“பாசிஸ்டுகள் முன்கூட்டியே ஆயிரம் ஆண்டுகளுக்கு திட்டம் தீட்டுகின்றனர்!” நாம்…?

ஒரு சிந்தனையாளனின் கூருணர்ச்சி விலைமதிப்பற்றது. வரலாற்றில் குறுக்குவெட்டாகப் பயணித்து எதிர்காலத்தை துல்லியமாகக் கணிக்க வல்லது. அந்தக் கூருணர்ச்சி பொருட்படுத்தப்படாதபோதுதான் சமூகம் ஒரு பெரும் பாழில் விழத் தயாராகிறது.

உதாரணமாக,

‘பாசிஸ்டுகள் முன்கூட்டியே ஆயிரம் ஆண்டுகளுக்குத் திட்டம் தீட்டுகின்றனர்’ என்றார் ஜெர்மானிய மார்க்சிய அறிஞர் வால்ட்டெர் பெஞ்சமின். அது இந்தியாவின் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் மிகப் பொருந்தும் கூற்று.

.

.

‘நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தி இறுதியில் அதை ஒழித்துக் கட்டினர் பாசிஸ்டுகள்’ என்றார் மற்றொரு ஜெர்மானிய சிந்தனையளர் ஹன்னா அரெண்ட்.

.

.

மார்க்சியவாதிகள் சொல்லும் பொருளாதார அடித்தளம், அரசியல், சட்ட, பண்பாட்டு மேலடுக்கு ஆகிய இரண்டிலும் நன்கு திட்டமிட்ட முறையில் சங் பரிவாரம் பார்ப்பனிய இந்துப் பாசிசக் கருத்துகளை மிக ஆழமாக விதைத்து அவை மரங்களாக வளர்ந்து நச்சுக்கனிகளை ஈன்றச் செய்துள்ளது.

.

.

எந்த நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன் உலகைச் சூழ்ந்திருந்த மூட நம்பிக்கை, அறியாமை என்னும் இருளை அகற்றினவோ அந்த அறிவியலின் தொழில்நுட்பத்தின் சாதனைகளை மதவாத வலதுசாரி சக்திகள் முழுமையாகத் துய்ப்பதுடன் மட்டுமல்லாது, அவற்றை மத, கடவுள் நம்பிக்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் பரப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். மதவாத வலதுசாரிகள் மிக நாசூக்கான, சாதுரியம்மிக்க, கணிணிப் பொறியியலையும் மின்னணுத் தகவல் தொழில்நுட்பத்தையும் திறமையாகக் கையாளுபவர்களையும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விப் பட்டம் பெற்றவர்களையும் தமது அணிகளுக்குள் வைத்திருக்கிறார்கள். கணிணி அறிவும் மின்னணுத் தொழில்நுட்பமும் மின்னஞ்சல், இணையதளம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களும் லட்சக்கணக்கான மக்களுடன் இந்து மதவாத வலதுசாரிகள் தொடர்பு கொள்வதற்கு உதவி செய்கின்றன.

.

.

ஜனரஞ்சக இந்துயிசத்தின் புத்தெழுச்சி, இந்தியாவில் கடைபிடிக்கப்படுவதாக சொல்லப்படும் மதச்சார்பின்மைக்கு எதிரானதல்ல என்றும் இந்த மதச்சார்பின்மையின் காரணமாகத்தான் இந்த புத்தெழுச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறுவது புதிராகத் தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. ஏனெனில் இந்திய வகை மதச்சார்பின்மை, பெரும்பான்மை மதத்துடன் நெருக்கமான, அதற்கு ஊட்டம் கொடுக்கக் கூடிய உறவை வளர்த்துக் கொள்ள அரசு இயந்திரத்தை அனுமதிக்கிறது.

.

.

மதச்சடங்குகளும் வழிபாடுகளும் நடக்கும் வெளிகள் அரசியல்மயமாக்கப்பட்ட பொதுவெளிகளாக மாற்றப்படுவது இன்று மிக இயல்பானதாகிவிட்டது. சடங்குகளுக்கும் வழிபாட்டுக்குமான வெளிகளை அரசியல் பொதுவெளிகளாக மாற்றும் நிகழ்முறை நமது கூட்டுப் பொதுபுத்தியில் இரண்டறக் கலந்துவிட்டது. எனவே அப்படியொன்று நிகழ்வதை நாம் கவனிக்கவோ, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ அதை தடுக்கவோ செய்யாமல் போய்விடுகிறோம்.

