துருவங்கள் 16 – விமர்சனம்

2016ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்துள்ள போதிலும், இந்த ஆண்டின் முதன்மையான, முக்கியமான, மிரட்டலான படங்களில் ஒன்று ‘துருவங்கள் 16’. வழக்கமான மசாலாத்தனங்கள் இல்லாத நேர்த்தியான திரைக்கதை, அதிநவீன தொழில்நுட்பத்துடன் மிக நேர்த்தியான மேக்கிங் என அசத்தலாய் வியக்க வைத்திருக்கிறார், அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன்.

ஒரு கொலை, ஒரு விபத்து, ஒருவர் காணாமல் போவது என எல்லாமே ஒரு நாளின் 16 மணி நேரத்துக்குள் நடந்தால் அதன் கோணங்கள் என்ன என்பதே ‘துருவங்கள் பதினாறு’.

ஒரு கொலை நடந்த சம்பவம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ரகுமானுக்கு தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி யார் என்பதை தன் போலீஸ் குழுவுடன் புலனாய்வு செய்கிறார். அப்போது ஒரு விபத்து நடந்ததும், பெண் ஒருவர் காணாமல் போனதும் தெரிய வருகிறது. சந்தேகப்படுகிற, தெரிந்த எல்லோர் மீதும் விசாரணைப் படலம் தொடர்கிறது. ஆனால், அதற்கான புதிர்களுக்கான விடை 5 வருடங்களுக்குப் பிறகே கிடைக்கிறது. ஏன்? எதற்கு? எப்படி? என்பதற்கான பதில்களை திரைக்கதை மிக நேர்த்தியாய் சொல்கிறது.

ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கான கச்சிதத்துடன் கதை, திரைக்கதை அமைத்திருக்கும் அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேனை மேளதாளத்துடன் வரவேற்கலாம்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் ரகுமானுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், அவரது நடிப்பு அனுபவம், உடல் மொழி, விசாரிக்கும் விதம், போலீஸ் மொழியில் பேசும் லாவகம் என படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் தூக்கி நிறுத்துகிறார். டெல்லி கணேஷ் ஒரே காட்சியில் வந்து போனாலும் கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.

கான்ஸ்டபிளாக வரும் கௌதம், மூன்று நண்பர்கள், ராஜீவ், க்ரிஷ், ஸ்ருதி, வைஷ்ணவி, பேப்பர் போடும் இளைஞர் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

சுஜித் சாரங்கின் கேமரா ரத்தம் தெறிக்காத குற்றப் பின்னணியை, இருள், வெளிச்சத்தின் பல கோணங்களை சாதுர்யமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் கச்சிதம்.

பாடல் இல்லை, காதல் இல்லை, காமெடி இல்லை, பன்ச் வசனம் இல்லை. ஆனால் இதையெல்லாம் இல்லாமல் ரசிக்க வைக்கும் விதத்தில் பரபரப்பாக, விறுவிறுப்பாக கதை நகர்த்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

மூன்று விதமான மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் போதும் முன் பின் காட்சிகளை நகர்த்தும்போதும் அலுப்பு ஏற்படாமல், அதே சமயம் குழப்பம் ஏற்படாமல் காட்டியிருப்பதும், படத்துக்காக அவர் கொடுத்திருக்கும் டீட்டெய்லிங்கும் புத்திசாலித்தனம்.

‘துருவங்கள் 16’ – பரபர த்ரில்லர்; தமிழுக்கு புதுசு!