என்ன விலை – விமர்சனம்
நடிப்பு: கருணாஸ், நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி, சாஷா சிவகுமார், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ் ஜெகன், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் மற்றும் சிலர்
எழுத்து & இயக்கம்: சஜீவ் பழூர்
ஒளிப்பதிவு: ஆல்பி ஆண்டனி
படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்
இசை: சாம் சிஎஸ்
தயாரிப்பு: ’கலாமயா பிலிம்ஸ்’ ஜிதேஷ் வி
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தவசி (கருணாஸ்), தன் மனைவி (விஜயலட்சுமி வீரமணி), மகன் (கமலேஷ் ஜெகன்), மகள், தங்கை (சாஷா சிவகுமார்) ஆகியோருடன் சிறிய குடிசையில் வாழ்ந்து வருகிறார். எளிய மனிதரான அவர் அன்றாட வாழ்க்கைச் செலவினங்களுக்காக பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார். மேலும், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரையில் முன்னோருக்கு திதி கொடுக்கும் பக்தர்கள் காணிக்கையாக கடலுக்குள் வீசும் சில்லரைக் காசுகளை, நீருக்கடியில் நீந்திச் சென்று, சேகரித்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்.

ஒருநாள் தவசி கடலுக்குள் மூழ்கி சில்லரைக் காசுகளைத் தேடும்போது, எதிர்பாராத விதமாக ஒரு பழமையான தங்க ஆபரணம் அவரது கையில் சிக்குகிறது. கேட்பாரற்றுக் கிடந்த பொருள் என்பதால், அதை காவல் துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். அந்த ஆபரணம் விலை மதிப்பில்லாதது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளும் காவல்துறையினர் அதை தவசியிடமிருந்து அபகரிக்கப் பார்க்கிறார்கள். அது முடியாமல் போகவே, தவசியை கோயில் நகை கொள்ளை வழக்கில் பொய்யாய் சிக்க வைத்து, சிறை, நீதிமன்றம் என்று அலைய விடுகிறார்கள்.
தவசியைக் காப்பாற்ற, நேர்மையான பெண் வழக்கறிஞரான காஞ்சனா (நிமிஷா சஜயன்) சட்டப்போராட்டத்தில் குதிக்கிறார். தவசி குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கிறார். இந்த நிலையில், தவசி தரப்பிலிருந்து பணத்தைத் தாண்டிய இழப்பீடு ஒன்றை காஞ்சனா கேட்கிறார். இதனால் நீதிமன்றமும், அரசாங்கமும் அதிர்கின்றன.
தவசி அப்படி கேட்ட இழப்பீடு தான் என்ன? அதை நீதிமன்றம் செய்து கொடுக்க முன்வந்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு எளியவர்கள் சார்பாக நின்று, குரலற்றவர்களின் குரலாக வாதாடி, விடை அளிக்கிறது ‘என்ன விலை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, மீனவர் தவசியாக கருணாஸ் நடித்திருக்கிறார். தன் குடும்பம், தன் வாழ்க்கை என்று அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாமானியன், சம்பந்தமே இல்லாமல் திடீரென கொள்ளை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, சிறை, நீதிமன்றம் என்று அலைய நேரும் பரிதாபகரமான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக தன் நடிப்பின் மூலம் அழுத்தமாக பிரதிபலித்திருக்கிறார் கருணாஸ். ”இழந்த என் மானத்துக்கு என்ன விலை?” என்று கேட்டு கதறி அழும் காட்சியில், பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்து விடுகிறார். பாராட்டுகள் கருணாஸ்!
நிரபராதியான நாயகனுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் வழக்கறிஞர் காஞ்சனாவாக நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம். அதை ஏற்று, அட்டகாசமாக வாதங்களை முன்வைத்து, பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பார்வையாளர்களின் இதயங்களிலும் இடம் பிடித்து விடுகிறார்.
நாயகனின் மனைவியாக வரும் விஜயலட்சுமி வீரமணி, அவரது மகனாக வரும் கமலேஷ் ஜெகன், நாயகனின் தங்கையாக வரும் சாஷா சிவகுமார் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சித்தா தர்ஷன், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ் ஜெகன், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சஜீவ் பழூர். இவர் 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ என்ற மலையாளப் படத்தை எழுதியதற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றவர். இவர் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் தான் இந்த ‘என்ன விலை’. இந்த கேடுகெட்ட சமூகத்தில் சாமானிய மனிதர்கள் நேர்மைக்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை மையக் கருத்தாக வைத்துக்கொண்டு, ஹீரோயிசமோ, பிரமாண்டமோ, மசாலா சினிமாத்தனமோ இல்லாமல், சிறிய பட்ஜெட்டில் எளிய மக்களின் வலியை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தி, பிரமாதப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பொருத்தமான நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்து, அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி, இப்படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார். எத்தனையோ படங்களில் நீதிமன்றக் காட்சிகளைப் பார்த்திருந்தாலும் இதில் இயக்குநர் கையாண்டிருக்கும் நீதிமன்றக் காட்சிகள் பரபரப்பின் உச்சம். ரசிக்கத் தக்க அருமையான படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் சஜீவ் பழூருக்கு நமது பாராட்டுகள்.
சாம் சிஎஸ்ஸின் இசை, ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் தரத்திற்கும், இயக்குநரின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
‘என்ன விலை’ – விலை மதிப்பற்ற அற்புதமான பொக்கிஷம் இந்தப்படம்; இதை வெற்றிபெறச் செய்ய வேண்டியது, வித்தியாசமான நல்ல படங்களை விரும்பும் ஒவ்வொருவரது கடமை.
ரேட்டிங்: 4.25/5.
