’தங்கலான்’ பற்றி எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்: “மிகப் பெரிய முயற்சிதான்; ஆனாலும் அயற்சிதான்!”

இந்த வருடத்தின் சிறந்த நடிகராக பல விருதுகள் வாங்கப் போகிற சீயான் விக்ரமுக்கு முதல் பாராட்டு.

இயக்குனர் பா.இரஞ்சித் இந்தப் படத்தின் உருவாக்கத்திற்கு அத்தனைப் படித்திருக்கிறார். சிந்தித்திருக்கிறார். நுணுக்கமாக அக்கறையாக உழைத்திருக்கிறார். அதற்காகவே ஒரு சிறப்புப் பாராட்டு.

படத்தின் தரத்தையும், இயக்குனரின் கரத்தையும் உயர்த்திப் பிடித்திருப்பவர்கள் மூவர்.

முதலில்..இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் .வீட்டுக்குத் திரும்பின பிறகும் காதில் தங்கலானே பாடல் ரீங்காரமிடுகிறது. பின்னணி இசையும் மிரட்டல்.

அடுத்து ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார். அவருக்கு அவ்வளவு வேலை இதில். இதுவே பீரியட் படம். அதற்கும் முந்தைய இன்னொரு காலக் கட்டத்தில் வாழும் அமானுஷ்ய மனிதர்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும். கிளைமாக்சில் நிஜம், எண்ணக் குழப்பம், கற்பனைக் காட்சி என்று மூன்றுவிதமாக காட்சியமைப்புகள் வேறு.

மூன்றாவது.. கலை இயக்குனர் எஸ்.எஸ்.மூர்த்தி. வயல்வெளி, காடு, ஆறு, பாறைப் பகுதி, சுரங்கம் என்று எங்கும் விதவிதமாக செயல்பட வேண்டிய சவால்.

கோலார் தங்க வயல் பகுதியில் தங்கம் இருப்பதைக் கண்டுபிடிக்க வரலாற்றில் யாரெல்லாம், எப்படியெல்லாம் போராடியிருக்கிறார்கள் என்பதை ஒரு கதையின் பின்னணியில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தக் கதையின் நாயகன் வேலூர் அருகில் ஒரு கிராமத்தில் ஜமீன்தாரிடம் நிலங்களைப் பறிகொடுத்து அடிமைகளாக வாழும் கூட்டத்தின் தலைவன்.

அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து தனது கூட்டத்தை விடுவிக்க பிரிட்டிஷ் அதிகாரியோடு தங்கம் தேடும் பணிக்கு தன் கூட்டத்தை அழைத்துச் செல்கிறான்.

அந்த நெடும் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், இழப்புகள், போராட்டங்கள் கடந்து ஜெயித்தார்களா என்பதே கதை.

இந்த பிக் கேன்வாஸ் படத்தின் மிகப் பெரிய பிரச்சினைகள்..

தங்கலானின் கனவில் வரும் சூனியக்காரியும், அவளின் மாயப்படையும், பிறகு அதெல்லாம் கனவல்ல, பல ஜென்மங்களுக்கு முன்பு நிகழ்ந்தவற்றின் பூர்வ ஜென்ம நினைவுகளின் சுவடுகள் என்பதும், சூனியக்காரியை மீண்டும் நிஜத்தில் எதிர்கொள்வதும்… குழப்பியெடுக்கின்றன.

மாய சக்திகள் கொண்ட சூனியக்காரியோ எதிரிகளை தன் மாய சக்திகளால் எதிர்கொள்ளாமல் வாளும், கம்பும் கொண்டு மேனுவல் ஃபைட் செய்கிறாள், தங்கத்தை மண் கட்டிகளாக ஜீபூம்பா போல மாற்றுகிறாள், கத்தி கிழித்தால் வயிற்றிலிருந்து பாயும் ரத்தத்தால் தங்க ஆறு உருவாக்குகிறாள் என்று ரொம்பவும் அம்புலிமாமா லெவலுக்கு காட்சிகள் போய்விடுவதால் இது என்ன வகை கதை என்றே புரியாமல் போய்விடுகிறது.

இயக்குனரின் தனிப்பட்ட கொள்கைகளும், அரசியல் நிலைப்பாடுகளும் படம் முழுக்க குறியீடுகளால், வசனங்களால், காட்சிகளால் தொடர்ந்து பதியப்படுவது ஆயாசம் தருகிறது.

உச்சரிப்பு, வட்டார வழக்கு, கத்திப் பேசுதல், லைவ் ரெக்கார்டிங் போன்ற காரணங்களால் பாதி வசனங்கள் புரியவே இல்லை.

மிகப் பெரிய முயற்சிதான்.

ஆனாலும் அயற்சிதான்.

சினிமாவின் ரசிகர்களுக்குப் பிடிக்கும். பொழுதுபோக்க நினைத்து வருபவர்களுக்கு ஏமாற்றம் தரலாம்.

-பட்டுக்கோட்டை பிரபாகர்

எழுத்தாளர்

(முகநூல் பதிவு)