மோகன்லால் நிஜ கதையும், தனுஷின் “மேலூர் பெற்றோர்(!)” நிலையும்!

நிஜ வாழ்க்கை கதையொன்றை சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. 2011 என்று நினைக்கிறேன். ஒரு மதிய நேரத்தில் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போதெல்லாம் எவ்வளவு பிரியாணி சாப்பிட்டாலும் உடம்பு தாங்குகிற நிலையில் இருந்தது. நல்ல தூக்கத்துக்கான தருணத்தில்தான் அவ்வழைப்பு வந்தது. “என்னுடைய வாழ்க்கைக் கதையைப் பொறுமையாகக் கேட்க முடியுமா?” என எடுத்த எடுப்பிலேயே வேண்டுகோள் விடுத்ததால் அதற்கடுத்து காதுகளை மட்டும் திறந்து வைத்து அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானேன்.

அந்தத் தொலைபேசி அழைப்பிற்குச் சொந்தமானவருக்கு வயது அறுபது இருக்கும். அவருடைய பையன்கள் இருவரும் நல்ல வேலையில் வெளிநாட்டில் பணிபுரிகிறார்கள். “நானும் மனைவியும் மட்டும்தான்” என்றார். “தினமும் பையனிடம் ஸ்கைப்பில் பேசி விடுவேன்” என்றார். தெளிவான ஆங்கிலம் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்…

அவர் சின்ன வயதில் நெய்வேலியில் வேலை பார்த்திருக்கிறார். அப்போது அவருடைய அறைத் தோழராக அவரைவிட வயதில் இளையவர் ஒருத்தர் தங்கியிருந்திருக்கிறார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர். அந்த இளையவருக்கு அவரது தாய் என்றால் உயிர். அவரது தாய் அவரைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்த கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பாராம். அவருக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அப்போதே இருந்ததாம். ஒருநாள் 50 அடி உயரத்தில் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அந்த இளையவர் கால் தவறி கீழே விழப் போனபோது இவர் ஓடிப்போய் பிடித்தாராம். கீழே விழுந்தால் எலும்புகூட மிஞ்சாது என்கிற வகையில் கீழே முழுவதும் கற்கள் குவிந்து கிடந்தனவாம். இவர் அவரது உயிரை அந்த நேரத்தில் காப்பாற்றிய விஷயத்தை அவர் பணியில் இருந்த காலம் முழுவதும் சொல்லிச் சொல்லி நன்றி பாராட்டிக் கொண்டே இருப்பாராம். “என்றாவது ஒருநாள் உலகம் அறியும் ஒருவனாக நான் ஆவேன்” என அந்த இளையவர் சொல்லியபடி இருப்பாராம். “அதன்படி இப்போது ஆகியும் விட்டார்” என்று சொல்லி முடித்தார் அந்தக் கதையை.

எனக்குக் குறுகுறுப்பு தாங்கவில்லை. “யார் அது?” என்றேன். “நடிகர் மோகன்லால்தான் அது” என்றார். அடித்தது ஸ்கூப். ஒரு பத்திரிகையாளனைப் பொறுத்தவரை இதெல்லாம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற கேட்டகிரியில் வரும். உடனடியாக பதறியடித்து மோகன்லாலில் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்தோம். அப்போது அவர் ஒரு காட்டுப் பகுதியில் ஒரு ஷூட்டிங்கில் இருந்தார். போனை எடுத்தவர், நாங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு, “ப்ரேக்கில் அழைக்கிறேன்” என்றார். அதற்குள் இங்கே எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டோம். அந்த முதியவரை அழைத்து விஷயத்தைச் சொன்னோம். அவர் மோகன்லாலுக்கு தருவதற்காக நிறையப் பரிசுப் பொருட்களை வாங்கி வைத்திருப்பதாகச் சொன்னார். மோகன்லாலிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்பதற்காக நிறையக் கடிதங்களையும் எழுதி வைத்து அதை ஒரு புக்காகவே பைண்ட் செய்து வைத்திருந்தார்.

