அன்னா ஜார்விஸும் அன்னையர் தினமும்!

1940களில் Philadelphia மாகாணத்தில் ஒரு வீடு!

பெரும்பாலும் எவரும் அந்த வீட்டுக்கு போவதில்லை. ஜன்னல்களில் கனமான திரைச்சீலைகள். வீட்டுக்கதவில் ஓர் அட்டை தொங்கியது. ‘எச்சரிக்கை: யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்’!

இரு சகோதரிகளுக்கான ரகசிய வளையாக இருந்தது அந்த வீடு. லில்லியன், அன்னா ஜார்விஸ்! லில்லியனுக்கு பார்வை கிடையாது. ஜார்விஸ், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவ்வுலகத்தில் இருந்து விலகி, ஆழ குழி தோண்டி வாழ்ந்தார்கள்.

மிகவும் தெரிந்தவர்கள் வந்தால் மட்டும் ஜார்விஸ் கதவை திறப்பார். அதுவும் அவர்கள் முன்னமே தீர்மானித்திருந்த எண்ணிக்கையிலான கதவு தட்டல்கள் (knocks) இருந்தால் மட்டுமே. இல்லையெனில் மிக தெரிந்தவர்களுக்கு கூட கதவு திறக்கப்பட மாட்டாது. கிட்டத்தட்ட ஜெயகாந்தனின் ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’ வீடாகத்தான் அந்த வீடு இருந்தது.

உலகின் மீது அப்படி என்ன அவர்களுக்கு கோபம்? இத்தனைக்கும் இருவரும் வயோதிகர்கள்தான். இன்னும் சில வருடங்களில் இறந்துவிட போகிறவர்கள். யார் அவர்கள்?

லில்லியன், ஜார்விஸ்ஸின் சகோதரி. அன்னா ஜார்விஸ், இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினத்தை அரசு அங்கீகரிக்க செய்து சர்வதேச அன்னையர் தினமாக அறிவிக்க செய்தவர்!

அன்னா ஜார்விஸ் மேற்கு விர்ஜினியாவில்1864-ல் பிறந்தவர். அவரின் தாய் ஆன் மரியா ஜார்விஸ்! அவருக்கு மொத்தம் 11 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 7 குழந்தைகள் இறந்துவிட்டன. ஒன்பதாவதாகத்தான் அன்னா ஜார்விஸ் பிறந்தார்.

குழந்தை பிறப்பில் பெண்களுக்கு உள்ள அறியாமை போக்கவும் குழந்தைகளின் இறப்பை தடுக்கவும் ஆன் ஜார்விஸ், ஊர் பெண்களுடன் சேர்ந்து அன்னையர் தின சங்கம் அமைத்தார். குழந்தை பிறப்பு பற்றிய விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தினார். அந்த நேரத்தில்தான் அடிமை முறையை ஒழிப்பதற்கு எதிரான அமெரிக்க உள்நாட்டு போர் நடந்தது. அப்போரின் போது அன்னையர் தின அமைப்பு, காயப்பட்ட இருதரப்பையும் கவனித்து, பராமரித்து உதவினர். போர் முடிந்த பிறகு, அன்னையர் தின அமைப்பு போருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்க தொடங்கினர்.

இதற்கிடையில் ஆன் ஜார்விஸ்ஸின் மகள் அன்னா ஜார்விஸ் அம்மாவின் உறுதுணையில் படித்து முடித்து பல சாதனைகள் படைக்கிறார். Fidelity Mutual Insurance நிறுவனத்தின் முதல் பெண் விளம்பர இயக்குநர் ஆகிறார். சகோதரனின் நிறுவனத்தில் பங்குதாரர் ஆகிறார். அந்த காலகட்டத்தில் வெகுசில பெண்களுக்கு மட்டுமே சாத்தியமான பல விஷயங்களை சாத்தியமாக்குகிறார்.

