கவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த முற்போக்கு பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது 55) கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டு சிசிடிவி கேமராவில் 3 கொலையாளிகளின் உருவங்கள் பதிவாகியிருந்தன. ஆனால் அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

0a1b

இந்நிலையில், கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் பெங்களூர் பஸ் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நவீன ரக துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரின் உருவப்படங்களை போலீசார் வரைந்து வெளியிட்டு தேடி வந்தனர். அதன் பேரில் சிவமோகாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே போலீஸ் தேடும் கொலையாளிகள் மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் கர்நாடக சிறப்பு படை போலீசார் மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் முகாமிட்டு தேடி வந்தனர்.

இந்த நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக பரசுராம் வாக்மரே என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், பரசுராம் வாக்மரேயிடம் சிறப்பு புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கவுரி லங்கேஷ் மட்டுமல்லாமல், எழுத்தாளர்கள் கோவிந்த் பன்சாரே, கலாபுர்கி ஆகியோரையும் ஒரே துப்பாக்கி மூலம் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், முற்போக்கு சிந்தனையாளர்கள் கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, ஆகியோரை கொலை செய்ய ஒரே துப்பாக்கி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தடயவியல் ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஆனால், அந்த துப்பாக்கியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

கவுரி லங்கேஷை கொலை செய்தது பரசுராம் வாக்மரே என்பது உறுதியாகியுள்ளது. பெயர் தெரியாத இந்து வலதுசாரி அமைப்பின் சார்பில் 60 பேர் 5 மாநிலங்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் தெரியவில்லை.

கர்நாடகாவில் கொலை செய்த கும்பலைப் போல், மத்தியப் பிரதேசம், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்திலும் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

தீவிர இந்துத்துவா அமைப்புக்களான இந்து ஜக்ருதி சமிதி, சனாதன் சான்ஸ்தா ஆகியவற்றில் இருந்து இளைஞர்களைத் தேர்வு செய்து அனுப்பி இருக்கலாம். ஆனால், இவர்களுக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது உறுதியாகவில்லை.

இதில் கைது செய்யப்பட்ட சுஜித் குமார் என்ற பிரவீண் தனது கூட்டத்துக்கு ஆட்களைச் சேர்த்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் கிடைத்தன. கவுரி லங்கேஷை கொலை செய்யும் போது, பைக்கில் வந்த இருவரைத் தவிர்த்து மேலும் சிலர் அந்த இடத்தில் இருந்திருக்கலாம் என சந்தேக்கிறோம்.

இதில் வாக்மரேவின் உருவமும், சிசிடிவி கேமிராவில் பதிவான உருவம், முகம் ஆகியவையும் ஒத்துப்போகிறது. கவுரி லங்கேஷை கொலை செய்ய ஏறக்குறை. ஒரு ஆண்டாகத் திட்டமிட்டு அதை நிறைவேற்றி இருக்கிறார்கள். அவர் எப்போது வீட்டுக்கு வருவார், எப்போது தனியாக இருப்பார் ஆகியவை குறித்து நோட்டமிட்டு இந்தக் கொலையை நிறைவேற்றியுள்ளனர்

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அடுத்து யாரை எல்லாம் கொலை செய்ய வேண்டும் என்ற பட்டியல் இருப்பதைப் பார்த்து சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்நாட், முன்னாள் அமைச்சர் எழுத்தாளர் லலிதா நாயக், முற்போக்கு சிந்தனையாளர் சி.எஸ்.துவாரகநாத், நிடுமாமிடி நடத்தின் குரு வீரபத்ரா சென்னமல்லா சுவாமி ஆகியோரின் பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.