சுசீந்திரனின் ‘மாவீரன் கிட்டு’ யாரை பற்றிய படமாம்…?

சுசீந்திரன் இயக்கத்தில் ஏசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வர் வி.சந்திரசாமி, நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாவீரன் கிட்டு’. இந்தப் படத்துக்கு வசனம், பாடல்களை எழுதுகிறார் கவிஞர் யுகபாரதி. டி.இமான் இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கதாநாயகனாக விஷ்ணு விஷால், அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்கள். சுசீந்திரன் இயக்கிய ‘ஜீவா’ படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலுடன் மீண்டும் இதில் ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீதிவ்யா. இவர்களுடன் பார்த்திபன், சூரி  உள்ளிட்ட பலர் நடிப்பில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

தயாரிப்பாளர் ஐஸ்வர் வி.சந்திரசாமிக்கு இந்தப் படம்தான் முதல் படம். திருப்பூரில் ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொழில் செய்துவரும் ஐஸ்வர் வி.சந்திரசாமி, தனது தயாரிப்பின் முதல் படத்திலேயே இயக்குனர் சுசீந்திரனுடன் இணைந்தது பெரும் மகிழ்ச்சி என்கிறார்.

“நல்ல படங்களை தயாரிக்க வேண்டும், அதேசமயத்தில் அந்த படங்கள் மூலமாக இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும். வெறும் சினிமா தயாரிப்பு என்பது வியாபாரத்தோடு முடிந்து விடுவதில்லை. நமது கலைகளில் முக்கியமானதாகி விட்டது சினிமா. அதை இந்த சமூகத்தில் நல்லவிதமாக நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்கிறார் ஐஸ்வர் வி.சந்திரசாமி.

0a1e

“எனது சிந்தனைக்கு ஏற்ப, இயக்குனர் சுசீந்திரன் எனது தயாரிப்பில் முதல் படம் இயக்குவதில் நான் பெருமை கொள்கிறேன். சுசீந்திரன் பழகுவதற்கு எளிமையானவர், சமூகத்தின் மீது பொறுப்பும் உள்ள இயக்குனர். சிறப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

“மாவீரன் கிட்டு’ தமிழ் சினிமாவின் சாதனைப் படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். ‘மாவீரன்’ என்பது தமிழர்களுக்கு ஒரு எழுச்சியை உண்டுபண்ணும் வார்த்தையாக இருக்கிறது. அதேசமயம் ‘கிட்டு’ என்கிற பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியிலும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிரபலமான பெயர். ஆனால் இந்த படம் பழனிக்கு அருகில் வாழ்ந்த ஒருவருடைய வாழ்க்கையின் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் உருவாகும் படம். கண்டிப்பாக மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும். மக்களுக்கு நெருக்கமான ஒரு படமாகவும் இருக்கும்.

“இயக்குனர் சுசீந்திரன், மற்றும் படக்குழுவினர் மிகவும் உற்சாகமாக படப்பிடிப்பில் பணியாற்றுகிறார்கள். ‘மாவீரன் கிட்டு’ மக்களை மகிழ்விப்பதோடு, பல விருதுகளையும் பெறும் படமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

“சுசீந்திரன் திறமையான இயக்குனர் மட்டுமல்ல. நல்ல மனிதர், தயாரிப்பாளர்களின் இயக்குனர். பண்போடும், அன்போடும் அனைவரையும் அரவணைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். விரைவில் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன், ‘மாவீரன்கிட்டு’வை” என்கிறார் ஐஸ்வர் வி.சந்திரசாமி.