இடி மின்னல் காதல் – விமர்சனம்

நடிப்பு: சிபி சந்திரன், பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா, ராதாரவி, பாலாஜி சக்திவேல், ஜெகன், ஜெயாதித்யா, வின்சென்ட் நகுல், மனோஜ் முல்லத் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பாலாஜி மாதவன்

ஒளிப்பதிவு: ஜெயச்சந்தர் பின்னம்னேனி

படத்தொகுப்பு: அந்தோணி

இசை: சாம் சிஎஸ்

தயாரிப்பு: ’பவகி எண்டர்டெயின்மெண்ட்’ ஜெயச்சந்தர் பின்னம்னேனி & பாலாஜி மாதவன்

பத்திரிகை தொடர்பு: டைமண்ட் பாபு & சதீஷ்குமார்

‘இடி மின்னல் காதல்’ என்ற தலைப்பு எதைக் குறிக்கிறது என்ற ஆவலுடன் படம் பார்க்க உட்கார்ந்தால், இண்டர்வெல் பிளாக்கில் தான் இதற்கான விடை கிடைக்கிறது. ’இடைவேளை’ விடுவதற்கு சில நொடிகளுக்கு முன், திரையை நெடுவாக்கில் மூன்று பாகங்களாகப் பிரித்து, முதல் பாகத்தில் வில்லன் படத்தைப் போட்டு ‘இடி’ என்றும், நடுபாகத்தில் வில்லனால் குறிவைக்கப்படும் சிறுவன் படத்தைப் போட்டு ‘மின்னல்’ என்றும், மூன்றாம் பாகத்தில் நாயகன் – நாயகி படத்தைப் போட்டு ‘காதல்’ என்றும் எழுத்துப் போடுகிறார்கள். இந்த மூன்று பாகங்களும் எந்தெந்த புள்ளிகளில் சந்திக்கின்றன? என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன? என்பது தான் ‘இடி மின்னல் காதல்’ திரைப்படத்தின் கதை.

0a1l

குற்றவுணர்வில் தவிக்கும் நாயகன் அரன் (சிபி சந்திரன்), சரண் அடைவதற்காக காவல் நிலையம் செல்ல எத்தனிப்பதாகவும், ‘வேண்டாம்’ என்று அவரை நாயகி ஜனனி (பவ்யா த்ரிகா) தடுக்க முயல்வதாகவும் பரபரப்பாக படம் ஆரம்பமாகிறது. என்ன நடந்திருக்கிறது என்றால், இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல இருக்கும் மனநல மருத்துவரான அரன், இரவில், சென்னையின் முக்கிய சாலையில், தன் காதலி ஜனனியுடன் பேசிக்கொண்டே காரை ஓட்டி வரும்போது, எதிர்பாராத விதமாக திடீரென குறுக்கே வந்த ஒரு நபர் மீது மோதிவிட, அந்த நபர் தூக்கி வீசப்பட்டு, ஸ்பாட்டிலேயே இறந்து போகிறார். இதை யாரும் பார்க்காத நிலையில், அங்கிருந்து அகன்றுவிடும் அரன், அதன்பிறகு குற்றவுணர்வு கொண்டு, காவல் நிலையம் செல்ல முடிவெடுக்க, அப்படி செய்தால் அமெரிக்கா செல்ல வேண்டிய அவரது வாழ்க்கை நாசமாகிவிடும் என்று அஞ்சும் ஜன்னி, தங்களது நண்பரான கார் மெக்கானிக் ராஜா (ஜெகன்) துணையுடன் அரனை காவல் நிலையம் செல்ல விடாமல் தடுத்துவிடுகிறார்.

மறுபுறம், கீழ் நடுத்தர வர்க்கக்  குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், ஹிருதேஷ் (மனோஜ் முல்லத்) என்ற சேட்டு வீட்டில், அவரது பத்து வயது மதிக்கத் தக்க மகன் அபி (ஜெயாதித்யா) பதட்டமாக காணப்படுகிறான். தாயில்லாப் பிள்ளையான அவன், வெளியே போன தன் அப்பா இன்னும் வீடு திரும்பவில்லையே என்று பதறுகிறான். நேரம் செல்லச் செல்ல பயமும் பதட்டமும் அதிகரித்து, கதறி அழுது, பின்னர் மன அழுத்தம் காரணமாக அழுவதையும், பேசுவதையும் நிறுத்தி இறுக்கமாகிறான்.

