தனுஷ் நேரில் ஆஜர்: அங்க அடையா ளங்களை சோதிக்க நீதிபதி உத்தரவு!

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் (60), இவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக் கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷின் கல்விச் சான்றிதழ்கள் தனுஷ் தரப்பிலும், அவரை மகனாக உரிமை கோரும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தனுஷின் பத்தாவது வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் இந்த வழக்கில் எதிர்மனுதாரரான கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க மச்ச அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டியதுள்ளது. இதனால் நடிகர் தனுஷ் பிப். 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதன்படி தனுஷ் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜரானார். அப்போது அவருடன் அவரது தாயார் விஜயலெட்சுமி, தந்தை கஸ்தூரி ராஜா ஆகியோரும் இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சொச்சலிங்கம், “நீதித்துறை பதிவாளர் அறையில் வைத்து தனுஷின் அங்க அடையாளங்களை அரசு மருத்துவர் சரிபார்த்து நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

நடிகர் தனுஷ் வருகையால் நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் திரண்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.