்வைத்திருப்பது இயக்குநரின் அறியாமையைக் காட்டுகிறது. அது சரி… ‘செந்தமிழன்’ போன்ற ’அறிவுஜீவி’யின் சீடரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?!

ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, ஓர் எளிய கிராமத்துக்குள் பயணிப்பதைப் போன்ற சுகமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கிறது.

சங்கர் ரங்கராஜனின் இசையில், மண்வாசனையோடு கூடிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

தயாரிப்பாளராகவும், நாயக நடிகராகவும் பங்களிப்பு செய்திருக்கும் திரவ், படத்தொகுப்பையும் கவனித்திருப்பதாலோ என்னவோ, படத்தின் நீளம் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது. குறைத்திருக்கலாம்.

‘வெப்பம் குளிர் மழை’ – கண்டு களிக்கலாம்!