அம்பானி மனைவியும், ரிசர்வ் வங்கி ஆளுநர் மனைவியும் சகோதரிகளா?

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று நரேந்திர மோடி திடீரென அறிவித்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கூட பணமில்லாமல் அவர்களை அலைக்கழிக்கத் தொடங்கியதிலிருந்து, நரேந்திர மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறார். எவ்வித திட்டமிடலும், முன்னேற்பாடும் இல்லாமல் ரூபாய் நோட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு தார்மீக பொறுப்பேற்று உர்ஜித் பட்டேல் உடனே பதவி விலக வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையும் எழ ஆரம்பித்திருக்கிறது.

அதேநேரத்தில், இன்னொரு தகவலும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீயாய் – வைரலாய் – பரவி வருகிறது. “தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியும் (மேலே உள்ள படத்தில் இருப்பவர்), ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலின் மனைவியும் சகோதரிகள்” என்பது தான் அந்த தகவல்.

அந்த தகவல் உண்மை இல்லை.

ரவீந்திரபாய் தலால் என்பவருக்கு இரண்டு மகள்கள். அவர்களில் ஒருவர், முகேஷ் அம்பானியின் மனைவியான நீத்தா அம்பானி. இன்னொருவர், பந்தராவில் உள்ள அம்பானி குழும பள்ளி ஒன்றில் பணிபுரிந்துவரும் மம்தா தலால். அம்பானி மனைவியின் ஒரே சகோதரி இந்த மம்தா தலால் மட்டுமே. இவரை தவிர அவருக்கு வேறு சகோதரி யாரும் கிடையாது.

மறுபுறம், அனில் ஆர்.பட்டேல் என்பவருடைய மகள் கனன் பட்டேல். இவரை தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திருமணம் செய்திருக்கிறார். இந்த கனன் பட்டேலுக்கு ரச்சனா, ஸ்வேதா என இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.

எனவே, முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியும், உர்ஜித் பட்டேலின் மனைவி கனன் பட்டேலும் சகோதரிகள் அல்ல என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதேநேரத்தில் ராட்சத கருப்புப் பண முதலையான அம்பானிக்கு சாதகமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒருவர் நடந்துகொள்வதற்கு, அவர் அம்பானி மனைவியின் சகோதரியை திருமணம் செய்தவராகத் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஏனெனில் நமக்கு வாய்த்திருக்கும் அரசமைப்பு என்பதே பெருமுதலாளிகளின் நலன் பேணும் அரசமைப்பு தான். எனவே இந்த அமைப்பில் எவன் ரிசர்வ் வங்கி ஆளுநராக வந்தாலும், அவன் அம்பானி உள்ளிட்ட பெருமுதலாளிகளுக்கு சாதகமாகத் தான் இருப்பானேயொழிய, அவர்களின் மென்னியைத் திருகி நியாயம் செய்பவனாக இருக்கவே மாட்டான்.

இதுபோல், இன்னொரு தகவலையும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி காண முடிகிறது. “6 மாதங்களுக்குமுன் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த உர்ஜித் பட்டேலை நரேந்திர மோடி அழைத்து வந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆக்கிவிட்டார்” என்பது தான் அந்த தகவல். இதுவும் உண்மை அல்ல.

ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் கொழிக்க வேண்டும் என பாடுபட்டுக்கொண்டிருந்த உர்ஜித் பட்டேலை 2013ஆம் ஆண்டு ஜனவரியில் அழைத்து வந்து, “3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இரு” என பதவியில் அமர்த்தியது மன்மோகன் சிங் அரசு தான். மோடி செய்தது என்னவென்றால், 2016 ஜனவரியில் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடிவடைந்தபோது, அவரது பதவிக் காலத்தை நீட்டித்ததும், அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனை தந்திரமாக வெறுப்பேற்றி வெளியேறச் செய்துவிட்டு, அவரது இடத்தில் 2016 ஆகஸ்டில் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி உயர்வு கொடுத்து உர்ஜித் பட்டேலை உட்கார வைத்ததும் தான்.

எனவே, பெருமுதலாளிகளுக்குச் சார்பான பொருளாதார கொள்கையை தூக்கிப் பிடித்து, அவர்களுக்கு வெஞ்சாமரம் வீசுவதில் காங்கிரசின் மன்மோகன் சிங்கும், பாஜகவின் நரேந்திர மோடியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். மன்மோகன் சிங் கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகித்ததால், கூட்டணி கட்சிகளின் நெருக்குதலுக்கு பயந்து கொஞ்சம் அடக்கி வாசித்தார். நரேந்திர மோடி தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளதால் தலைகால் புரியாமல் ஆட்டமாய் ஆடுகிறார்.

இந்த புரிதலுடன் மோடியின் ஆட்டத்துக்கு முடிவுரை எழுதுவோம்!

– ராஜய்யா