ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்லாயிரம் இளைஞர்கள் பேரணி: சென்னை மெரீனா குலுங்கியது!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டெழுந்து பேரணி நடத்தினார்கள். இந்த இளைஞர் படையால் மெரீனா கடற்கரை குலுங்கியது. வியப்பால் சென்னையே அசந்தது.

இதில் குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால், எந்தவொரு அரசியல் கட்சியின் கொடியோ, எந்தவொரு அரசியல்  கட்சி தலைவரின் முகமோ இந்த பேரணியில் தென்படவில்லை.

இத்தனை ஆயிரம் இளைஞர்கள் ஒன்று திரள்வார்கள் என்பதை எதிர்பார்க்காமல், அசால்ட்டாக இருந்த காவல் துறை, இப்பேரணி கண்டு மிரண்டு போனது. எனினும், ஒரு சிறு அசம்பாவிதமும் நிகழாமல், மிகவும் அமைதியாக, வெற்றிகரமாக நடந்து முடிந்தது பேரணி.

இத்தனை இளைஞர்களும் தன்னெழுச்சியாக தலைநகரின் கடற்கரையில் ஒன்று கூடியதற்கு முக்கியக் காரணம் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் தான். அவற்றின் மூலமாக ஒருவருக்கொருவர் அழைப்பு விடுத்து திடீரென குவிந்து அசத்தி விட்டனர்.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று தலைநகரை மையம் கொண்டு, ஜல்லிக்கட்டுக்காக கொடி பிடித்து, போர்க்குரல் கொடுத்த அழகை சென்னை மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அதில் இன்னொரு விசேஷம், படித்த இளைஞர்கள் பக்காவாக வேட்டி கட்டி படுபாரம்பரியமாக வீறு நடை போட்டதுதான்.

இந்தப் பேரணியில் பங்கேற்ற பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டது மற்றுமொரு விசேஷம். ஆண்களும், பெண்களுமாக இளைஞர்கள் படை படையாக திரண்டு வந்து, “வேண்டும் வேண்டும், ஜல்லிக்கட்டு வேண்டும்”, “தடை செய் தடை செய், பீட்டாவை தடை செய்” என்று முழக்கமிட்டபடி பேரணியில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு காளைகளும் பேரணியில் பங்கேற்று கைதட்டல் பெற்றது கண்கொள்ளாக் காட்சி.

சமூக ஊடகங்களின் உதவியுடன், தலைநகர் சென்னையில் இளைஞர்கள் முன்னெடுத்த இந்த முதல் மாபெரும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம், தமிழின வரலாற்றில் நிச்சயம் ஒரு முக்கிய நிகழ்வு என்பதை யாரும் மறுக்க முடியாது.