எல்லாமும் தயாராக இருந்த வேளையில்தான் மோகன்லாலிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்த எடுப்பிலேயே, “யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவீர்களா?” என்று கேட்டார். நமக்குத்தான் ப்ரேக்கிங் என்று வந்துவிட்டால், செக் செய்கிற பழக்கமே கிடையாதே? குட்டி யானை ஒன்று கிளம்பி வந்து நான்தான் ரஜினிக்கு சித்தப்பா என்று சொன்னால்கூட, ‘முதல்ல ப்ரேக்கிங்ல போட்டுரு. அப்புறம் ப்ரச்சினை வந்தால் மன்னிப்பு கேட்டுக்கலாம்’ என்கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் மோகன்லால் கேட்டவுடன் மூக்குடைபட்டதுபோல உணர்ந்தேன். உண்மையில் அவருக்கும் மோகன்லாலுக்கும் சம்பந்தமே இல்லையென்பது தெரிய வந்தது. அவர் சொன்ன காலத்தில் தான் கேரளாவில் இருந்ததாகப் புள்ளி விபரங்களையெல்லாம் பொறுமையாக விளக்கினார் மோகன்லால். ஆனால் ‘இவரும்கூட பொறுமையாக நிறையப் புள்ளி விபரங்களைச் சொன்னாரே’ என்று யோசனையாக இருந்தது. அப்புறம் அந்தப் பெரியவரின் மனைவியைத் தனியாக அழைத்துக் கேட்ட பிறகு அவர் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி விட்டார். அவர் மோகன்லாலை மட்டும் நண்பர் என்று சொல்லவில்லை. இடையில் மும்பையில் சில காலம் வேலை பார்த்ததால், சில மும்பை நடிகர்களையும் நண்பர் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கும் இதே மாதிரி கதை. இதே மாதிரி சம்பவங்கள்.

உண்மையில் அவரும் பாவம்தான். பிரபலங்களை நண்பர்களாகவோ, மனைவியாகவோ, மகனாகவோ கருதும் மனக் குழப்பங்களுக்கு ஆட்பட்டிருந்தார். அப்புறம் இது மாதிரி நிறைய அழைப்புகள் வந்திருக்கின்றன. “ரஜினியின் மனைவி” என்று சொல்லி கர்நாடகாவில் இருந்து ஒருத்தர் கிளம்பி வந்திருக்கிறார். “ஸ்ரீதேவியின் கணவர்” என்று சொல்லி ஒருத்தர் வந்திருக்கிறார். “கனகாவின் அக்கா நான்” என்று சொல்லி ஒருத்தர் வந்திருக்கிறார். கனகாவே ஒருகட்டத்தில் வேறு ஏதேதோ சொல்லியெல்லாம் வந்திருக்கிறார். “புகழ்பெற்ற தொழில் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் என்னுடைய பையன், சின்ன வயதில் தத்துக் கொடுத்து விட்டேன்” என்று சொல்லி ஒருத்தர் வந்து, அவருக்கு சார்பாகப் போய் மூக்குடைபட்டு திரும்பியிருக்கிறோம். இப்படி ஒரு இருபது கதைகளையாவது சொல்ல முடியும்.

இப்போது “தனுஷ் என்னுடைய பையன்” என்று சொல்லி வந்திருக்கிற செய்தியையும் பார்த்திருப்பீர்கள். அதற்காக நீதிமன்றத்தில் தனுஷ் ஆஜரான காட்சியையும் பார்த்திருப்பீர்கள். இது ஒரு வகையான மன அழுத்த குறைபாடுகளில் ஒன்று என மனநல மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.

அதனால் அவர்களுக்கு நாம் பரிதாபப்படுவதே சரியானது. அவர்களை நோக்கி முறைப்பதில் அர்த்தம் இல்லை. பகைமை பாராட்டுவதில் அர்த்தம் இல்லை. கடுமையான வறுமையில் இருக்கும் தம்பதியினருக்கு ஒரு மகன் முறையில் தனுஷ் ஏதாவது பொருளுதவி செய்தால் நன்றாக இருக்கும் என மனது விரும்புகிறது. மகன் என்று வாயார அழைத்து விட்டார்கள். தனுஷ் பெயரளவிற்காவது ஏதாவது உதவிகள் செய்யலாம், தப்பில்லை. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கக் கூடாதுதான். ஒரு மனிதாபிமான அடிப்படையிலான கோரிக்கைதான் இது.

அப்புறம், முடிக்கும்போது ஏதாவது சுவாரசியமாகச் சொல்லி முடிக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன். “இது என்னுடைய அக்கா பையன் என்று என்னைக் குறி வைத்து ‘சின்னம்மா’ முன்வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். மச்சமெல்லாம் காட்டாமல் உடனடியாக ஆமாமாமாம் என ஒத்துக் கொள்வேன். ஒரே பாட்டில் துணைப் பொதுச்செயலாளர் ஆகி, முதல்வர் ஆகி, தமிழ்நாட்டில் பாதிச் சொத்துக்களை வளைத்துப் போட்டு….

SARAVANAN CHANDRAN