.

.

பெரியார் பிறந்த மண், சிங்காரவேலர் தோன்றிய நாடு என பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பிரசாரத்தை சில பெரியாரிஸ்டுகள் செய்து வருகின்றனர். ஆனால் தபோல்கரைப் போன்ற ஒரு மனிதரோ, அவரும் அவரது இயக்கத்தினரும் தோற்றுவித்தது போன்ற ஓர் இயக்கமோ இன்னும் இங்கு வரவில்லை. பெரியார் – அண்ணா திராவிட இயக்க மரபுக்கு உரிமை கொண்டாடும் இரு கட்சிகள் 36 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றன. பகுத்தறிவைப் பரப்புவதற்கான, மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கான எந்த செயல்திட்டத்தையும் அவர்கள் உருவாக்கவில்லை. அவர்களோடு சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி கூட்டுச் சேர்ந்து கொள்ளும் இடதுசாரிகளுக்கும் தலித் இயக்கத்தினருக்கும் கூட இதில் அக்கறை கிடையாது. தமிழக அரசாங்கத்தின் இந்து அறநிலையத்துறை சங் பரிவாரம் போலச் செயல்பட்டு வருகிறது.

.

.

பாஜக தனியாகவோ, கூட்டணி அமைத்தோ ஆட்சிக்கு வருமேயானால் அதன் முதல் குறியிலக்கு இடதுசாரிகள் என்று சொல்லப்படக்கூடிய அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களுமாகத்தான் இருக்கும். கூட்டணி அமைக்கும் அரசியலையே இதுவரை மேற்கொண்டு தமக்கென சுயேச்சையான பாதையை வகுத்துக் கொள்ளாமல் இருந்த நாடாளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் உடனடியாக இந்தத் தேர்தலில் முற்றிலும் வேறுபட்ட மார்க்கத்தை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படியே அவர்கள் விரும்பினாலும் அதற்கான கால அவகாசம் இப்போது இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கின்றவர்கள், குறைந்தபட்சம் ‘விகிதாசார பிரதிநிதித்துவம்’ போன்ற தேர்தல் சீர்திருத்தங்களுக்காகவாவது போராடவும் அவற்றைத் தமது வேலைத் திட்டங்களில் ஒன்றாகச் சேர்க்கவும் வேண்டும்.

.

.

நாடாளுமன்ற இடதுசாரிகள், நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிராகரிப்பவர்கள் ஆகிய அனைத்து வகை இடதுசாரி சக்திகளும் திறந்த மனதோடு தங்கள் நிலைப்பாடுகளை மறு ஆய்வுக்குட்படுத்தவும் தங்களை மறுவார்ப்பு செய்து கொள்ளவுமான நேரம் இது. ‘இனி என்ன செய்ய வேண்டும்’ என்னும் கேள்விக்கான ஆக்கப்பூர்வமான பதிலை நாட்டின் உழைக்கும் மக்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

பாசிசம் நமது வாசல்படியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

– மேற்கண்ட பத்திகள் தோழர் எஸ்.வி.ராஜதுரை எழுதியவை. ‘இந்தியா எதை நோக்கி?’ என்ற புத்தகத்தின் முன்னுரையில் இடம்பெற்ற பத்திகள். தோழர் அந்த முன்னுரையை எழுதியது 2014ம் ஆண்டு பாஜகவை அரியணை ஏற்றிய தேர்தல் நடப்பதற்கு சற்று முன்.

எட்டு வருடங்கள் கழிந்தும் பொருந்தும் அந்தக் கூருணர்ச்சியை பொருட்படுத்த மறுப்பதே கட்சிகளில் இருக்கும் சாபக்கேடாக இருக்கிறது.

அச்சாபகேட்டின் இலக்காக நாம் இருக்கிறோம்!

RAJASANGEETHAN