777 சார்லி – விமர்சனம்

நடிப்பு: ரக்‌ஷித் ஷெட்டி, 777 சார்லி எனும் பெண் நாய், சங்கீதா சிருங்கேரி, பாபி சிம்ஹா மற்றும் பலர்

இயக்கம்: கிரண்ராஜ்

ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ்.காஷ்யப்

இசை: நோபின் பால்

மக்கள் தொடர்பு: நிகில்

குரங்கு, நாய், குதிரை, மாடு போன்ற வளர்ப்பு விலங்குகளை வைத்து வித்தை காட்டும் திரைப்படங்கள் ஏற்கனவே வந்திருக்கின்றன; என்றாலும், அவற்றிலிருந்து வேறுபட்டு, பார்வையாளர்களை எமோஷனலாக ஆட்கொண்டு, நெஞ்சம் நெகிழ வைத்து வெற்றியை ஈட்டியிருக்கிறது இந்த ‘777 சார்லி’ திரைப்படம். கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் இது வெளியிடப்பட்டுள்ளது.

சின்ன வயதில் விபத்தொன்றில் தன் குடும்பத்தை இழந்த நாயகன் தர்மா (ரக்‌ஷித் ஷெட்டி), கொண்டாட உறவுகள் என யாருமில்லாமல் தனித்தே வாழ்கிறார். தான் செய்வது எப்போதும் சரி என்று நினைப்பவர். அவர் வசிக்கும் காலனியைப் பற்றியோ அல்லது அவரது அண்டை வீட்டாரைப் பற்றியோ அக்கறை இல்லாதவர். பெரும்பாலும் எரிச்சலாகவும், அலட்சியமாகவும் இருப்பவர்.  சிகரெட் துண்டுகளும்,  மதுபாட்டில்களும் சிதறிக் கிடக்கும் அவரது வீட்டில் எப்போதும் ஒழுங்கீனம் தாண்டவமாடும். ஆனால், அவர் பணிபுரியும் தொழிற்சாலையில், ஒருநாள் கூட லீவு போடாத சிறந்த தொழிலாளர் என அவர் மதிக்கப்படுகிறார். இதனால் அவரது சக ஊழியர்களின் கோபத்தை சம்பாதிக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், அவர் நண்பர்கள், குடும்பம் அல்லது பிணைப்புகள் இல்லாமல் தனிமையில் இருக்கிறார் – சார்லி சாப்ளின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் பின்னர் ’சார்லி’ என்று பெயரிட்ட லாப்ரடோர் நாய்க்குட்டி அவரது வாழ்க்கையில் வழித்துணையாக வந்து இணையும் வரை. துவக்கத்தில் தன்னிடம் கடுமை காட்டிய நாயகன் தர்மாவின் மனதில் அன்பால் இடம் பிடிக்கிறது சார்லி. பிறகு நீளும் இவ்விருவரின் அன்புப் பயணமே மீதி கதை.

நாயகன் தர்மாவாக வரும் ரக்‌ஷித் ஷெட்டியும், சார்லி எனும் பெயர் கொண்ட பெண்நாயும் படம் முழுக்க ஆக்கிரமித்து அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த நாய் எப்படி இத்தனை இயல்பாக, கச்சிதமாக நடித்திருக்கிறது? எப்படி இதை வேலை வாங்கினார்கள்  என்ற வியப்பூட்டும் கேள்விகள் படம் முழுக்க நமக்குள் அலை மோதிக்கொண்டே இருக்கின்றன.

படத்தின் இரண்டாம் பாதியில் சார்லியின் கடைசி ஆசையை நிறைவேற்ற சார்லியுடன் வட இந்தியா நோக்கி பயணிக்கும் தர்மா, வழியில் பாபி சிம்ஹா உள்பட சில சிறப்பு கதாபாத்திரங்களை சந்திக்கிறார். இப்படியாக வழியில் தோன்றும் சில கதாபாத்திரங்கள் நமக்கு மிகுந்த சுவாரஸ்யம் தருகின்றன.

நகைச்சுவைக்காக சில காட்சிகள் வந்து போகும் கால்நடை மருத்துவர் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். நாயகி சங்கீதா ஸ்ரிங்கிரி இக்கதையில் சம்பிரதாயமாக மட்டுமே வந்து போகிறார்.

“ஒரு மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான உறவு” என்று மட்டும் இந்த படத்தை சுருக்கிவிடக் கூடாது என்பதற்காக, எமோஷனல் தூவல்களை ஆங்காங்கே தூவி, அதிக மெனக்கெட்டிருக்கும் இயக்குனர் கிரண்ராஜை எத்தனை பாராட்டினாலும் தகும்.

அரவிந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். பனிமலையில் நாயும் நாயகனும் ஓடும் காட்சி, இருவருமாக க்ளைடரில் பறக்கும் காட்சி என சில காட்சிகள் மனதில் அழகான ஓவியங்களாக பதிகின்றன.

நோபின் பாலின் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு அழுத்தம் சேர்க்கிறது.

’777 சார்லி’ – நீங்கள் நாய் பிரியர் என்றால் உங்களுக்குப் பிடிக்கும். நீங்கள் நாய் பிரியர் இல்லையென்றாலும் உங்களுக்குப் பிடிக்கும். அனைத்துத் தரப்பினரும் கண்டு களிக்கலாம்!