அலங்காநல்லூர்: மானத் தமிழர்களின் மறியல் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நேற்று (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு சாலையில் அமர்ந்து அறவழியில் மறியல் போராட்டத்தை துவக்கினார்கள்.

பசி, தாகம், தூக்கம் துறந்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தார்கள். 21 மணி நேரமாக போராடிக்கொண்டிருந்த இவர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் இன்று காலை 6 மணிக்கு இவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினார்கள். இவர்களில் 200க்கு மேற்பட்டோரை கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள்.

இத்துடன் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்ற போலீசாரின் கணக்கு பொய்த்துப் போனது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற 2 கோரிக்கைகளோடு, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்ற 3வது கோரிக்கையையும் சேர்த்துக்கொண்டு, அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் திரண்டெழுந்து, அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தை தொடர்ந்துவிட்டனர்.

போலீசார் மிரட்டியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்கள். வேறு வழியின்றி, இவர்களின் கோரிக்கையை ஏற்று, முதல் கட்டமாக, கைது செய்யப்பட்டவர்களில் 32 பேரை போலீசார் விடுவித்து அனுப்பினார்கள். “ஏனையோரையும் விடுவித்து விட்டோம். ஆனால், அவர்கள் தான், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை போக மாட்டோம் என்று அங்கிருந்து செல்ல மறுக்கிறார்கள்” என்றார் மதுரை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி.

தை மாதத்துக்குள் ஜல்லிக்கட்டு நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அலங்காநல்லூரில் மக்கள் சாலையில் அமர்ந்து தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

ஏற்கெனவே கைதானவர்களும், அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்து வருவதால், தமிழ் உணர்வாளர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து அலங்காநல்லூர் நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அலங்காநல்லூருக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க, போலீசார் பஸ் போக்குவரத்தை நிறுத்தியிருப்பதோடு, சாலைகளில் தடுப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

0a1d

 

Read previous post:
0
‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ 20ஆம் தேதி வெளியாகிறது!

சென்னை போன்ற பெருநகரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தங்களின் பணியின் நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர். பெருகிவரும் இந்த மனித நெருக்கடியின் நிமித்தமாக, பாரம்பரியமிக்க பாலியல்

Close