சிறுவன் அபியை வாஞ்சையுடன் பாதுகாத்துவரும் பக்கத்து வீட்டு பாலியல் தொழிலாளியான அஞ்சலி (யாஸ்மின் பொன்னப்பா), அவனை தேவாலய பாதிரியாரிடம் (ராதாரவி) அழைத்துச் செல்கிறார். பையனின் மனநலத்தை சரி செய்வதற்காக, அவனும், மனநல மருத்துவர் அரனும் சந்திக்க பாதிரியார் ஏற்பாடு செய்கிறார். அப்போது ரவுடியும், கந்துவட்டிக்காரரும், வக்கிர பாலியல் புத்திக்காரருமான அருள் பாண்டியன் (வின்செண்ட் நகுல்) சிறுவன் அபி மீது மோகம் கொண்டு, அவனது அப்பா ஹிருதேஷ் வாங்கிய கடனுக்காக அவனை கடத்திச் செல்ல முயலுகிறார்.

அபியை அருள்பாண்டியனின் கும்பலிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்லும் அரன், தனது நண்பர் மெக்கானிக் ராஜாவின் கார் ஷெட்டில் உள்ள ரகசிய அறையில் தங்க வைக்கிறார். இதனால், அரனுக்கும் அருள்பாண்டியனுக்கும் இடையே மோதல் முற்றுகிறது. இந்த மோதலில் வெற்றி பெறுவது யார்? தனது கார் மோதி உயிரிழந்தவர் தான் அபியின் அப்பா என்பது அரனுக்கும், தனது அப்பா உயிரிழந்ததற்கு அரன் தான் காரணம் என்பது அபிக்கும் தெரிய வரும்போது என்ன நடக்கிறது? திட்டமிட்டபடி அரன் அமெரிக்கா சென்றாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘இடி மின்னல் காதல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இளம் மனநல மருத்துவர், நாயகன் அரனாக சிபி சந்திரன் நடித்திருக்கிறார். விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் சொல்லிக்கொள்கிற மாதிரியான பாத்திரத்திலும், தமிழ் பிக்பாஸில் ரூ.12லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியவர் என்ற முறையிலும் ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள இவர், இந்த படத்தில் நாயகனாக நடித்து தனது கதாபாத்திரத்துக்கு இயன்ற அளவு நியாயம் செய்திருக்கிறார். எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்துவதில் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டால், தமிழ் திரையுலகில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வரலாம்.

நாயகனைக் காதலிக்கும் பணக்காரப் பெண்ணாக, நாயகி ஜனனி கதாபாத்திரத்தில் பவ்யா த்ரிகா நடித்திருக்கிறார். அழகாக இருக்கிறார். விபத்து குறித்த குற்றவுணர்வில் தவிக்கும் நாயகன், அதிலிருந்து வெளியே வர துணை நிற்பவராகவும், அவர் அமெரிக்க செல்ல வேண்டும் என்பதற்கு உதவுகிறவராகவும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தந்தையைத் தொலைத்துவிட்டு தவிக்கும் சேட்டு வீட்டுப்பையன் அபியாக ஜெயாதித்யா நடித்திருக்கிறார். கதையின் மையப்புள்ளியாக இருக்கும் அவர், மன அழுத்தத்துடன் இறுக்கமாக இருப்பது, தன் தந்தையின் சாவுக்கு நாயகன் தான் காரணம் என்பது தெரிந்தவுடன் பழி வாங்க வெறி கொள்வது என அனைத்து உணர்வுகளையும் பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

சிறுவன் அபியின் தந்தையாக, வாழ்ந்துகெட்ட பரிதாபத்துக்குரிய சேட்டு ஹிருதேஷ் வேடத்தில் வரும் மனோஜ் முல்லத், கருணையுள்ளம் கொண்ட பாலியல் தொழிலாளி அஞ்சலியாக வரும் யாஸ்மின் பொன்னப்பா, வக்கிர பாலியல் புத்தி கொண்ட வில்லன் அருள் பாண்டியனாக வரும் வின்செண்ட் நகுல், கார் மெக்கானிக் ராஜாவாக வரும் ஜெகன், பாதிரியாராக வரும் ராதாரவி, போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி, கதை வளர உதவியிருக்கிறார்கள்.

உளவியல் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இக்கதையை உருவாக்கி, விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் பாலாஜி மாதவன். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களை மிகச் சரியாக வேலை வாங்கியிருக்கிறார். வில்லனை பலவீனமாக இல்லாமல் வலிமையாக உருவாக்கி, அதன் போக்கில் கதையை கொண்டு சென்றிருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஜெயச்சந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு, காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறது. சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை வழக்கத்தை விட குறைவான சத்தத்தில் அளவோடு அடக்கி வாசித்திருக்கிறார்.

‘இடி மின்னல் காதல்’ – பார்க்கலாம்!