ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்
தனது திருமண அழைப்பிதழை முன்னாள் காதலிகளுக்கு கொடுப்பதற்காக பயணிக்கும் ஓர் இளைஞனின் கதையே ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’.
நாயகன் அதர்வாவின் அப்பா டி.சிவா தீவிர ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால், தனது மகனுக்கு ஜெமினி கணேசன் என்று பெயர் வைக்கிறார். அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மதுரையில் இருக்கும் ரெஜினாவிடம் தனது திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக அதர்வா மதுரைக்கு செல்கிறார். ரெஜினினாவின் வீட்டிற்கு சென்ற அதர்வாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரெஜினா அங்கு இல்லை. ரெஜினாவின் வீடு யாரும் பயன்படுத்தாததால் குப்பையாக கிடக்கிறது.
அந்த வீட்டின் மாடியில் இருக்கும் சூரியிடம், ரெஜினா குறித்து அதர்வா கேட்கிறார். சூரி ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாக அங்கு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் அதர்வாவை வைத்து அன்றைய நாளை ஓட்டிவிடலாம் என்று திட்டம் போடும் சூரி, அதர்வாவை ரெஜினா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
போகும் வழியில், ரெஜினாவை எப்படி தெரியும் என்று சூரி கேட்க, ரெஜினா தனது முன்னாள் காதலி என்று அதர்வா கூறுகிறார். மேலும் ரெஜினாவுடனான காதல் குறித்த முழு விவரத்தையும் சொல்கிறார். இந்நிலையில், தனது மற்ற காதல் பற்றியும், காதலிகள் பற்றியும் கூற, தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு கடுப்பாகும் சூரி என்ன செய்கிறார்? அதர்வா தனது முன்னாள் காதலிகளான ரெஜினா, அதிதி, பிரணிதா உள்ளிட்டோரை சந்தித்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒன்றுக்கு மேற்பட்ட காதலை உணர்வுபூர்வமாக, விளையாட்டாக பல படங்கள் சொல்லி இருக்கின்றன. இப்படத்தின் இயக்குநர் ஓடம் இளவரசு ஒன்றுக்கு மேற்பட்ட காதலை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார். கதை கூறிய விதத்திலும், சின்ன சின்ன ட்விஸ்ட்டை அதர்வா சூரியிடம் விவரிக்கும் விதத்திலும் நேர்த்தி பளிச்சிடுகிறது.
அதர்வா வழக்கமான, தனது ஈர்ப்பான நடிப்பினால் அனைவரையும் கவர்கிறார். அனைத்து நடிகைகளுமே அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறார்கள். யாருடன் ஜோடி சேர்ந்தாலும் அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறது. காதல் காட்சிகளிலும், சூரியுடனான காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அதர்வா முதன்முறையாக காமெடி கலந்த கதையை முயற்சி செய்திருக்கிறார்.
ரெஜினா தமிழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது பேச்சும், செய்கைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. பிரணிதாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதீதி – அதர்வாவுடனான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. சூரி காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, டி.சிவா உள்ளிட்டோரும் கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
டி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இமான் ஆட்டம்போட வைத்திருக்கிறார். ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.
`ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ – காமெடி ‘ஆட்டோகிராஃப்’!