பிக்பாஸ்: “சமூகம் தேவை இல்லை” என்கிறார் ஓவியா! சமூகமோ அவரை கொண்டாடுகிறது!!

ஓவியா!

அழகி. குறும்பி. நாயகி. கண்ணி. மோகி. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி ஓவியாவுக்கு கொடுத்திருக்கும் ரசிக பட்டாளம் அவர் இனி நடிக்கப் போகும் திரைப்படங்கள் கூட கொடுக்குமா என தெரியவில்லை. திடுதிப்பென பெண்களுக்கான ஒரு icon ஆக மாறி இருக்கிறார். இருக்கட்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சி, சாரு நிவேதிதா சொல்லியிருந்ததை போல் சமூக போக்குகளின் ஒரு பிம்ப கற்றை. அதில் சந்தை கணித்து முன்னிறுத்தப்படும் பிம்பங்கள் உண்டு என்பதும் உண்மை. ஆனால் ஓவியாவை கொண்டு அடையாளப்படுத்தும் பிம்பத்தை பொறுத்தவரை என்ன புரிந்து கொள்வது?

விடிந்ததும் போடும் பாடலுக்கு ஆடுகிறார். விளையாடுகிறார். மனதில் பட்டதை சொல்கிறார். அடுத்தவர் சொல்வதை கேட்கிறார். மழையில் நனைகிறார். முக்கியமாக ‘அடுத்தவங்களுக்காக வாழ வேண்டியதில்லை’ என சொல்கிறார். ‘கணேஷை போல் எல்லாருக்கும் நல்லவனாக இருக்க விரும்புபவன் முட்டாள்’ என்கிறார். ‘ஒரு காதில வாங்கி அடுத்த காதுல விட வேண்டியதுதான்’ என்ற சொல்வழக்குக்கு உதாரணமாக இருக்கிறார்.

ஓவியாவுக்கென ஒரு தனி உலகம் இருக்கிறது. அதற்குள் அவர் மட்டும்தான். அங்கு அவர்தான் அரசி. அவ்வப்போது நகர உலா என மாளிகையில் இருந்து வெளியே வருகிறார். மக்களை சந்திக்கிறார். குறைகள் கேட்கிறார். தன் கருத்தை சொல்கிறார். சில நேரங்களில் மட்டும் அடுத்தவருக்கு குரல் கொடுக்கிறார். பின் தன் மாளிகைக்குள் போய்விடுகிறார்.

இதில் ஓவியாவின் தப்பு ஒன்றும் இல்லை. இதுதான் நாம் இன்று புழங்கும் சமூகத்தின் கோட்பாடாக மாறி விட்டிருக்கிறது. பலரின் பிரச்சினைகள் இப்படித்தான் அணுகப்படுகின்றன. அடுத்தவனின் பிரச்சினைக்காக வருந்துபவன், தீர்வு காண முயலுபவன், உதவுபவன் எல்லாரையும் நாம் என்னவாக சொல்கிறோம்?

பிழைக்கத் தெரியாதவன், பைத்தியக்காரன், இளிச்சவாயன், ஜோக்கர் என்றுதானே!

அவனிடம் தான் நம் கோபத்தை கொட்டுவோம். எள்ளுக்கும் மதிக்க மாட்டோம். ரொம்ப சுலபமாக அழிக்கவும் முற்படுவோம். எல்லா அநீதிகளையும் அவமானங்களையும் நிகழ்த்தி அவனையும் நம்மை போல மாற்ற முயலுவோம்.

ஓவியா முன்னிறுத்துவது கூட்டு வாழ்க்கை மறுப்பு; தனித்துவ வேட்கை! எவன் எக்கேடு கெட்டாலும் எனக்கு பிரச்சினை இல்லை என்கிற போக்கு. நன்றாக யோசித்து பாருங்கள், இந்த போக்கை போதிக்கும் சித்தாந்தம் எது?

எது என நான் சொன்னால், என்னை கம்யூனிஸ்ட் என்பீர்கள். அதனால் நீங்களே யோசியுங்கள்.

யோசித்த பின் புரிந்து கொள்ளுங்கள், ஏன் ஓவியா icon ஆக காண்பிக்கப்படுகிறாரென. பிக் பாஸ் அரங்கில் இருக்கும் கேமிராக்கள் எல்லாவற்றையும் படம் பிடிக்கும். ஆனால் எடிட்டர்தான் எவற்றை காண்பிக்க வேண்டுமென முடிவெடுப்பார். இங்கு பிக் பாஸ் விஜய் டிவிதான். ஆனால் அதையும் தாண்டி பிக் பாஸ் ஒருவன் உலகத்துக்கு இருக்கிறான்.

மொத்தத்துக்கு மொத்தமாக ஒரே விஷயம்தான். மனிதன் தனியாக இருந்திருந்தால் நீடித்திருக்க மாட்டான். சமூகமாக இருந்ததால் மட்டுமே நீடித்தான். கூட்டு வாழ்க்கை மட்டும்தான் மனிதன். தனி வாழ்க்கை மனிதனுக்கு அழிவு.

சிறப்பான விஷயமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி அடைபவர் ஒருவராக இருப்பார் என்பதுதான். அதாவது அரவணைப்பை மறுத்து தனித்துவத்தை நோக்கி வெற்றிகரமாக நடப்பவரே வெற்றியாளர்.

சமூகம் கணேஷ்களையும் ஓவியாக்களையும் கொண்டது. ஆனால் ஓவியாக்கள் “சமூகம் தேவையில்லை” என்கிறார்கள். சமூகமோ ஓவியாக்களை கொண்டாடுகிறது. சிக்கல் புரிகிறதா? Constructed reality என்பது இதுதான்.

யார் construct செய்கிறார்கள் என கேள்வி கேட்டால் மீண்டும் துவக்கத்தில் இருந்து படியுங்கள்.

RAJASANGEETHAN JOHN

 

Read previous post:
0a1
பிக்பாஸ்: தனக்கு வாக்களித்தவர்களின் முடிவை ஓவியா நியாயப்படுத்தி இருக்கிறார்!

பிக்பாஸ் யாருக்கு எந்த வகையில் லாபமோ அல்லது நட்டமோ தெரியாது.. ஆனால் ஓவியாவுக்கு திரையுலகில் ஒரு மறுவாழ்வை அளித்திருக்கிறது பிக்பாஸ். நேர்மையான, புறம் பேசாத, தானுண்டு தன்

Close