ஆம்… அவன் தான் திருமுருகன் காந்தி!

அவன் இளைஞன். படித்து முடித்து நிறைய கனவுகளுடன் இருந்தான். அவனிடம் இருந்த படைப்பாற்றலுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. கொஞ்ச காலம் கழித்து சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனம் தொடங்கினான். அவன் திறமைக்கு நல்ல மரியாதை கிட்டியது. நிறைய வாய்ப்புகள். நல்ல பெயர். பல புகழ் பெற்ற விளம்பரங்கள் எடுத்தான். குடும்பம், குழந்தை என நிம்மதியான வாழ்க்கை! இருந்தும் ஏதோ ஒரு சஞ்சலம் இருந்துகொண்டே இருந்தது. வாழ்க்கை நிறைவு கொண்டுவிட்டதாக அவனால் நினைக்க முடியவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது.

அவன் வளர்ந்த சூழல் எல்லா குழந்தைகளும் வளரும் சாமானியமான சூழல் அல்ல. அப்பா ஒரு தொழிற்சங்கவாதி. பெரியாரிய சிந்தனையாளர். அதனாலேயே அவன் வளர்ந்த சூழல் புத்தகங்கள் நிறைந்ததாக இருந்தது. பல அரசியல் விவாதங்களை வீட்டுப்பாடம் செய்தபடியே கவனித்திருக்கிறான். அரசியல் கூட்டங்கள் சென்றிருக்கிறான். போராட்டங்கள் கவனித்திருக்கிறான். இங்கிருக்கும் அரசியலின் போதாமை என்ன என்பதை தெரிந்தே வளர்ந்திருக்கிறான்.

அதனால்தான் அவனுக்கு உலகப்பூர்வத்தில் நிறைவான வாழ்க்கை கிடைத்தும் ஏதோவொரு குறை உறுத்திக் கொண்டேயிருந்தது. வாழ்க்கையில் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கும்போது தான அந்த வரலாற்று சோகம் நேர்கிறது. ஈழப்போர்! தமிழ் நெஞ்சங்கள் அடைந்த பதட்டம் அவனுக்கும் ஏற்பட்டது. கையறு நிலையுடன், ஏதாவது நல்லது நடந்துவிடாதா என மனம் பதைத்து, நம்பி காத்திருந்து, எதுவும் முடியாமல், மொத்தத்தையும் காவு கொடுத்த துரதிர்ஷ்ட இனத்தைச் சார்ந்தவன். அவன் நம்பிய இந்தியா, தமிழ்நாடு, கட்சிகள், தேர்தல், அரசியல் எல்லாம் ஏமாற்றி போனது. அவனுக்கு இந்த மாநிலத்தின் எதிர்காலம் மாபெரும் சூன்யமாக தெரிகிறது. தமிழ் மக்கள் வாழ்க்கையும் ஆதாரங்களும் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுவதை உணர முடிகிறது. இவை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு ஒருவனால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும்?

தமிழ் கட்சிகளின் பாசாங்கு மொத்த ஈழ மக்களையும் கொன்றொழித்த வலி தாங்க மாட்டாமல் அரசியல் இயக்கம் தொடங்குகிறான். முன்போல தொழிலில் அக்கறை காட்டவில்லை. முன்பு ஈட்டிய வருமானமும் ஈட்டவில்லை. மக்கள் நலன், போராட்டங்கள் என சுற்றுகிறான். வாழ்வில் முன்பு உணராத முழுமையை உணருகிறான். அவனின் அரசியல் தெளிவு, அரசுகளை அச்சுறுத்துகிறது. ஒரு நாள், மெழுகுவர்த்தி ஏந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகிறான்.

ஆம். அவன் தான் திருமுருகன் காந்தி!

தன் இனத்தின் ஒரு பகுதி கண் முன்னாலேயே துள்ளத் துடிக்க அழிக்கப்பட்டதை கண்டு குமைந்த தலைமுறையை சேர்ந்தவன். உலக அரசியலின் பங்கை தமிழ்நாட்டில் துலக்கமாக புரிந்தவன். அது எந்த பாழ்கிணறுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்பதை தெரிந்தவன். அவனுக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது. அவன் நினைத்திருந்தால் இயக்கத்தை கட்சியாக மாற்றி பதவி, லாபம் என பார்த்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

ஏன் திருமுருகன் காந்தியை கண்டால் அரசுகளுக்கு இத்தனை பயம்?

காவிரி பிரச்சினையை கர்நாடக பிரச்சினையாக மட்டும் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் வந்து உலக வங்கி இந்தியாவுக்கு கொடுத்திருக்கும் கட்டளைகளை பேசினான். பெரியாரை திட்டிக் கொண்டிருக்கும்போது கிளம்பி வந்து அம்பானி, அதானியை திட்டினான். கருப்புப் பண நடவடிக்கை பொய் என மோடியை திட்டிக் கொண்டிருக்கும்போது அமெரிக்காவில் நடக்கும் தேர்தலையும் ரஷ்யாவின் அரசியலையும் பேசினான்.

தமிழனுக்கு தேவை பெரியாரிய முற்போக்கு, பசுமை அரசியல், முதலாளித்துவ எதிர்ப்பு, காவி எதிர்ப்பு, தமிழ்தேசியம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் என புரிந்து கொண்டான். இந்த நாட்டின் அரசியலை பற்றிய தெளிவான புரிதல் அவனை அங்குதான் நகர்த்தியது. ஏனெனில் அதுதான் உண்மையான அரசியல்.

வடுகன் என்றும், அதிமுகவை விமர்சிப்பதில்லை என்றும் அவனை விமர்சிப்பவர்களை பார்க்கிறேன். அப்படி சொல்லுபவர்கள் எவரும் அவனின் ஒரு பேச்சைக் கூட முழுமையாக கேட்காதவர்களே என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் அவன் பேசும் அரசியல் இவற்றையெல்லாம் தாண்டியது. முழுமையானது.

அவன் பேச்சில் அதிமுகவை அல்ல, இந்த நாட்டில் இருக்கும் எந்த கட்சியையும் விட்டு வைத்ததில்லை. எல்லா கட்சிகளின் நீசம்தான் நம் அனைவரின் நாசமும் என்பதை புரிந்தவன். அவன் பேசுவது மாற்று அரசியல். பன்னாட்டு மூலதனத்துக்கு எதிரான அரசியல். இயற்கைக்கான அரசியல். சக மனிதனுக்கான அரசியல். சுரண்டலுக்கு எதிரான அரசியல். சுயமரியாதைக்கான அரசியல். அதனால்தான் அரசுகளுக்கு அவனை பிடிக்கவில்லை. சிறையில் அடைக்கிறது.

சிறைக்கு எல்லாம் அஞ்சுபவன் அல்ல அவன். மக்களுக்காகவே ஓடிக்கொண்டிருந்தவன், நல்ல ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வருவான். இன்னும் கோபத்துடன் வருவான். அரசியல் பேசுவான். பேச வேண்டும். ஏனென்றால் அவன் பேசும் அரசியல்தான் நமக்கு தேவையான அரசியல். அவன் நம்மவன்!

RAJASANGEETHAN JOHN

 

Read previous post:
0a1b
‘காலா’ 2-வது நாள் படப்பிடிப்பில் ரஜினி – படங்கள்

'காலா' 2-வது நாள் படப்பிடிப்பில் ரஜினி

Close