விவாகரத்து கோரி அமலாபால் – விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
இயக்குநர் விஜய் – நடிகை அமலாபால் இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மத்த்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சமீபநாட்களாக செய்திகள் வெளியாகின.
திருமணத்துக்குப் பிறகு அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதால், இது விஷயமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை மறுத்த விஜய், “நானும் அமலாபாலும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மை தான். ஆனால், திருமணத்துக்குப் பிறகு அமலா நடிப்பதால் தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யே” என்று அறிக்கை வெளியிட்டார். மேலும், “நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும் தான் ஒரு வலுவான திருமண வாழ்விற்கு சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வை தொடர்ந்தால், அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது” என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆக, நம்பிக்கை துரோகமும், நேர்மையின்மையும் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்பது இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், விஜய்யும், அமலாபாலும் இன்று சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். நீதிபதி தீபிகா முன்னிலையில் இருவரும் விவகாரத்து செய்யப் போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தனர். இவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் விஜய் -அமலாபால் விவகாரத்து கோரி நீதிமன்றம் சென்றிருப்பது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.