தேர்தல் அரசியலை முழு நிர்வாணமாக்கி முச்சந்தியில் நிறுத்துகிறார் விஜயகாந்த்!

தேர்தல் அரசியல் எவ்வளவு இழிவான முறை என்பதை, ஒவ்வொரு தேர்தலின்போதும் அது தன்னைத் தானே அம்பலப்படுத்திக்கொள்கிறது. நிரூபிக்கிறது. தமிழகத்தில் கடந்த தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் அதைக் கூடுதலாக அம்பலப்படுத்துகிறது விஜயகாந்த் குடும்பத்தாரால் நடத்தப்படுகிற கட்சி.

‘வாரிசு அரசியல்’ நேரு குடும்பம் இந்த நாட்டுக்கு கற்றுக் கொடுத்த ‘தியாக’ மெத்தட். அதையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் விஜயகாந்த். அரசியலுக்கு வரும்போதே பொண்டாட்டி, மச்சினன், கொழுந்தியா, மாமியார், சகலபாடி என்ற புதுபாணியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் கடந்த 50 ஆண்டுகால அரசியலின் அடிப்படை: 1. இடஒதுக்கீடு, சிறுபான்மை மக்களின் உரிமையை உள்ளடக்கிய சமூகநீதி அரசியல். 2. மொழி உணர்வு. இந்த இரண்டு பற்றியும் எந்தக் கருத்தும், பெயரளவிலான புரிதலும்கூட அந்தக் கட்சிக்கு இல்லை.

ஒருமணி நேர வித்தியாசத்தில் கூட்டணி பற்றி எந்தக் கட்சியோடும் பேச்சு நடத்துகிறார். கூட்டணி வைப்பதற்கு அரசியல் ரீதியாக பொதுப் பிரச்சனையில் என்ன நிபந்தனை? என்பதை பெயரளவில்கூட எப்போதும் அறிவிக்க மறுக்கிறார். மிக வெளிப்படையாக தனக்கான முக்கியத்துவம் மட்டுமே அவரிடம் இருக்கிறது.

இந்தத் தேர்தல் அரசியலை முழு நிர்வாணமாக்கி அதை முச்சந்தியில் நிறுத்துகிறார். ஆனால், கூச்சமே இல்லாமல், அவரிடம்தான் கூட்டணி வைப்பதற்குக் காத்துக்கிடக்கிறது சமூகநீதியும், மொழி உணர்வும் நிரம்பிய கட்சியாகத் தன்னை அறிவித்துக் கொள்கிற திமுக. விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, ஜெயலலிதாவுடனேயே கூட்டணி வைத்துக்கொள்ளலாம் கலைஞர்! ஒட்டுமொத்தப் பிரச்சனையும் முடிவுக்கு வந்துடும்!

“திமுகவும் சரியில்ல, அதிமுகவும் சரியில்ல, மாற்று” என்று முழுங்குகிறவர்கள், “உங்களை முதல்வராக்குகிறோம்” என்று எந்தக் குற்றஉணர்வும், கூச்சமும் இல்லாமல் தைரியமாகக் கெஞ்சுகிறார்கள் தேமுதிக தலைமையிடம். “விஜயகாந்தை முதல்வராக்குவோம்” என்று அறிவித்தபிறகு, இவர்களுக்கு பி.ஜே.பி.யை எதிர்ப்பதற்குக்கூட குறைந்தபட்ச நேர்மை இல்லை.

கோமாளி என்கிறார்கள், விஜயகாந்தின் பேச்சைக் கேட்பவர்கள். அவரல்ல கோமாளி. இந்தத் தேர்தல் முறை எவ்வளவு கோமாளித்தனமாக இருக்கிறது என்று அம்பலப்படுத்தியிருக்கிறார் அந்தக் காரியக் கோமாளி. அந்த வகையில் அவரை பாராட்டிதான் ஆகவேண்டும்.

– மதிமாறன் வி மதி