1905ம் ஆண்டில் ஆன் ஜார்விஸ் மறைகிறார். மொத்த நாடுமே அன்னையருக்கென ஒரு தினத்தை அர்ப்பணித்து, போருக்கு எதிரான சமாதான நாளாகவும் பெண் சமூக முன்னேற்றத்தை அடையாளப்படுத்தும் நாளாகவும் கொண்டாட வேண்டும் என விரும்பிய தாயின் கனவை நனவாக்க விரும்புகிறார் அன்னா ஜார்விஸ். அதற்கான பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்து, பின் 1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன், மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறை அன்னையர் தினம் என கொண்டாடும் அறிவிப்பை வெளியிடுகிறார்.

இத்தனை விஷயங்கள் சாதித்தவரின் இறுதி வாழ்க்கை ஏன் அந்த இருண்ட அறைக்குள் முடங்கி போக வேண்டும்?

தாயின் நினைவாகவும் போருக்கு எதிரான நாளாகவும் நாடு முழுக்க அன்னையர் தின சங்கங்களை கொண்டு மே இரண்டாம் ஞாயிறை அனுசரிக்க வைத்தார் அன்னா ஜார்விஸ். கொண்டாட்டத்துக்கு அவர் அறிவுறுத்தி இருந்தது அழகான, எளிமையான வெள்ளை பூக்களை மட்டும்தான். ஆனால் அமெரிக்க அரசு பொது விடுமறை நாளாக அன்னையர் தினத்தை அறிவித்த பிறகு முதலாளிகள் அத்தினத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். வாழ்த்து அட்டை, பரிசுப்பொருட்கள் என அன்னையர் தினம் கொண்டாட நுகர்வை முன்னிறுத்த தொடங்குகின்றனர். மக்களிடமும் ஆச்சரியப்பரிசு, வாழ்த்து அட்டை என அன்னையர் தின கொண்டாட்டம் முதலாளிகள் விரும்பும் வகையிலேயே பரவுகிறது.

தன் தாயின் தூயக் கனவு வியாபாரமாக்கப்படுவதை காணச் சகியாமல் எதிர்க்க தொடங்குகிறார் அன்னா ஜார்விஸ். வாழ்த்து அட்டை, சாக்லெட் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முன் தர்ணா செய்கிறார். யாரும் பொருட்படுத்தவில்லை.

மக்களுக்கு முதலாளிகள்தானே bagpiper! அவன் ஊதும் குழலிசைக்கு மயங்கி பின் செல்லும் மந்தைதானே நாம் எல்லாம். அவன் ‘ஆண் கெட்டவன்’ என சொன்னால் நாமும் ஆணை கெட்டவன் என சொல்லுவோம். அவன் பேசுவதை பெண்ணியம் என நம்பி நாமும் அவனது பிரதி பெண்ணியம் பேசுவோம். அவனும் ஓர் ஆண் என்பதையும் அவனுக்கு ஓர் அரசியல் இருக்கும் என்பதையும் நம் intoxicated minds மறந்துவிடும். அவன் எப்படி நம் அம்மாக்களை கொண்டாட வேண்டும் என சொல்கிறானோ அப்படித்தான் நாம் கொண்டாடுவோம். சரிதானே!

நிறுவனங்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி அன்னா ஜார்விஸ்ஸை முடக்குகின்றன. வேலை இழக்கிறார். இருந்தும் போராட்டத்தை நிறுத்தவில்லை. தனக்கான சேமிப்பு, பணம் எல்லாவற்றையும் இழக்கிறார். கைதாகி சிறைக்கும் செல்கிறார். ஒரு கட்டத்தில் அன்னையர் தினத்தை யாரும் கொண்டாட வேண்டாமென பிரச்சாரம் தொடங்குகிறார்.

