“ஆகச் சிறந்த நடிகன் விஜய் சேதுபதி”: இயக்குனர் பாலா பாராட்டு!

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தர்மதுரை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் ந்டைபெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்களை வெளியிடும் இவ்விழாவில் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

சீனுராமசாமியைப் பற்றி முதலில் பேச வேண்டும். பாலுமகேந்திராவுடன் நான் இருந்தபோது சீனு எனது ஜூனியர். சீனு முதல் படம் முடித்ததும், பாலுமகேந்திராவின் மனைவி, அந்தப் படத்தை பார்க்குமாறு என்னிடம் சொன்னார். அவர் எந்த படத்தையும் அப்படி பரிந்துரைக்க மாட்டார். ‘அவன் என்ன எடுத்திருக்கப் போறான், விடுங்க’ என்றேன். ‘இல்லை நீ பாரு’ என்றார்.

அதுவரைக்கும் நான் சீனுவை முட்டாள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த படத்தை பார்த்தபிறகு கிட்டத்தட்ட ஒரு வாரம் என்னால் தூங்க முடியவில்லை. படம் சம்பந்தப்பட்ட அனைவரிடம் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தேன். சீனுராமசாமி சினிமாவைத் தவிர வேறெதுவும் பேச மாட்டான். மற்ற விஷயங்களை பேசுவோமே என்றாலும் விடாமல் சினிமாவைப் பற்றியே பேசி அறுத்து விடுவான். அந்த காரணத்துக்காகவே இவனைக் கண்டால் நான் ஓடிவிடுவேன்.

திடீரென அவனுக்கு எதாவது கதை தோன்றினால் என்னை தொலைபேசியில் அழைப்பான். கதையை சொல்லி என்னிடம் கருத்து கேட்பான். சரி படமாக எடு என்றால், நாளைக்கு வந்து முழுவதும் சொல்லட்டா? என்பான். இந்தக் கேள்வியை அவன் கேட்கும்போது இரவு 1 மணி ஆகியிருக்கும். ஆனால் அந்த நேரத்திலும் அவனுக்குத் தோன்றியதையும் என்னிடம் சொல்ல வேண்டும் என நினைப்பான். அப்படி ஒரு சினிமா வெறியன் சீனு. உணர்வுபூர்வமான காட்சிகளை எப்படி கையாள வேண்டும் என அவனிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுகள்.

அதேபோல சீனு தன் படங்களில் பெண்களை கண்ணியமாக காட்டியிருப்பான். இந்தப் படத்தின் 3 நாயகிகளையும் கண்ணியமாகக் காட்டியிருப்பான் என நம்புகிறேன்.

யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா சாயல் இருக்கிறது எனப் பலர் சொல்கிறார்கள். யுவனுக்கு மட்டுமா இளையராஜாவின் தாக்கம் இருக்கிறது? அனைத்து இசையமைப்பாளர்களிடமும் இருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. எனவே அதை ஒரு பெரிய விஷயமாக பேச வேண்டாம்.

விஜய் சேதுபதியின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளின் அப்பாவாக நடிக்க வேண்டுமா, வயதான ஆளாக நடிக்க முடியுமா, கல்லூரி மாணவனாக நடிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்காமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் இமேஜ் எதுவும் பார்க்காமல் நடிக்கும் மிகச் சிறந்த, ஆகச் சிறந்த நடிகன் விஜய் சேதுபதி. இதை மேடைக்காக சொல்லவில்லை. விஜய் சேதுபதியைப் போல ஒரு நடிகன் நம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்ததற்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

இவ்வாறு பாலா பேசினார்