கருப்பு பணத்தை ஒழிக்க மோடி வருகிறார்; கடுகு டப்பாவை மறைத்து வை!

அரசு சொல்லும்

அனைத்து செல்லும் அடையாளங்களுடனும்

கையில் இருக்கிறது நோட்டு…

கொண்டு போனால்
காந்தியின் நோக்குநிலை’ மட்டுமல்ல
கடைக்காரரின் நோக்குநிலையும்
மாறுபடுகிறது.

‘வேற்று கிரகத்துக்கு
அனுப்பிய விண்கலம்’
இருக்கும் நோட்டை
சொந்த கிரகத்தில்
அனுப்ப முடியவில்லை.

‘சாய்த்துப் பார்த்தால்
பச்சையிலிருந்து நீலமாக மாறும்’
நோட்டை,
சாயங்காலம் நேராக
கீரைக்கட்டு அம்மாவிடம்
நீட்டினால்
‘பச்சையாக’ மாற மறுக்கிறது.

‘இடப்பக்கத்திலிருந்து
‍பெரிதாகிக்கொண்டே
போகும் எண்கள்’
கடைப்பக்கத்தில் போனால்
தடைபட்டு
பாக்கெட்டில் சுருங்கி விடுகிறது.

‘வலப்பக்கத்து
தேவநாகரி எண்களை’
வளைத்து வளைத்துக் காட்டினாலும்
தட்சணை போக
மீதம் தர தயாரில்லை
கோயில் குருக்கள்!

‘தூய்மை இந்தியா சின்னம்
மற்றும் வசனத்தை’
தூக்கி தூக்கி காட்டினாலும்
‘தூய்மையா…. நீயே வச்சிக்க’
என ரேசன் இந்தியா துரத்துகிறது.

‘ரிசர்வ் வங்கி ஆளுநரின்
உத்திரவாதக் கையெழுத்தை’
காட்டினாலும்
ஒத்துக்கொண்டு சில்லறைத் தர
ஒரு பிச்சைக்காரும் தயராயில்லை…

“ஏத்திவிடப்பா
தூக்கிவிடப்பா
இரண்டாயிரத்தை
மாத்திவிடப்பா”…
வேண்டுவது
அய்யப்ப சாமிகள் அல்ல
அன்றாடம்
வங்கிக்கு
இருமுடி கட்டி
வரிசையில் நிற்கும்
அன்றாடம் காய்ச்சிகள்!

எழுந்ததும் போய்
வரிசையில் நின்று
காலைக் கடனை அடக்கி
கை, கால் உழைப்பை முடிக்கி
‍செல்லாத நோட்டை
கொடுத்தது
‘இல்லாத’ நோட்டை
வாங்கத்தானா?

அய்நூறுக்கு
பெட்ரோல் போட்டு,
ஆயிரத்துக்கு சாப்பிட்டு,
இரண்டாயிரத்துக்கு
செருப்பு வாங்கினால்தான்
இந்த நோட்டு
செல்லும் என்றால்
உண்மையில்
மோடி
செல்லாததாய் ஆக்கியது
ரொக்கத்தை அல்ல
வர்க்கத்தை.

ஒன்றுக்கும் உதவாமல்
சும்மா காட்டுவதற்கும்
ஆட்டுவதற்கும்
எங்கள் கையில்
எதற்கு நோட்டு?
கையாலாகாத
ரிசர்வ் வங்கியைப் பூட்டு!

எச்சரிக்கை!
கருப்பு பணத்தை ஒழிக்க
மோடி வருகிறார்
கடுகு டப்பியில் இருக்கும்
சில்லரையை மறைத்துவை!

துரை. சண்முகம்

Courtesy: vinavu.com