தான் கொண்டு வந்த அன்னையர் தின நாளை, தானே மறுதலிக்கும் நிலைக்கு அன்னா ஜார்விஸ்ஸை முட்டாள் சமூகம் கொண்டு போய் நிறுத்தியது. அதற்கு பிறகுதான் அந்த இருட்டு அறை அவருக்கு உலகமானது. அதிலேயே இருந்த அவர் இறந்தும் போனார். இன்னும் நாம் அவர் அந்த இருட்டறையில் இறந்துபோகும்படிக்கே அன்னையர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

தாய்களை கொண்டாட வேண்டாமா?

வேண்டாம். தேவையே இல்லை. தாயிடம் அன்பு இருக்கலாம். ஒரு சக ஜீவியாக நேசம் பாராட்டலாம். ஆனால் அவரை தாய் என்றும் தாய்மை என்றும் கர்ப்பப்பை கொண்டு அடையாளப்படுத்தி உயர்த்தி அவரை அடிமையாக்கி வைத்திருப்பது, வேண்டவே வேண்டாம்.

பெண்களுக்கு கர்ப்பப்பையே தேவையில்லை என சொன்ன கிழவனின் பூமி இது. இங்கு பெண்ணை கடவுள் ஆக்குவதே அடிமை ஆக்கத்தான். அப்படி இருக்கையில் தாயை ஏன் கடவுள் ஆக்க வேண்டும்? தாயை அடிமையாக்க வேண்டுமென விரும்புவீர்களா?

தாய்மை என்பதும் தாய்களுக்கு மட்டும் இருப்பதில்லை. தந்தைகளுக்கும் உண்டு. திருநங்கைகளுக்கும் உண்டு. தாய்மை என்பது சமூக அக்கறை; தன்னலம் அல்ல! அதை தன்னலம் ஆக்கியதுதான் நம் சமூகத்தின் திருகுத்தனம். ஒரு டாக்குமெண்டரி பார்த்திருப்பீர்கள். குட்டி மான் ஒன்றை சிங்கம் வளர்க்கும். அதுவும் தாய்மைதான். பிற உயிர் நலன் கருதும் எல்லாமுமே தாய்மைதான்.

குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தைக்கு நாம் obligate ஆக வேண்டியதில்லை. அதையும் ஒரு சக ஜீவியாக பாவித்து, ஏனைய சமூகத்தின் மீது காட்டும் அக்கறையை அதற்கும் காட்டி வளர்த்தல் வேண்டும். ஏனைய சமூகத்தின் மீது அக்கறை இல்லை என்றால் உங்களிடம்தான் பிரச்சினை. சக மனிதனின் மீதே அக்கறை இல்லாத நீங்கள் குழந்தையை என்னவாக வளர்ப்பீர்கள்? இன்னொரு சமூக அக்கறையற்ற ஒருவனாக!

குழந்தைப்பேறையும் தாய்மை உணர்வையும் சமூகமும் அரசும் கொள்ள வேண்டும். அப்போதுதான் தாய் என்ற உயர்ச்சி கொண்டு, பெண்ணை அடிமை ஆக்கும் தன்மையை போக்க முடியும். தாய் என்றால் இங்கு எல்லாருமே தாய்தான். தந்தை என்றால் இங்கு எல்லாருமே தந்தைதான். சமூக பொறுப்பும் புரிதலும் இருந்தால் மட்டும்தான், larger canvas-ல் குழந்தை வளர்ப்பையும் தாய்மையையும் பார்த்து புரிந்துகொள்ள முடியும்.

குழந்தைகள், பெண்களுக்கு க்ரீடங்களும் அல்ல. தாய்மை, பெண்கள் பெறும் விருதுகளும் அல்ல!

ஆங்.. சொல்ல மறந்துவிட்டேனே! அன்னையர் தினத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும் என போராடி, வெற்றி பெற்றாரே அன்னா ஜார்விஸ்.. அவர் மணம் முடிக்காதவர். குழந்தை பெறாதவர்.

மொத்த சமூகத்துக்குமான அக்கறையை தாயிடம் பெற்று தன்னளவிலும் வளர்த்தெடுத்தார் பாருங்கள், அவர்தான் பெண். அவர்தான் அன்னை!

எனவே

RAJASANGEETHAN