சந்தானம், சூரி நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர்!

விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜேப்பி. இவர் சமீபத்தில் கரண் நடிப்பில் வெளியான ‘உச்சத்துல சிவா’ படத்தை இயக்கியதோடு, அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருப்பார். தற்போது ‘பணம் காய்க்கும் மரம்’ என்கிற முழுநீள நகைச்சுவை படத்தை இயக்கி முடித்தும் விட்டார்.

‘பணம் காய்க்கும் மரம்’ படத்தின் நாயகனாக அக்சய் நடிக்க, நாயகிகளாக அகல்யா, அன்விகா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகனின் அண்ணனாக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் ஜேப்பி. ராஜ் குல்கர்னி, சோனு பாண்டே ஆகியோர் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் போஸ் வெங்கட், படவா கோபி, பாரதி கண்ணன், பாலு ஆனந்த், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்..

இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளரான எல்.வைத்தியநாதனின் மகன் எல்.வி.கணேசன் இசையமைக்க, ‘உச்சத்துல சிவா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஹார்முக் இதிலும் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ வெற்றிப்படத்தின் எடிட்டர் ஆனந்தலிங்ககுமார் இந்தப்படத்தின் படத்தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். படத்தை தர்ஷ் ஷோ கம்பெனி சார்பில் ஏ.ராமலிங்கம் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு – ராதா ஜெயபிரகாஷ்.

இப்படத்தில் நடித்தது பற்றி இயக்குனர் ஜேப்பி கூறுகையில், “உச்சத்துல சிவா’ படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஒருநாள் இந்த ‘பணம் காய்க்கும் மரம்’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.ராமலிங்கம் வந்தார். அவர் வந்த சமயம் அந்த படத்தில் ஹீரோவின் நண்பனாக நடிக்கும் நான் மேக்கப் போட்டுக்கொண்டு இருந்தேன்.

படப்பிடிப்பில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டபோது மொத்த யூனிட்டும் அடக்க மாட்டாமல் சிரித்தனர். அதை கவனித்த ‘பணம் காய்க்கும் மரம்’ படத்தின் தயாரிப்பாளர் ராமலிங்கம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்னிடம் “நம் படத்தில் ஹீரோவின் அண்ணனாக வரும் அந்த காமெடி கதாபாத்திரத்தில் நீங்களே நடித்துவிடுங்கள்” என சொல்லிவிட்டார்.

“சொன்னதில் உறுதியாக நின்று என்னை செயல்படுத்தவும் வைத்துவிட்டார். சந்தானம், சூரி போன்றவர்கள் ஏற்று நடிக்க வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்கப்போகிறேன் என ஆரம்பத்தில் நினைத்தாலும், மொத்தப்படமும் முடிந்த பின்னர் முதல் பிரதியை பார்த்தபோது நிறைவாக செய்திருக்கிறேன் என்கிற நிம்மதி ஏற்பட்டது” என்கிறார் இயக்குனர் ஜேப்பி.

கீழே உள்ள இயக்குனர் ஜேப்பியின் படத்தை பாருங்க…! சிரிப்பு வருதா…! சிரிப்பு வருதா…! ஏதோ ஒரு காரணத்துக்காக சிரிப்பு வருதா…! அப்ப சரி…!

0a1