நேற்று இந்த நேரம் – விமர்சனம்
நடிப்பு: ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், திவாகர் குமார், ஆனந்த், காவ்யா அமிர்தா, நிதின் ஆதித்யா, அரவிந்த், பாலா, செல்வா, கே.ஆர்.நவீன்குமார் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சாய் ரோஷன்.கேஆர்
ஒளிப்பதிவு: விஷால்.எம்
படத்தொகுப்பு: கோவிந்த்.என்
இசை: கெவின்.என்
தயாரிப்பு: ‘கிளாப்இன் ஃபிலிமோடைன்மெண்ட்’ கே.ஆர்.நவீன்குமார்
பத்திரிகை தொடர்பு: சதீஷ்வரன்
‘திரைப்பட ஜானர்’கள் எனப்படும் ’திரைப்பட வகை’களில், மிகவும் பிரசித்தி பெற்ற ஜானர் ‘கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்’. குற்றச்செயலைப் புலனாய்வு செய்து குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துவது’ என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்த ஜானரில் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இனியும் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகும். இப்படி எவ்வளவு படங்கள் வந்தாலும் இந்த ஜானர் சலிக்கவே சலிக்காது; சுவாரஸ்யம் குறையவே குறையாது. அதிலும், ‘Closed Buzzle Crime Investigation Thriller’ எனப்படும் ‘மூடுண்ட புதிரான கிரைம் புலனாய்வு த்ரில்லர்’ வகைக்கு எப்போதும் மவுசும், வரவேற்பும் அதிகமாகவே இருக்கும். காரணம், குற்றவாளி யார்? குற்றச்செயலில் ஈடுபட காரணம் என்ன? என்பன போன்ற எந்த க்ளூவும் இல்லாமல், கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரியான ஒரு நிலையில் புலனாய்வைத் தொடங்குவதும், தொடர்வதும் மிகப் பெரிய சவால்கள், இல்லையா? சவால்கள் நிறைந்த கதைக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கத் தானே செய்யும்! அத்தகைய சவால்கள் நிறைந்த, ‘Closed Buzzle Crime Investigation Thriller’ வகைப்பட்ட திரைப்படமாக வெளிவந்திருக்கும் ‘நேற்று இந்த நேரம்’ எந்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்? பார்ப்போம்…
நாயகன் நிகிலும் (ஷாரிக் ஹாசன்), நாயகி ரித்திகாவும் (ஹரிதா) காதலர்கள். அவர்கள் காதலிக்கத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆனதையொட்டி, அதை கொண்டாடுவதற்காக, தங்களது நண்பர்களான ஸ்ரேயா (மோனிகா ரமேஷ்), நித்யா (காவ்யா அம்ரிதா), ரோஹித் (திவாகர் குமார்), வேல்ராஜ் (ஆனந்த்), ஆதித்யா (நிதின் ஆதித்யா), ஹிருத்திக் (அரவிந்த்) உள்ளிட்டோருடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள்.
ஊட்டியில், கொண்டாட்டத்தினூடே, காதலர்களுக்கு இடையில் சச்சரவும், நண்பர்களுக்கு இடையில் சிறு மோதலும் ஏற்படுகின்றன. இந்த சச்சரவு மற்றும் மோதலுக்குப் பிறகு நாயகன் நிகில் திடீரென்று மாயமாகி விடுகிறார்.
நிகில் மாயமானது பற்றி நண்பர்களில் ஒருவரான ரோஹித் போலீசில் புகார் அளிக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வினய் (செல்வா), கான்ஸ்டபிள் ராதாகிருஷ்ணன் (பாலா) துணையுடன் நாயகனின் நண்பர்களிடம் விசாரணையைத் துவக்குகிறார். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, புகார் கொடுத்த ரோஹித்தும் திடீரென்று மாயமாகி விடுகிறார்.
மாயமான இரண்டு பேர் பற்றியும் இன்ஸ்பெக்டர் வினய் மேலும் விசாரிக்கும்போது, நண்பர்களிடமிருந்து பல்வேறு விஷயங்கள் வெளிவருவதோடு, ஊட்டியில், கருப்பு உடையும், வெள்ளை முகமூடியும் அணிந்த, பாம்பு ’பச்சை’ குத்திய ‘சீரியல் கில்லர்’ பற்றிய தகவலும் வெளிவருகிறது.
இறுதியில், நண்பர்கள் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டார்களா? அல்லது சடலங்களாக கண்டெடுக்கப்பட்டார்களா? அவர்கள் மாயமானதற்கு பின்னணியில் இருப்பது யார்? அவர்களின் ஒரு நண்பரா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்களா? அல்லது சீரியல் கில்லரா? காவல்துறை அதிகாரியின் விசாரணை சரியான திசையில் நகர்ந்து, சரியான இலக்கை அடைகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத சில திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘நேற்று இந்த நேரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் நிகிலாக ’பிக்பாஸ்’ புகழ் ஷாரிக் ஹாசன் நடித்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் தூள் பரத்தியிருக்கிறார். முதலில் நல்லவராகத் தோன்றி, பின்னர் சிக்கலான குணம் கொண்டவராக மாறும் கதாபாத்திரத்துக்குத் தன்னால் இயன்ற அளவு நியாயம் செய்திருக்கிறார்.
கிரைம் கதைகள் படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட நாயகி ரித்திகாவாக ஹரிதா நடித்திருக்கிறார். கதையில் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகன் – நாயகியின் நண்பர் ஸ்ரேயாவாக வரும் மோனிகா ரமேஷ், நித்யாவாக வரும் காவ்யா அம்ரிதா, ரோஹித்தாக வரும் திவாகர் குமார், வேல்ராஜாக வரும் ஆனந்த், ஆதித்யாவாக வரும் நிதின் ஆதித்யா, ஹிருத்திக்காக வரும் அரவிந்த் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினய்யாக வரும் செல்வா, கான்ஸ்டபிள் ராதாகிருஷ்ணனாக வரும் பாலா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எளிமையான மர்ம முடிச்சை இறுக்கமாகப் போட்டு, சஸ்பென்ஸ் எங்கும் அவிழ்ந்துவிடாதபடி விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் சாய் ரோஷன்.கேஆர். படத்தின் ஆரம்பத்தில் கிரைம் சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக வந்த நபர், படத்தின் இறுதியில் சீரியல் கில்லராக மாறி நிற்பது போன்ற பல எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையில் நுழைத்து, ரசிகர்களை பரபரப்புடன் சீட் நுனியில் அமர வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
விஷாலின் ஒளிப்பதிவும், கெவினின் இசையமைப்பும் கதையோட்டத்துக்கு வலு சேர்த்துள்ளன.
’நேற்று இந்த நேரம்’ – திரைக்கதை திருப்பங்களுக்காகப் பார்க்கலாம்!